Header Ads



கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் - மற்றொரு கறுப்பு ஜூலைக்கான ஆரம்பமா..?

(லதீப் பாரூக்)

கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது. குறித்த பிரதேசத்தையும், முழு நாட்டையுமே கூட கொலைக்களமாக மாற்றி விடுகின்ற அபாயகரமான சகல அம்சங்களையும் இப்பிரச்சினை கொண்டிருந்தது. 

அருகில் இருந்த போதி மரம் வெட்டப்பட்டமை, விகாரை உபதேச மண்டபத்தில் தொழுகை நடாத்துவதற்கு முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டமை உள்ளடங்கலாக, பௌத்த சமூகத்தால் காட்டப்பட்ட தூர நோக்கும், தாராள மனப்பான்மையும் கொண்ட சமிக்ஞைகள் முஸ்லிம்களாலும், சமாதானத்தை விரும்புகின்ற பிரஜைகள் ஒவ்வொருவராலும் விதந்து நோக்கப்பட வேண்டியதாகும்,  

பௌத்த கடும்போக்குவாதக் கருத்து முகாமைச் சேர்ந்த சிறியதொரு குழுவினர், பள்ளிவாயல்கள், முஸ்லிம் வியாபாரங்கள் மீது தாக்குதல்களையும், மைய நீரோட்ட சிங்கள சமூகத்தின் மனங்களில் விஷத்தைக் கலக்கின்ற வகையில் தொடர்ந்தேச்சையான முஸ்லிம் விரோதப் பிரசாரத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில், இச்சமிக்ஞைகள் காலத்தின் தேவையாகும்.   

தாக்குதலுக்குப் பிறகு, சமாதானமான தீர்வு சாத்தியமாகி இருக்கிறதென்றால், வன்முறை இல்லாமலும் இது சாத்தியமாகி இருக்க முடியும். மஹியங்கனைப் பள்ளிவாயல் தாக்கப்பட்ட சில வாரங்கள் கழிந்த நிலையிலேயே கிராண்பாஸ் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.   

1915 இல் இடம்பெற்ற சிங்கள- முஸ்லிம் இனக் கலவரத்தின் ஓராண்டை நினைவு கூறும் வகையில், 1983 ஜூலை தாக்குதலை ஒத்த தாக்குதல் ஒன்றை முஸ்லிம்களுக்கு எதிராகவும் நடாத்துவதற்கு இவ்வினவாதிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகம் முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் காணப்படுகிறது.      

மூன்றாண்டுகளுக்கு முன்னர் ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் கிறீஸ் பூதங்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட பாதிப்பை சந்தித்தார்கள். பிறகு பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே, நானூறு ஆண்டுகள் பழமையான அநுராதபுரம் தர்கா தகர்க்கப்படுகிறது. பிறகு தம்புள்ளை பள்ளி விவகாரம் ஆரம்பிக்கிறது. பிறகு தொடர்ந்தேச்சையாக இடம்பெற்று வருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் நாட்டின் முஸ்லிம் சமூகத்தினர் மனதில் ஆழமான ஏமாற்ற உணர்வைத் தோற்றுவித்துள்ளது.     

சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டுள்ள இவ்வினவாதிகள், அராசாங்கத்திற்குள் ஓர் அரசாங்கமாக செயற்பட்டு வருகிறார்கள். முஸ்லிம் ஒருவரின் படத்தை பன்றியொன்றின் முகத்தோடு, அரபு மொழியில் அல்லாஹ்வின் பெயர் பொறிக்கப்பட்ட நிலையில் வரைகின்ற அளவுக்கு இழி வேலைகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.    

முஸ்லிம் உணர்வுகளைக் காயப்படுத்துகின்ற இவ்வொவ்வொரு செயற்பாட்டின் போதும், முஸ்லிம்கள் அமைதி காத்தார்கள். இன்று கையாலாகா உணர்வும், ஏமாற்ற உணர்வும் முஸ்லிம் சமூகத்தில் வளர்ந்து வருகிறது. இக்குற்றங்களை இழைக்கின்ற குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொலிஸாரின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வெறுப்புணர்வைத் தோற்று வித்துள்ளன. 

இத்தாக்குதல்களைக் கண்டிப்பதற்கு அரசாங்கம் தவறி வருகின்றமையும் முஸ்லிம்கள் மத்தியில் ஏமாற்ற உணர்வைத் தோற்றுவித்துள்ளது. வடக்கில் சிங்கள ராவய விகாரை தாக்கப்பட்ட போது, தாக்குதல் நடாத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு பேரினவாத அரசியல்வாதிகள் பலர் குரல் எழுப்பிய போது, முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து மாத்திரம் அமைதி காப்பது ஏன் என்பதே தற்போது எழுகின்ற கேள்வியாகும். 

வெறுப்பும், அச்சமும் சூழந்து முஸ்லிம்களின் உணர்வுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. முப்பதாண்டு கால சிவில் யுத்த காலத்திலும் முஸ்லிம்கள் எல்லா விதமான துன்பங்களையும் அனுபவித்தார்கள். அரச, தனியார் தொழில்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. பொலிஸ், இராணுவம் போன்ற துறைகள் கூட கதவடைப்பு செய்யப்பட்டன. இவ்விதம் துன்பங்களை அனுபவித்தவர்களை இலக்கு வைத்தே தற்போது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் புதிய அத்தியாயமே கிராண்பாஸ் ஆகும்.              

நோன்புப் பெருநாளைக் கொண்டாடி அடுத்த நாள், கிராண்ட் பாஸ் சுவர்ண செட்டித் தெருவில் மஃரிப் தொருகைக்காக (சூரிய மறைவின் பின்னர் நிறைவேற்றப்படும் தொழுகை) சனிக் கிழமை, ஆகஸ்ட் 11 ஆம் திகதி பள்ளிவாயலில் ஒன்று சேர்ந்தனர்.      

தொழுகை நடாந்து கொண்டிருந்த போது, வருகை தந்த இனவாத ரவுடிக் கும்பலொன்று, வணங்கிக் கொண்டிருந்தவர்களை தாக்க ஆரம்பித்தனர். ஏற்கனவே, இப்பிரதேசத்தில் பதட்டம் இருந்ததாலும், அதிகாலையில் இருந்தே பாதுகாப்பிற்காக சுமார் ஐம்பது பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்ததாலும், இத்தாக்குதல் எதிர்பாராத ஒன்று என்று சொல்லி விட முடியாது.       

மீடியாக்கள் குறிப்பிடுகின்ற தரவுகளின் படி, பெண்கள், பிக்குகள் உள்ளடங்கலாக இரு நூறுக்கும் அதிகமானவர்களை பள்ளிவாயலைத் தாக்குவதற்காக வருகை தந்துள்ளனர்.      

காத்தது போதும். பொலிஸார் எம்மைப் பாதுகாக்கும் கடமையை செய்ய மாட்டார்கள். நாமே எம்மைப் பாதுகாத்துக் கொள்வோம் என்ற உணர்வு முஸ்லிம்களுக்கு வந்தது. தவிர்க்க இயலாமல் இங்கு எழுகின்ற கேள்வி, ரவுடிக் கும்பலை கைது செய்யாமல் பொலிஸாரைத் தடை செய்த அம்சம் எது என்பதுதான்.       

கிராண்ட்பாஸ் தாக்குதல் குறித்தும் ஆகஸ்ட் 12, 2013 அன்று முஸ்லிம் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.    “கிராண்ட்பாஸ் ஸுவர்ண செட்டி வீதியில் இருக்கின்ற மூன்று மாடிக் கட்டிடம் சட்ட விரோதமானது என்று காரணம் சொல்லியே பள்ளிவாயல் மீதான தாக்குதல் இடம்பெற்றது. எவ்வாறாயினும், 166 ஆம் இலக்கத்தில் இருக்கின்ற பழைய பள்ளிவாயல் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட பிறகு, 158 ஆம் இலக்கத்தில் இருக்கின்ற புதிய கட்டிடத்தில் இயங்குவதற்கான அனுமதியை புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சிடம் இருந்து பள்ளி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டிருந்தனர். கடும்போக்குவாத அமைப்பொன்றைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலரால் வழிநடாத்தப்பட்ட 50-60 வரையான ரவுடிக் கும்பல் சூரிய மறைவுத் தொழுகை ஆரம்பித்து ஐந்து நிமிடம் அளவில் பள்ளிவாயலை நோக்கிக் கற்களை வீச ஆரம்பித்தனர். பிறகு இத்தொகை இருநூறாக அதிகரித்தது. பள்ளிவாயலோடு இணைந்தாற் போல் இருக்கின்ற விகாரையில் ஒலித்த மணியே தாக்குதலுக்கான சமிக்ஞையாக இருந்தது. இருபது, இருபத்தைந்து பேர் மூடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். தொழுகை நடாத்திக் கொண்டிருந்த முஹம்மத் அர்ஷாத் மௌலவியும், ஏனைய மூத்தவர்களும் முதலாம், இரண்டாம் மாடிகளில் தொழுது கொண்டிருந்தவர்களை மேல் மாடிக்கு அனுப்பினார்கள். கீழ் மாடியில் இருந்த இளைஞர்கள் இருவரும், வயோதிபர்கள் மூவரும் ரவுடிகளால் மோசமாகத் தாக்கப்பட்டுக் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். 

ஸ்தளத்தில் இருந்த நாற்பது பொலிஸாருக்கு மேலதிகமாக தாக்குதல் தொடரத் தொடர, கூடுதலான பொலிஸார் ஸ்தளத்திற்கு வந்து கொண்டிருந்தாலும், அவர்கள் பார்வையாளர்களாக இருந்தார்களே அல்லாமல், எந்த விதமான கைதுகளையும் மேற்கொள்ளவில்லை.  
  
தாக்குதல் பற்றிய செய்தி பரவியதும், அப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் பள்ளிவாயலுக்கு விரைந்தார்கள். இவர்களில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உத்தியோகத்தர்களும், மூத்தவர்களும் இணைந்து, ரவுடிகளைக் களைத்து, பள்ளிவாயலைப் பாதுகாக்குமாறு பொலிஸாரிடம் வேண்டிக் கொண்டார்கள். ஆனால், பதிலாக பொலிஸார் முஸ்லிம்களையே களைந்து போகச் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். 

மேலும், மேலும் பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில், முஸ்லிம் தலைவர்கள் ரவுடிகளை  களைந்து செல்லச் செய்யும் படியும், ரவுடிக் கும்பலின் தலைவர்களைக் கைது செய்யுமாறும் வேண்டிக் கொண்ட போதிலும், முஸ்லிம்கள் ஸ்தலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றே உயர் பொலிஸ் அதிகாரிகள் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பள்ளிவாயலை உடைத்துத் தகர்க்க முயற்சி செய்து கொண்டிருந்த கூட்டம் கலைக்கப்பட்டோ, கைது செய்யப்பட்டோ, பள்ளிவாயலின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்படாத வரை, அங்கிருந்து நகர முடியாது என முஸ்லிம்கள் உறுதியாக மறுத்து விட்டார்கள்.        

பிறகு பெருமளவிலான முஸ்லிம் வாலிபர்கள் பொலிஸாரின் உதவியோடு, ரவுடிக் கும்பலை கலைந்து போகச் செய்து, பள்ளி வாயலைப் பாதுகாப்பதில் வெற்றி பெற்றார்கள். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலை ஏழு மணி வரையும், பிறகு மாலை ஆறு மணியில் இருந்து, திங்கள் காலை ஏழு மணி வரையும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.    
     
இதே வேளை அடுத்த நாள், ஆகஸ்ட் 11 ஆம் திகதி, புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தரவு வாபஸ் பெறப்படுவதாகவும், 166 இம் இலக்கத்தில் அமைந்திருந்த பழைய மல்வத்தப் பள்ளிவாயல் திருப்பி வழங்கப்படும் எனவும், எல்லைக்குள் இருக்கின்ற போதி மரம் அகற்றப்பட்டு, பள்ளி வாயலை விஸ்த்தரிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது”.            
அனைத்துக்கும் மேலாக தாக்குதல் நடாத்தியவர்கள் தாம் பௌத்த மதத்திற்கும், நாட்டில் வாழ்கின்ற பௌத்தர்களுக்கும் எத்தகைய அப கீர்த்தியை ஏற்படுத்துகிறார்கள் என்பதனை உணர்ந்து கொள்ளவில்லை. இவ்வினவாதிகள் மாத்திரம்தான் பௌத்த தர்மத்தின் ஏக உரிமையாளர்கள் அல்லர். பௌத்த மதத்தினதும், சிங்கள சமூகத்தினதும் காவலாளிகளாகத் தம்மைக் கருதும் இவ்வினவாதிகள் முஸ்லிம்களையும், பள்ளிவாயல்களையும், முஸ்லிம் வியாபார நிறுவனங்களையும் தாக்குவதன் மூலம் ‘நிர்வாண நிலையை’ அடைய முடியும் என்று கருதுகின்றார்களோ என்னவோ!

மதுபான சாலைகள், சூதாட்ட விடுதிகள், மற்றும் பௌத்த தர்மத்திற்கு முரணாக இயங்குகின்ற ஏனைய இடங்கள் தொடர்பில் இவர்கள் கரிசணை செலுத்தி இருக்கிறார்களா? இல்லாவிட்டால், இவர்களுக்கு பௌத்தம் குறித்தோ, சிங்களவர்கள் குறித்தோ எந்தக் கவலையும் இல்லை. மாறாக அரசியல் நோக்கத்தோடு, முஸ்லிம்களுக்கு எதிராகனதொரு தாக்குதலை நியாயப்படுத்தும் வகையிலானதொரு சூழலை உருவாக்குவதற்கும், அதற்கு இசைவாக சிங்கள சமூகத்தவர்களின் மனங்களில் விஷத்தைப் பாய்ச்சுவதுமே இவர்களின் நோக்கம் என்றே கருத வேண்டியுள்ளது. பெரும்பாலும் தமது வெளிநாட்டு எஜமானர்களைத் திருப்தி செய்வதற்காகவே இவர்கள் இவற்றையெல்லாம் செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.   

கவலை தருகின்ற விடயம் யாதெனில், முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும் அதிகாரிகள் இதுவரை கண்டிக்கத் தவறி இருக்கின்றமைதான். மாறாக தாக்குதல்களில் ஈடுபடுவோரைப் பாதுகாத்து, அரவணைக்கின்ற வகையிலான செயல்பாடுகளே தற்போது இடம்பெற்று வருகின்றன.  முஸ்லிம்களினதும் மைய நீரோட்ட சிங்களவர்களினதும் கோரிக்கை யாதெனில், நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம், அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான்.  

No comments

Powered by Blogger.