Header Ads



முஸ்லிம் தலைவர்கள் இஸ்லாத்தின்மீது விசுவாசம் உள்ளவர்கள் போன்று நடித்தார்கள்

(வி.ரி.சகாதேவராஜா)

வடபுலத்தில் வாழுகின்ற  முஸ்லிம்களின் சமுக பொருளாதார அரசியல் தீர்வு எதுவானாலும் தமிழ் அரசியல் தலைமைத்துவங்களோடு இணைந்து தோழோடு தோழ் நின்று போராடி வெற்றிபெற்றால்  மட்டுமே எதிர்காலம் சாத்தியமாகும். அதுமட்டுமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள முஸ்லிம்களும் குறைந்தபட்சம் தமது இருப்பையாவது காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முஸ்லிம்பிரதிநிதியும் கிழக்கு மாகாண சபையின் 2012 ஆண்டு தேர்தல் வேட்பாளருமான ஜனாப். துவான் புனைட் வடமாகாண தேர்தலில் முஸ்லிம்களின் நிலைப்பாடு எப்படி அமையவேண்டுமென கூறுகையில் குறிப்பிட்டார். மருதமுனையைச் சேர்ந்த துவான் புனைட் மேலும் கருத்துரைக்கையில்,

தமிழ்த்தலைமைத்துவங்கள் எவ்வாறு பண்பட்ட அரசியலைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதனை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்  முஸ்லிம் வேட்பாளர்களை உள்வாங்கியது. முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்பதற்காக அவர்களையும் சேர்த்து கிழக்கு மாகாணசபையை அமைக்க இணக்கம் தெரிவித்தமை.மாகாணசபையை அமைப்பதற்காக அனைத்து அமைச்சர் பதவிகளையும் மு.கா.விற்கு கொடுக்க முன்வந்தமை.வடமாகாணசபைத் தேர்தலில் சகலவல்லமையும் பொருந்திய மாவைசேனாதிராஜா அரசியலில் ஈடுபடாத ஆனால் தகுதிவாய்ந்த சி.வி.விக்னேஸ்வரன் ஜயாவிற்கு விட்டுக்கொடுத்தமை  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறாக முதிர்ச்சிபெற்ற தலைவர்களின் விட்டுக்கொடுப்புகளானது எதிர்காலத்தில் தமிழ்மக்களின் நிம்மதிப்பெருமூச்சுக்கான சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்கான அத்திவாரக்கற்களில் ஒன்றாகத்தான் நம்மால் பார்க்கமுடிகிறது.

தவிர அவர்களது பதவி மோகமோ சுயஇலாபமோ அல்ல. மேலும் இழுபறியான நிலையை உருவாக்க பேரினவாத உள்சக்திகளை தூண்டிக்கொண்டிருந்தாலும் தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும் விடிவுக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க நினைக்கும் தமிழ்த்தலைமைத்துவம் ஏன் தமிழ் பேசும் முஸ்லிம்களின் விடயத்தில் தயாராகமாட்டார்கள் என நினைக்கவேண்டும்!

எனவே வடபுல முஸ்லிம் மக்களின் காணி மதம் தொடர்பான பல பிரச்சினைகளை தமிழ்தலைமைகளோடு பேசி தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன. தற்போதைய முதலமைச்சர் வேட்பாளர் முனன்ள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சமுகத்திலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வல்லமையும் ஆற்றலும் நிறைந்தவர்கள். தமிழ்பேசும் மக்களின் விடிவெள்ளியாக அவர் திகழ்வார் என்பதில் ஜயமில்லை.

எனவே தொடர்ந்து முஸ்லிம் சமுகம் சோரம்போன தலைமைத்துவங்களால் பிழையாக சித்திரித்துக்காண்பிக்கின்ற இவ்வேளையில் தனது கொள்கையை வேதமாக நினைத்து மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்ற தமிழ்த்தலைமைத்துவங்களோடு இணைந்து பேசி நாம் சோரம் போகும் இனமல்ல என்பதை நிருபிக்கவேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அப்போதுதான் எமது சமுகத்திற்கு முகவரி தேடிக்கொடுத்த அஸ்ரப் போன்ற அதிஉன்னத தலைவர்களது போதனையை பின்பற்றினோம் என்று கூறமுடியும்.

தமிழரசுக்கட்சிப்பாசறையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் தலைமைகளே வரலாற்றில் ஜொலித்திருக்கிறார்கள். தந்தை செல்வா தங்களுக்கான அரசியல் முகவரியைத் தொடக்கிவைத்தபோது முஸ்லிம்களையும் உள்வாங்கியிருந்தார். எனினும் பேரினவாத ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் ஜ.தே.கட்சி போன்றவை குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பதுபோல்  இடையிடையே பலரை சோரம்போக வைத்தார்கள்.

காலத்தின் கட்டாயத்தால் முஸ்லிம்களின் முகவரியை எழுத தகுதிவாய்ந்த மாமனிதர் அஸ்ரப் புறப்பட்டார்.அவர் தமிழ்பேசும் மக்களின் உதயசூரியனாக  பிரகாசித்தவர். 2020 திட்டம் உப ஜனாதிபதி முறைமை மாகாணமுறைமை ஆட்சி போன்றவற்றை முன்வைத்து களமிறங்கிய தீர்க்கதரிசி அவர்.அது மட்டுமல்ல நாட்டிலுள்ள சகல முஸ்லிம்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்த பெருமை அவரையே சாரும்.

இப்படிப்பட்ட பெருந்தலைவனின் விதியின் விளைவால் புதிதாக வந்த தலைவரோ பேரம் பேசும் அரசியலைக்கைவிட்டு சோரம் போன அரசியலை செய்து கொண்டிருப்பதும் அதற்காக நொண்டிச்சாட்டுக்களைக் கூறிக்கொண்டிருப்பதும் முஸ்லிம்களுக்கு புளித்துப்போன சமாச்சாரமாகும். பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோதும் அபாயா ஹலால் விவகாரங்கள் தலைவிரித்தாடியபோதும் முஸ்லிம்களின் காணிகள் ஆதனங்கள் பேரினவாதிகளால் சூறையாடப்பட்டபோதிலும் வாய்மூடி மௌனியாவிருந்தார் தற்போதைய தலைவர் ஹக்கீம்.

கிழக்குமாகாணசபை கலைக்கப்பட்டபோது முஸ்லிம் தலைவர்கள் பலர் சிறுவாலைக்கழட்டி தலையில் கட்டிக்கொண்டு முஸ்லிம்கள் மீது அதீத அக்கறை உள்ளவர்கள் போன்று முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின்மீதும் விசுவாசம் உள்ளவர்கள்போன்றும் நடித்தார்கள். மு.கா. மரச்சின்னத்திலும் தே.காங்கிரஸ் வெற்றிலைச்சின்னத்திலும் தேர்தலில் நின்றார்கள்.அதுமட்டுமல்ல பள்ளிவாசல் தாக்கப்படவில்லை மலையைக்கண்டால் சிலையை வைக்கிறார்கள் என்றெல்லாம் கூறி உணர்ச்சியூட்டினார்கள்.

சம்மாந்துறைக்கு ஜனாதிபதி வந்தவேளையில் பள்ளிவாசல் ஏதாவது இலங்கையில் தாக்கப்பட்டதா? எனக்கேட்டார்.முஸ்லிம் அமைச்சர்கள் அவர்பேசிய பேசுசுசுக்கு எந்தமறுப்பையும் தெரிவிக்காமல் நாதியற்று நின்றார்கள்.கூட்டத்தில் இருந்த ஆயிரக்கணக்கானோர் சாட்சிகள்.இப்படி ஏமாற்றிவந்தவர்கள் இவர்கள்.

த.தே.கூட்டமைப்பினர் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க முஸ்லிம் பிரதிநிதியாக மாகாணசபைத் தேர்தலில் நின்றேன்.நான் ஏறிய மேடைகளில் தமிழ் முஸ்லிம் இனஉறவுதான் என் லட்சியம் என முழங்கினேன். த.தே.கூட்டமைப்புடன் இணைந்து மு.கா. ஆட்சியமைக்கும் அது முழு இலங்கையிலுமுள்ள சிறுபான்மைச்சமுகத்தின் குரலாக ஒலிக்குமென்று நான்மட்டுமல்ல 99 வீதமான தமிழ்முஸ்லிம் மக்கள் நம்பினார்கள்.

ஆனால் நடந்தென்ன? த.தே.கூட்டமைப்புடன் பேசுகின்றோம் எனக்கூறிவிட்டு மகிந்தவின் காலடியில் வீழ்ந்த மர்மம் என்ன? 5 அமைச்சுகளையும் முதலமைச்சரையும் தருகின்றோம் என அந்த கனவான்கள் சொன்னார்கள். கேட்டார்களா? இறுதியில் முதலமைச்சரும் இல்லை.எதிரி என நினைத்த தே.காங்கிரசுக்கு அமைச்சுப்பதவி வழங்கக்கூடாதென நினைத்த கனவு பலித்ததா? தலைவர் அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்களென தம்மைக்கூறிக்கொள்வோர் தற்போது தமது நடத்தைகளால் அவரைக் கேவலப்படுத்துவோராக உள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமைத்துவம் கிழக்கிலிருந்துதான் உருவாகவேண்டும்.இச்சிந்தனையைத் தோற்றுவித்தவர் இன்றைய தலைவரே என்றால் மிகையாகாது. எப்படியோ கிழக்கு மாகாண மக்களின் நலன்களுக்கு மு.கா. ஆப்பு வைத்தாயிற்று.தற்போது வடமாகாண தேர்தலுக்கு ஆப்படிக்க ஹக்கீம் ஆயத்தமாகி விட்டார்.மீண்டும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என வீரவசனம் பேசி முஸ்லிம்களை உசுப்பேற்றிவருகிறார்கள்.

ஒன்றை மட்டும் விளங்கிக்கொள்ளவேண்டும்.நடைபெறப்போவது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அல்ல. வட மாகாண சபைத் தேர்தல்.இதில் முழுக்க முழுக்க அடங்கியிருப்பது சிறுபான்மை மக்களின் தணியாத தாகம்.பாதிக்கப்பட்ட மக்களின் நிம்மதியற்ற இருளடைந்த வாழ்க்கைக்கு ஒளி தேடிப் புறப்படும் பயணம் இது.

இத்தேர்தலில்  மு.கா.விற்கு வாக்களித்து மு.கா. சோரம்போவதை விரும்பாத மக்கள் வாழ்கின்ற பிரதேசம் வடபுலபிரதேசம். அவர்களுக்கு யாரும் அரசியல் சொல்லிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.எனவே வடபுல முஸ்லிம் மக்கள் ஒருபோதும் மு.காவிற்கு வாக்களித்து தன் தலையிலே மண் அள்ளிப்போடும் மாபெரும் தவறைச் செய்யமாட்டார்கள் என்பது எனது அதீத நம்பிக்கையாகும்.

எனவே வடமாகாணத் தேர்தல் தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும் முக்கியமான தேர்தலாகும். சோரம்போகும் மு.கா.விற்கு அவர்கள் வாக்களிக்கமாட்டார்கள்.அந்த வரலாற்றுத்தவறை அவர்கள் செய்யமாட்டார்கள்.

2 comments:

  1. If muslim congress have had given you a membership in the past election, you wouldn't have barking now. Politics politics....i hate it

    ReplyDelete
  2. You are absolutely correct My Dear Mr. Duwan. The new generation must know the history. Mashoor moulana, M.C.Ahamed, Ninthavur Musthaffa, Samsudeen and Ashraff, all's political school was the Federal Party andd TULF and their teacher is SJVC

    ReplyDelete

Powered by Blogger.