Header Ads



உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்

ஓட்டத்தில் உசைன் போல்ட் தான் "டாப்'. ஆனால், வருமானத்தில் நம்ம தோனி தான் முந்துகிறார். உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், போல்ட்டை(40) முந்திய இவர் 16வது இடம் பிடித்தார். 

பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை சார்பில், உலகளவில் கடந்த ஆண்டு (ஜூன் 2012- ஜூலை 2013) அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியானது. இதற்கு போட்டி சம்பளம், விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் தொகை போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. 

கடந்த ஜூன் 2011- ஜூலை 2012ல் வெளியான பட்டியலில் 31வது இடத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, தற்போது 16வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவரது கடந்த ஆண்டு வருமானம் இந்திய ரூ. 200 கோடி. இதில் ரூ. 22 கோடி போட்டிகளில் பங்கேற்க சம்பளமாக பெற்றுள்ளார். எஞ்சியுள்ள ரூ. 178 கோடி விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெற்றுள்ளார். 

சச்சின் "51':

இப்பட்டியலில், உலகின் முன்னணி நட்சத்திரங்களான "பார்முலா-1' கார்பந்தய வீரர் பெர்னாண்டோ அலோன்சா (இந்திய ரூ.191 கோடி) 19வது இடமும், லீவிஸ் ஹாமில்டன் (ரூ.175 கோடி) 26வது இடமும், செர்பியாவின் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் (ரூ.171 கோடி) 28வது இடமும், ஸ்பெயினின் நடால் (ரூ.168 கோடி) 30வது இடமும் பெற்றனர். உலகின் "மின்னல் வேக' ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் (ரூ.154 கோடி) 40வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரரான சச்சின் (ரூ. 140 கோடி) 51வது இடம் பிடித்தார்.

இப்பட்டியலில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்(இந்திய ரூ. 497 கோடி), சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (ரூ. 455 கோடி), அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோப் பிரையன்ட் (ரூ. 394 கோடி) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 

வீராங்கனைகளுக்கான பட்டியலில் ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் ஷரபோவா, (இந்திய ரூ. 184 கோடி) தொடர்ந்து 9வது ஆண்டாக முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தை உலகின் "நம்பர்-1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் (ரூ. 130 கோடி) பெற்றார். சீனாவின் லீ நா (ரூ. 115 கோடி), பெலாரசின் விக்டோரியா அசரன்கா (ரூ. 100 கோடி) ஆகியோர் முறையே மூன்றாவது, நான்காவது இடத்தை பெற்றனர். 

1 comment:

  1. நமது நாட்டு ராசாவின் மகன் லம்போகி கார் ஓட்டும் வீரரின் தர வரிசை நிச்சயம் உயர்ந்த நிலையில் இருக்கும் ..ஆனால் மகி ராசா அதை விரும்பமாட்டார்.

    ReplyDelete

Powered by Blogger.