பால்மாவில் ஆபத்து - உண்மை நிலை என்ன?
(TL) இலங்கையில் கடந்த காலங்களில் உணவுப் பொருட்கள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகள் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் உணவுப்பொருட்கள் தொடர்பிலான அச்சத்தினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அன்றாடம் நாம் பாவனைக்கு எடுக்கும் உணவுப் பொருட்களில் இரசாயன பதார்த்தங்கள் காணப்படுவதாக வந்த செய்திகள் மக்கள் மத்தியில் காணப்பட்ட பீதியை மேலும் அதிகரித்தது என்றே கூறவேண்டும்.
இலங்கையில் காலை ஆகாரம் முதற்கொண்டு இரவு ஆகாரம் வரையிலான காலப்பகுதிக்குள் குறைந்தது இரண்டு வேளையாவது பயன்படுத்தும் பால்மாவில் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தமான டி.சி.டி. (டைசையான்டியாமைட்) காணப்படுவதாக வந்த செய்தி அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வாறான பிரச்சினைகள் இலங்கைக்கு ஏற்படுவது முதன் முறையல்ல.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடமத்திய மாகாண பகுதியில் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திரு ப்பதை சுகாதார அமைச்சு இனங்கண்டது குறித்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கான காரணத்தை ஆய்வு செய்து பார்த்தபோது விளைச்சல் நிலங்களில் பயன்படுத்தப்படும் உரங்களில் ஆசனிக், கட்மியம், ஈயம் போன்ற இரசாயன பதார்த்தங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
விளைச்சல் நிலங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இரசாயன பதார்த்தங்கள் கலக்கப்பட்ட உரவகைகள் விளைச்சல் நிலத்தை பாதித்ததோடு மட்டுமல்லாமல் விளைச்சல் நிலத்தை அண்டிய நீர் நிலைகளையும் பாதித்தது மக்கள் குடிப்பதற்காக பயன்படுத்தும் நீர்களில் ஆசனிக், கட்மியம் போன்ற இரசாயன பதார்த்தங்கள் காணப்பட்டதாலும் இரசாயனம் கலந்த நீரினை மக்கள் பருகியதாலும் அப்பகுதி மக்கள் சிறுநீரகத்துடன் தொடர்புடைய நோய்களுக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
மத்திய மாகாணத்தில் ஏற்பட்டதைப் போன்றதொரு சம்பவமே தற்போது ஏற்பட்டுள்ளது. உலகில் காணப்படும் பால் உற்பத்திக்கான கேள்வியில் 1/5 பங்கினை பூர்த்தி செய்யும் நிறுவனமான பொன்டாராவின் பால் உற்பத்தியில் மனித உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய டி.சி.டி.எனப்படும் பதார்த்தம் காணப்படுவதாக தொழில்நுட்பவியல்துறை நிலையம் ஆய்வு செய்து கண்டறிந்தது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் உற்பத்திப் பொருட்களில் டி.சி.டி. எனப்படும் இரசாயன பதார்த்தம் கலக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்பதுறை நிலையம் தெரிவித்தபோது அதனை இலங்கையின் சுகாதார அமைச்சு மறுத்ததுடன் வெளிநாடுகளிலிரு ந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா மாதிரிகளை பரிசோதனை செய்ததன் பின்னரே மேற்படி கருத்தை வெளியிட வேண்டுமென தெரிவித்திருந்தது.
அமைச்சுக்களுக்கிடையிலான எதிர் மறைக்கருத்துகளை ஆய்வதற்கு முன்னர் டி.சி.டி.என்றால் என்னவென்று பார்ப்போம். டைசயன்ட்யமைட் அல்லது டி.சி.டி.எனப்படும் இரசாயன பதார்த்தமானது இலத்திரனியல், பொருட்கள், மருந்துவகை உற்பத்தியில் பயன்படுத்தப்படுவதுடன் உணவுப் பொதி செய்வதற்கான நடவடிக்கையிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
30 வருடங்களுக்கு முன்னர் விருத்தி செய்யப்பட்ட இந்த இரசாயன பதார்த்தம் நியூஸிலாந்தின் கால்நடை வளர்ப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காரணம் கால்நடைகள் உட்கொள்ளும் புற்களை செழிப்பாக வளர்ப்பதற்கு அமோனியா பயன்படுத்தப்படுகிறது. அமோனியா பயன்படுத்தப்படுவதால் நிலத்தில் காணப்படும் பற்றீரியா நைத்திரேட்டாகவும் நைத்திரோக்சைட்டாக மாற்றமடைகின்றது. இவ்விருவாயுவும் பச்சைக்கு குடில் விளைவை ஏற்படுவத்துவதால் நிலத்தில் காணப்படும் பக்றீரியா மாற்றத்தை தடுப்பதற்காக டி.சி.டி.எனும் இரசாயன பதார்த்தம் பயன்படுத்தப்படுகிறது.
2004ஆம் ஆண்டிலிருந்து நியூஸிலாந்து கால்நடை விவசாயிங்கள் குறித்த இரசாயன பதார்த்தத்தை பயன்படுத்திவருவதாக தெரியவருகிறது. டி.சி.டி.என்னும் இரசாயனப் பதார்த்தம் மனிதஉடலுக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினரான வைத்தியர் நலந்த ஹேரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
டி.சி.டி.எனப்படும் இரசாயனப் பதார்த்தம் இலங்கைக்கு புதியதல்ல இதற்கு முன்னர் பால்மா தொடர்பிலான பிரச்சினைகள் எழுந்தபோது டி.சி.டி.இரசாயன பதார்த்தம் குறித்து பேசப்பட்டது. ஆனால், அவை மக்களைச் சென்றடையவில்லை. டி.சி.டி.யானது மனித உடலில் சேர்ந்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ள அதேவேளை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலங்களில் சிறுநீரகம் தொடர்பான நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் டி.சி.டி.அதனை மேலும் ஊக்குவிப்பதாக அமையும் என்ற சந்தேகம் நம்மிடையில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பொன்டெரா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பால் மா இலங்கை யில் அங்கர், அங்கர் 1+, மெலிபன், டயமன்ட் போன்ற பெயர்களில் மக்களை வந்தடைகின்றது. குறித்த பால்மா வகைகளுடன் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஹைலண்ட், பெலவத்த போன்ற பால்மாவின் மாதிரிகளை ஐ.டி.ஐ.(தொழில்நுட்பவியல் துறைநிலையம்) ஆய்வு செய்தது.
தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சின் கீழ் செயற்படும் ஐ.டி.ஐ.பொன்டெரா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பால்மாக்களில் ஒரு கிலோ கிராமிற்கு 0.64 மில்லிகிராம் டி.சி.டி.இரசாயன பதார்த்தம் அடங்குவதாக இனங்கண்டனர். அதுமட்டுமல்லாது டயமன்ட் பால்மாவில் 0.67 மில்லிகிராமும், மெலிபன் பால்மாவில் 0.66 மில்லிகிராமும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் அங்கர் 1+இல் 0.68 மில்லிகிராம் டி.சி.டி.இரசாயன பதார்த்தம் காணப்பட்டது.
ஐ.டி.ஐ.யால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் உள்நாட்டு உற்பத்திகளான ஹைலண்ட் மற்றும் பலவத்தையில் டி.சி.டி.இரசாயன பதார்த்தம் காணப்படுவதில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது எவ்வாறாயினும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களில் டி.சி.டி. இருப்பதாக ஐ.டி.ஐ. சந்தேகம் வெளியிட்டிருந்ததுடன் குறித்த பால் மா வகைகளில் டி.சி.டி.காணப்படுவதையும் உறுதிசெய்தது. ஆரம்பத்தில் ஐ.டி.ஐ.யின் கருத்தை முழுவதுமாக புறக்கணித்த சுகாதார அமைச்சு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி தூக்கியதன் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களில் டி.சி.டி.இருப்பதை ஒப்புக்கொண்டு சந்தேகத்தை உறுதிசெய்ய இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மாதிரிகளை தாய்லாந்துக்கு அனுப்பிவைத்தது.
இந்நிலையில் பொன்டெரா நிறுவனம் உட்பட பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தமது பால் மா உற்பத்திகள் தொடர்பிலான விளம்பரப்படுத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டதையடுத்து பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருட்களை மீளப்பெற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளது.
பால் மாவில் காணப்படும் இரசாயன பதார்த்தம் தொடர்பில் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க சில ஆதாரங்களை முன்வைத்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்;
சீனாவில் சிறுவர்களுக்காக விற்பனை செய்யப்பட்டுவந்த பால் மாவில் மெலமைன் கலந்திருப்பதாக ஒரு செய்தி கடந்த வருடம் வெளிவந்தது. மெலமைன் கலக்கப்பட்ட இந்த பால்மா நியூசிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது. சீனாவில் ஏற்பட்ட இப்பிரச்சினை பால்மா குறித்து இலங்கை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும். இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் மெலமைன் காணப்படுவதாக என்ற தகவல் கடந்த வருடம் வெளியானது. அண்மையில் பால்மாவில் கதிர்வீச்சு காணப்படுவதாக என்ற மற்றொரு தகவல் வெளியானது. தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பால்மாவில் டி.சி.டி.காணப்படுவதாக செய்தி வெளியாகியது. அந்த விடயம் ஆய்வு ரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் நாம் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் மெலமைன் எனப்படும் இரசாயனப் பதார்த்தம் டி.சி.டி.எனப்படும் இரசாயனப் பதார்த்தத்தால் உருவாக்கம் பெற்றது என்பதாகும். நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா உற்பத்திகளில் டி.சி.டி. காணப்படுவதாக நாம் இப்போது தான் கண்டறிந்துள்ளோம். ஆனால், கடந்த வருடம் சர்வதேச விவசாய தகவல் வலையமைப்பு மேற்கொண்ட ஆய்வில் நியூஸிலாந்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பால் உற்பத்தி பொருட்களில் டி.சி.டி.இருப்பது உறுதிசெய்யப்பட்டது என தெரிவித்திருந்தார்.
அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த போசாக்குத் துறை நிபுணர் வைத்திய தமயந்தி பின்வருமாறு தெரிவித்திருந்தார். பக்கற்றில் அடைக்கப்பட்ட இரசாயனம் கலந்த பால்மாக்களை வாங்குவதை தவிர்த்துவிட்டு மீண்டும் நாம் பாரம்பரிய முறையைக் கைப்பற்ற வேண்டிய நேரம் தோன்றியுள்ளது.
பால்மா பாவனையிலிருந்து மீண்டும் பின்னோக்கி செல்வதென்பது மிகவும் கடினமாக செயலாகும். அத்துடன் பொதுமக்கள் தூய பசும்பாலை நுகர்வதற்கு நீண்டகாலம் எடுக்கும் ஆனால், தற்போதைய நிலையில் அதுவே சிறந்த முறையாக பார்க்கப்படுகிறது.
பால் மா பாவனை அதிகரிக்கப்பட்ட காலப்பகுதியில் கால்நடை வளர்ப்பின் அழிவு ஆரம்பமாகியது இன்று சன நெருக்கடியான பகுதியில் பால்பண்ணையொன்றை காண்பதென்பது அரிய விடயமாக பார்க்கப்படுகிறது.
பால்மாவுக்கு பிரதியீடாக நாம் தூய பாலை தவிர வேறொரு உற்பத்திப் பொருளை நுகர்வோமென்றால் அது முட்டாள் தனமாகவே பார்க்கப்படும் என தெரிவித்திருந்தார்.
உணவு விற்பனை தொடர்பில் சட்டம் என்ன கூறுகின்றதென்பதனையும் நாம் பார்க்கவேண்டும். அந்த வரிசையில் உணவுச் சட்டத்தில் இரண்டாம் பிரிவில் மனிதனின் சுகாதாரத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் உணவுப்பொருளை உற்பத்தி செய்யவோ இறக்குமதி செய்யவோ, விநியோகிக்கவோ முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நுகர்வோர் அதிகாரசபை சட்டத்திலும் மேற்படி சட்ட வாக்கியம் குறிப்பிடப்பட்டதோடு நுகர்வோரை பாதுகாக்கும் பொறுப்பு நுகர்வோர் அதிகார சபைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உணவுப் பொருட்களினதும் தரத்தினையும் குணத்தினையும் பரிசோதித்து அப்பொருளின் தன்மையை அறிந்து அதனை மக்கள் பாவனைக்கு உரித்துடையது என்பதனை நுகர்வோர் அதிகாரசபை உறுதி செய்ய வேண்டும். ஆனால், நுகர்வோர் அதிகாரசபை இப்பிரச்சினையை இனங்காணவில்லை, பிரச்சினை இனங்காணப்பட்டபோதும் அதனை தீர்க்க முன்வரவில்லை.
தற்போது பால்மா தொடர்பில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினை நாம் பாவனை செய்யும் உற்பத்தி பொருட்களில் காணப்படுகின்றதென்பதை நாம் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
.jpg)
Post a Comment