"நாங்கள் எமது சொந்த இடத்தில் அந்நியர்கள் போல் வாழவேண்டிய நிலையேற்படும்" மன்சூர்
(VAIBHAV VATS + நித்தியபாரதி)
"அம்பாந்தோட்டையானது சகல வசதி வாய்ப்புக்களும் உள்ள ஒரு உயர் தரம்மிக்க நகராக மாற்றுவதற்கு எவ்வளவு காலம் தேவை?" என நான் தாசிமிடம் வினவியபோது, "20 ஆண்டுகள் வரை செல்லும்" என அவர் பதிலளித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்வரை, சிறிலங்காவின் தென்மத்திய பகுதியில் உள்ள அம்பாந்தோட்டையானது பிரபலமற்ற ஒரு நகரமாகக் காணப்பட்டது. சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலிருந்து 118 மைல்கள் தொலைவிலுள்ள அம்பாந்தோட்டையின் சனத்தொகையானது கிட்டத்தட்ட 10,000 வரையாகக் காணப்பட்டது.
இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில்கள் விவசாயம் மற்றும் மீன்பிடியாகக் காணப்பட்டன. ஆனால் அம்பாந்தோட்டையைச் சொந்த இடமாகக் கொண்ட மகிந்த ராஜபக்ச 2005ல் சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர், இந்த இடத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
மிகவும் அமைதியாக இருந்த தனது சொந்த இடமான அம்பாந்தோட்டையை மிகவும் நவீனமான, தொழிற்பேட்டை நகரமாக மாற்ற வேண்டும் என்பது ராஜபக்சவின் கனவாக இருந்தது. கொழும்பு போன்ற தரம்மிக்க நவீன மயப்படுத்தப்பட்ட நகரமாக மாற்றுவதே சிறிலங்கா அதிபரின் நோக்காக காணப்பட்டது. இதற்கமைய, 210 மில்லியன் டொலர்கள் செலவில் அனைத்துலக விமானநிலையம் ஒன்றை 2000 ஹெக்ரேயர் பரப்பில் அமைப்பதுடன், கப்பற்துறை ஒன்றை உருவாக்குவதற்கு 360 மில்லியன் டொலர்களைச் செலவிடுவது என்பதும் மகிந்த ராஜபக்சவின் திட்டமாகக் காணப்பட்டது.
உலகக் கோப்பைக்கான துடுப்பாட்ட ஆட்டத் தொடர் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக நான் 2011ல் அம்பாந்தோட்டைக்குச் சென்ற போது, அங்கு அனைத்துலக விமான நிலையம் மற்றும் கப்பற்துறை போன்றவற்றின் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன.
2011ல் உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்ற பங்களாதேஸ், சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 நகரங்களில் அம்பாந்தோட்டையானது பெரிதும் பேசப்பட்ட ஒரு நகரமாகக் காணப்பட்டது. அம்பாந்தோட்டையானது உலகில் தரம்மிக்க ஒரு நகரமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாக கொழும்பு பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.
அம்பாந்தோட்டையில் உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி இடம்பெற்ற விளையாட்டரங்கின் வேலிக்கருகில் யானைகள் நின்றிருந்தன. இவ்வாறான ஒரு கிராமத்தில் சிறிலங்கா அதிபர் துடுப்பாட்டப் போட்டியை நடாத்தத் தீர்மானித்தது என்பது முதன்மையான செய்தியாகக் காணப்பட்டது.
லியனோர்ட் வூல்ப் Leonard Woolf சிறிலங்காவின் தென்நகரமான அம்பாந்தோட்டைக்குப் பயணம் செய்து சரியாக 100 ஆண்டுகளின் பின்னர் நான் அம்பாந்தோட்டைக்குச் சென்றிருந்தேன். திரு.வூல்ப் கொலனித்துவ சிலோன் சிவில் சேவையில் அவரது 24வது வயதில் இணைந்திருந்தார். யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய இடங்களில் தனது சேவையைப் புரிந்த வூல்ப், 1908ல் பிரதம நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்று அம்பாந்தோட்டைக்கு முதன்முதலாக வருகை தந்திருந்தார். இவர் ஒரு ஆர்வம் மிக்க, செயல்வலு மிக்க ஒரு அரச சேவையாளன் ஆவார். இவர் தனது சேவையை ஆற்றுவதற்காக ஈருருளியில் bicycle பயணம் செய்தார். இவர் அம்பாந்தோட்டையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்ததன் பின்னர், 1911ல், பிரித்தானியாவுக்குப் பயணம் செய்ததுடன், தனது பணியிலிருந்தும் விலகிக் கொண்டார்.
1913ல், திரு.வூல்ப் 'The Village in the Jungle' என்கின்ற நாவலை எழுதியிருந்தார். அதில் அம்பாந்தோட்டையில் தான் பணிபுரிந்த காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும் எழுதியுள்ளார். 30 வயதாக இருந்த விர்ஜினியா ஸ்ரீபன் Virginia Stephen என்பவரை 1913ல் திருமணம் செய்து கொண்ட திரு.வூல்ப் தான் எழுதிய அந்த நாவலை தனது மனைவிக்கு அர்ப்பணம் செய்தார்.
இவ்வாறான ஒரு வரலாற்றுச் சூழலில், சரியாக ஒரு நூற்றாண்டுக்கு அப்பால், நான் அம்பாந்தோட்டைக்குப் பயணித்திருந்தேன்.
அம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சம்மேளனத் தலைவரான அஸ்மி தாசிம் என்பவரை நான் சந்தித்தேன். கிட்டத்தட்ட 50 வயதாக இருந்த திரு.தாசிம், என்னுடன் தனது வேலைகள் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். திரு.தாசிமுக்கு நீண்ட காலமாக திரு.ராஜபக்சவைத் தெரியும். தாங்கள் இருவரும் அம்பாந்தோட்டையில் வளர்ந்ததாகவும், திரு.ராஜபக்சவும் திரு.தாசிமின் மனைவியும் சட்டவாளர்களாகப் பணியாற்றியதுடன், இருவரும் நண்பர்களாவர். வாரயிறுதிகளில் ராஜபக்சவுடன் துடுப்பாட்டம் விளையாடுவது தொடர்பாக தாசிம் நினைவு கூர்ந்தார்.
"நாங்கள் இருவரும் இணைந்து அடிக்கடி மதிய உணவு உண்போம். அடிக்கடி நாங்கள் நீச்சலுக்குச் செல்வோம்" என தாசிம் கூறினார். அதன்பிறகு, தனக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான நெருக்கம் குறைந்ததாகவும், தாசிமிடம் நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது கூறினார்.
"திரு.ராஜபக்ச ஒரு சண்டைக்காரன். அவர் எப்போதும் கடும்போக்காக நடந்து கொள்கிறார். ஆனால் அவர் எப்போதும் பொதுவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்" என தாசிம் கூறினார்.
திரு.ராஜபக்ச இவ்வாறு சிறிலங்கா அதிபராக வருவார் என எப்போதாவது நீங்கள் நினைத்ததாக திரு.தாசிமிடம் வினவியபோது, "ஒருபோதுமில்லை. ராஜபக்ச ஒரு அமைச்சராகவோ அல்லது ஒரு மூத்த அரசியல்வாதியாகவோ வருவார் எனக் கருதினேன். ஆனால் ஒருபோதும் இவர் நாட்டின் அதிபராக வருவார் என நான் நினைக்கவில்லை. இது அவருக்கான நல்வாய்ப்பாகும்" என தாசிம் மேலும் குறிப்பிட்டார்.
அம்பாந்தோட்டைக்கு நான் பயணம் செய்திருந்த போது, துடுப்பாட்ட விளையாட்டரங்கம் மட்டும் முற்றாகப் பூர்த்தியாக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விளையாட்டரங்கானது அம்பாந்தோட்டையின் பட்டிணத்தில் அமைக்கப்படாது, இப்பட்டிணத்திலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சூரியவௌ என்கின்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததானது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விளையாட்டரங்கிற்கு காடுகளின் ஊடாகச் செல்கின்ற வழியில் பயணிக்க வேண்டியிருந்தது.
"அம்பாந்தோட்டையானது சகல வசதி வாய்ப்புக்களும் உள்ள ஒரு உயர் தரம்மிக்க நகராக மாற்றுவதற்கு எவ்வளவு காலம் தேவை?" என நான் திரு.தாசிமிடம் வினவியபோது, "20 ஆண்டுகள் வரை செல்லும்" என அவர் பதிலளித்தார். "சிறிலங்கா அரசாங்கம் நிதியைச் சேகரிக்கும் வேகத்திலேயே இதற்கான காலம் தங்கியுள்ளது" எனவும் அவர் பதிலளித்தார். அம்பாந்தோட்டையின் எதிர்கால வளர்ச்சி என்பது திரு.ராஜபக்ச பதவியிலிருக்கும் காலத்துடன் தொடர்புபட்டதாகும்.
அம்பாந்தோட்டை மிகவும் வறட்சியான பிரதேசமாக உள்ளதால் இந்த வறட்சியானது இங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்குத் தடையாக உள்ளது. நீர் வழங்கல் அரிதாகக் கிடைப்பதால் இங்கு பெரியளவிலான திட்டங்களை மேற்கொள்வதில் ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனக் கருதப்பட்டது.
சிறிலங்காவின் தரநியமங்களின் பிரகாரம், அம்பாந்தோட்டையானது வழமைக்கு மாறான தரைத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. நான் அம்பந்தோட்டையில் பயணித்துக் கொண்டிருந்த போது, பிறிதொரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. அதாவது 2018ல் இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் விளையாட்டுப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
2010ல் பொதுநலவாய அமைப்பின் விளையாட்டுப் போட்டியை புதுடில்லியில் நடாத்தும் போது, அதற்காக இந்திய அரசாங்கம் எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததை நான் பார்த்துள்ளேன். இந்தியாவுடன் ஒப்பிடும்போது, அம்பாந்தோட்டை அதாவது இன்னமும் முழுமையான நகரமாக மாறாத ஒரு இடத்தில் எவ்வாறான பொதுநலவாய அமைப்பின் விளையாட்டுப் போட்டியை நடாத்த முடியும் என கற்பனை செய்துபார்த்தேன். நல்வாய்ப்பாக, 2011ன் இறுதியில் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ற்றில் பொதுநலவாய அமைப்பின் விளையாட்டுப் போட்டியை நடாத்துவதென இறுதியாகத் தீர்மானிக்கப்பட்டது.
நாங்கள் நீண்ட நேரம் பயணித்த பின்னர், அம்பாந்தோட்டை விளையாட்டரங்கைச் சென்றடைந்தோம். அதனைச் சூழவிருந்த காடுகளின் நடுவில் இரண்டு பெரிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டோம். அந்த விளையாட்டரங்கில் 'மகிந்த ராஜபக்ச அனைத்துலக துடுப்பாட்ட விளையாட்டரங்கு' என ஆங்கிலத்தின் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.
இந்த விளையாட்டரங்கை பரமாரித்தல் என்பது 'சவால்மிக்க' ஒன்று என தாசிம் என்னிடம் தெரிவித்தார். நான் அம்பாந்தோட்டைக்கு பயணம் செய்து சில மாதங்களின் பின்னர், தாசிம் தெரிவித்த அந்தக் கூற்று உண்மை என்பது நிரூபிக்கப்பட்டது. சிறிலங்காவின் தேசிய துடுப்பாட்ட நிர்வாக சபையான சிறிலங்கா துடுப்பாட்ட சபையானது, அம்பாந்தோட்டை விளையாட்டரங்கைப் பராமரித்தல் என்பது தொடர்ந்தும் சமாளிக்க முடியாது என அறிவித்திருந்தது. இதனால் மகிந்த ராஜபக்ச அனைத்துலக துடுப்பாட்ட விளையாட்டரங்கையும் இன்னும் இரண்டு அரங்குகளையும் சிறிலங்கா இராணுவத்திடம் கையளிப்பதாக சிறிலங்கா துடுப்பாட்ட சபை அறிவித்திருந்தது.
நாங்கள் அம்பாந்தோட்டைக்குப் பயணம் செய்த அன்றைய நாள் பிற்பகலில், அம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்நோக்கியவாறு உள்ள உணவகங்களில் ஒன்றின் உரிமையாளரான திரு.மன்சூரிடம், "அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பான கருத்துக்களைக் கூறுமாறு" வினவியபோது, "இவ்வாறான அபிவிருத்திகள் மூலம் நாங்கள் எந்தத் தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சீமெந்துக் கட்டடங்களைக் கட்டுகிறார்கள். ஆனால் எங்களது நிலை என்ன?" எனப் பதிலளித்தார்.
திரு.மன்சூரின் உணவகத்திலிருந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில் மிகப் பெரிய கப்பற்துறைமுகம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.
அத்துறைமுகமானது சீனர்களின் ஆதரவுடன், மிகப் பெரிய கடனுதவியுடன் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் சீனத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். 50,000 வரையான சீனத் தொழிலாளர்கள் தற்போது அந்தப் பிரதேசத்தில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இந்தத் துறைமுகமானது 2012 யூனில் 'அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச அனைத்துலக துறைமுகம்' எனப் பெயர் சூட்டப்பட்டது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் 93 கப்பல்கள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சில வாரங்களில் 100வது கப்பல் நிறுத்தப்படும் எனவும் சிறிலங்கா ஊடகம் தெரிவித்துள்ளது.
திரு.ராஜபக்ச தொடர்ந்தும் தனது சொந்த இடத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கிவருகிறார். மார்ச்சில், அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் நாட்டின் மூன்றாவது அனைத்துலக துறைமுகத்தை திறந்து வைத்தார். இதற்கு 'மத்தள ராஜபக்ச அனைத்துலக விமானநிலையம்' எனப் பெயரிடப்பட்டது. அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பலர் தமது இடத்தை அடையாளங் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு இது பெரும் மாற்றமடைந்துள்ளது. "நாங்கள் எமது சொந்த இடத்தில் அந்நியர்கள் போல் வாழவேண்டிய நிலையேற்படும்" என திரு.மன்சூர் தெரிவித்தார்.
.jpg)
Post a Comment