3 முஸ்லிம் சகோதரர்களுடன கடலுக்குச் சென்ற படகு திரும்பவில்லை
(நஷ்ஹத் அனா)
வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடலுக்கு தொழிலுக்காகச் சென்ற படகு ஒன்று கடந்த எட்டு நாட்களாக கரைக்கு வரவில்லை என்று படகு உரிமையாளர் மற்றும் உறவினர்களால்; வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை ஹைறாத் பள்ளி வாயல் துறையடியில் இருந்து கடந்த சனிக்கிழமை (03.08.2013) ஆழ் கடலுக்கு தொழிலுக்காக சென்ற படகு இரண்டு தினங்களில் திரும்ப வேண்டியது இன்று வரை (11.08.2013) திரும்பவில்லை என்றும் அவர்களுடனான கையடக்கத் தொலைபேசி தொடர்பு கடலுக்குச் சென்ற தினத்தில் இருந்து கிடைக்கவில்லை என்றும் படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.முபாறக் தெரிவித்தார்.
கடலுக்குச் சென்றவர்களில் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியால வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது நஷீர் (வயது – 36), பிறைந்துரைச்சேனை தைக்கா வீதியைச் சேர்ந்த எச்.எம்.எம்.ஹபீழ் (வயது – 28), வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த முஸ்தபா லெப்பை முஸ்தபா (வயது – 34) ஆகிய மூவருமே கடலுக்குச் சென்றவர்களாவர்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை மீன் பிடித் துறைமுக முகாமையாளர் எஸ்.எஸ்.ஹெட்டிகே கருத்துத் தெரிவிக்கையில் தொலைந்து போன படகு தொடர்பாக கடற்படை தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதுடன் ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்றுள்ள படகுகளுக்கும் தகவல்கள் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment