Header Ads



புத்தளத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் எழுச்சிபெறுகிறது - ஏ.எல்.தவம்

(எஸ்.அன்சப் இலாஹி)

எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் புத்தள மாவட்டத்தில் மூன்று உறுப்பினர்களை வென்று மீள் எழுச்சி பெறவுள்ளது என, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார். புத்தள மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் ஒழுங்கமைப்புக் கூட்டம்  புத்தளத்தில் இடம்பெற்றபோதே மேற்படி கூறினார். மேலும், அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

 இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் புத்தளம் மாவட்டத்திற்கென்று மிக முக்கிய வகிபாகங்கள் உண்டு. முதலாவது முஸ்லிம் சபாநாயகர் ஐ.எச்.எஸ். உசைன் மற்றும் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் நிதி அமைச்சர்களை உருவாக்கி தந்ததில் தொடங்கி, வடக்கிலிருந்து ஒரேயிரவில் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அரவணைத்து இன்றுவரை வாழ இடம்கொடுத்த மகத்தான பங்களிப்பை வழங்கிவருவதை அறிவோம். எனினும், புத்தள மாவட்ட முஸ்லிம்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதானது, முஸ்லிம்கள் அரசியல்ரீதியாக பிளவுபட்டிருப்பதேயாகும். அந்த வரலாற்றுத் தவறை சரிசெய்து புத்தள மாவட்ட முஸ்லிம்கள் ஒரு அணியில் திரள்வதினூடாக, தமது அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்ள முடியும். அதற்கு, இன்றைய பௌத்த பேரினவாத அரசியல் சூழலில் முஸ்லிம் காங்கிரசைத் தவிர வேறு தெரிவுகள் இருக்க முடியாது. ஏனெனில், முஸ்லிம்களின் தனித்துவமான கட்சியாக மு.காவே காணப்படுகிறது.

மேலும், பௌத்த பேரினவாத சக்திகளின் எழுச்சியும், அவர்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளும் மேலோங்கியிருக்கும் இன்றைய நிலையில் அரசும் பாராமுகமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் மிகப் பலவீனமான நிலையில் காணப்படுகிறது. இந்த இக்கட்டான அரசியல் நிலவரத்தை எதிர்கொண்டு முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமானால் அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்த ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதையே மு.கா இன்று உங்களிடம் முன்வைக்கின்றது.

புத்தள மாவட்டத்தில், சுமார் எண்பதுநாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தும், நாமின்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கின்றோம். ஏனெனில், எமது வாக்குகள் பேரினவாத கட்சிகளிடம் பங்கிடப்பட்டதனால் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கிறோம். இன்று வன்முறை சார்ந்த அரசியல் போராட்டங்கள் அனைத்தும் தோல்விடைந்திருக்கின்றது. கடந்த காலங்களில் ஜே வி பி போன்ற சிங்கள வன்முறைப் போராட்டங்களும், தமிழர் வன்முறைப் போராட்டங்களும் நமாறிந்த உதாரணங்களாகும். இவை தோல்வியடைந்த நிலையில், ஜனநாயக ரீதியானதும், மென்மையான அரசியல் மற்றும் கருத்து நிலைப் போராட்டங்களை தேர்வு செய்து செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தீர்க்க தரிசனமிக்க நமது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்கள் ஒருபோதும் வன்முறை சார்ந்த அரசியல் போராட்டத்தை தேர்வு செய்துவிடக்கூடாது என்றும், அதனால் எதையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் இலங்கை அரசியல் வெளியில் இல்லை என்றும் எப்போதோ உணர்ந்து கொண்டதன் விளைவாகவே நமது அரசியல் இயக்கமான மு.காவை உருவாக்கி அதன் பக்கம் மக்களை அணிதிரட்டினார். ஆகவே, எப்போதும் தனித்துவமான ஜனநாயக அரசியல் இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே இருந்துவந்திருக்கிறது. 

இன்று பேரினவாதக் கட்சிகள் தொடங்கி சிறிய விளையாட்டுக் கழகங்கள் போன்ற கட்சிகளிலிருந்தும் பிரிந்து மக்கள்  சாரிசாரியாக திரண்டு வந்து முஸ்லிம் காங்கிரசில் இணைந்துகொள்ளுவதைப் பார்க்கும்போது, ஆண்டுகள் பல கழிந்தபோதும், பெருந்தலைவரின் தீர்க்க தரிசனமிக்க ஜனநாயக வழிமுறைகளின் மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதன் நெருக்குவாரங்களும் வித்தியாசமானவை. அதுபோல, அந்தப் பிரச்சினைகளின் வடிவங்களும் வித்தியாசமானவை. ஹலால் பிரச்சினை, பள்ளிவாயல் உடைப்பு போன்ற மதம் தொடர்பான சிக்கல்களும், பதின்மூன்றாம் திருத்தச் சட்ட விவகாரம் போன்ற அரசியல் பிரச்சினைகளும் எம்முன்னே இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகளும் அதன் வடிவங்களும் பேரினவாதச் சக்திகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் முஸ்லிம்களை சிக்கல்களுக்கும், மனோரீதியான உளைச்சல்களுக்குள்ளும் உட்படுத்துபவை. இவைகளை எதிர்கொள்ளுவதற்கு நவீன அரசியல் பொறிமுறை அவசியமானதாகும். அத்தோடு, இரட்டிப்புப் பொறுமையும் சிந்தனையும் மிக அவசியமானதாகும். 

பிரச்சினையை விட்டு ஒதுங்கிக்கொள்ளாமல், அந்தப் பிரச்சினைகள் தொடர்பில் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் ஆளும் தரப்பிடம் பேசவும் நமது எதிர்ப்புக்களை தெரிவிக்கவும் வேண்டியிருக்கிறது. அதனால்தான், நமது தேசியத் தலைவர் அமச்சரவையினுள்ளும் வெளியில் மக்கள் பரப்பிலும் மிகக் கடுந்தொனியிலான எதிர்க்குரலை வெளிப்படுத்தி நிற்கின்றார். இதனால், பேரினவாத சக்திகளும், அரசுக்குள்ளிருக்கும் பேரினவா அடிப்படைவாதிகளும் நமது தலைவரை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர். எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்த்தும், ஆதரிக்க வேண்டிய இடத்தில் இணைந்தும் செயற்படும் மிக நாகரீகமானதும், நவீனமானதுமான ஒரு அரசியல் வழிமுறையை எமது தலைவர் கடைப்பித்துக்கொண்டிருக்கிறார். 

எனவே, இந்த அரசியல் விடுதலைப் பயணத்தில் உங்கள் பங்களிப்பே மிக முக்கியமான ஒன்றாகும். இன்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு தேர்தல்தான் இந்த மாகாண சபைத் தேர்தல். இந்தத் தேர்தலில் முஸ்லிம்காளகிய நாம் நமது பலத்தையும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் நாங்களும் வசிக்கிறோம். எமது மத மற்றும் அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கேட்பதற்கு, நமது ஒருமித்த வாக்குப்பலமும் அதனூடாக கிடைக்கப் போகும் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையுமே மிக அவசியமானதாகும். நமது வாக்குகளை பிரித்து வேறு வேறு கட்சிகளுக்கு பகிர்ந்தளிப்பதினூடாக இழக்கப் போவது நமது அரசியல் பிரதிநிதித்துவத்தை மாத்திரமல்ல. அரசியல் பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இங்கு முஸ்லிம்கள் வாழவில்லை என்ற ஒரு மோசமான மாயை ஏற்படுத்திவிடும் அப்படி நடந்துவிடுமெனில், பேரினவாத பௌத்த அடிப்படைவாதிகள் நம்மீது அதிகாரம் செலுத்த நாமே வாய்ப்பெடுத்துக் கொடுத்ததாக ஆகிவிடும்.

இவைகளைக் கருத்திற்கொண்டு யோசித்தால், முஸ்லிம் காங்கிரசைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் இந்தத் தேர்தலில் ஆதரிப்பதென்பது நமக்கு நாமே குழி வெட்டுவதாகவே முடிவடைந்துவிடும் என மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் மேலுமகுறிப்பிட்டார். 

2 comments:

  1. Alhamthulillah
    How is this change!
    The mouth which cursed Ashraff is now praising !!!
    We can't achieve anything from being in this government !!!!
    So should come out

    ReplyDelete
  2. முடிவு நல்லதாக அமைய பிரார்த்திக்கிறேன் .

    ReplyDelete

Powered by Blogger.