Header Ads



வெலிவேரிய தாக்குதல் - குற்றம் காணப்பட்டால் யாராக இருந்தாலும் நடவடிக்கை

வெலிவேரியவில் போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை பயன்படுத்தி, இராணுவத்தின் மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் அழைப்புகளைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. 

வெலிவேரிய சம்பவம் தொடர்பாக, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐதேக விடுத்துள்ள கோரிக்கை குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், 

“போராட்டம் நடத்தியவர்கள் மீது படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சூழ்நிலை தொடர்பாக, இராணுவத் தலைமையகமும், காவல்துறையும் தனித்தனியாக விசாரணைகளை நடத்தி வருகின்றன.  காவல்துறைமா அதிபர் இலங்ககோன் பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரிடம், விடுத்த வேண்டுகோளை அடுத்தே, இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. 

அவசரகால நிலையில், பாதுகாப்புப் படைகளை நிறுத்துவது தொடர்பான நடைமுறையே பின்பற்றப்பட்டது.  துரதிஸ்டவசமாக அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதும், படையினர் பதிலடியில் இறங்கினர்.  விசாரணைகளில் எவர் மீதேனும் குற்றம்காணப்பட்டால், யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.  படையினரின் தனிப்பட்ட செயல்கள், ஒட்டுமொத்த இராணுவத்தினதும் பெயரைக் கெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. 

ஜனாதிபதியையும், படையினரையும், , வெறுக்கும் சக்திகளின் தந்திரோபாயத்தை நாம் அறிவோம்.  அனைத்துலக விசாரணைக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு, படைகளுக்கு எதிரான அனைத்துலக போர்க்குற்ற விசாரணை அழைப்புக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது.

போர் முடிவுற்ற பின்னர்., படையினர் மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியவர்கள், வெலிவேரிய சம்பவத்தை பயன்படுத்தி, தமது கோரிக்கையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். 

நந்திக்கடலில் நடந்த விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போருடன், வெலிவேரிய சம்பவத்தை ஒப்பிடுவதற்கு எதிர்க்கட்சிகள் மேலதிக நேரத்தை ஒதுக்கியுள்ளன.  இவையிரண்டுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.