காயமடைந்த முஸ்லிம்களுக்கும், சேதமடைந்த விடுகளுக்கும் நஷ்டஈடு வழங்கப்படுமா..?
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
நேற்றிரவு காடையர்களால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்ட பள்ளிவாசல், முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அரசு நீதியான விசாரணை செய்து உரிய நஷ்ட ஈட்டடை வழங்குமா? என முஸ்லிம்கள் அரசாங்கத்திடம் கேட்கின்றனர்.
நாட்டின் தலைவர் என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் தனது கட்டளைகளை மீறி மேற்கொள்ளப்பட்ட மேற்படி அநாகரிகமான செயற்பாடுகளை ஜனாதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு முஸ்லிம்களின் இருப்பையும். சமயத்தளங்களின் பாதுகாப்பையும் இனியாவது உறுதிப்படுத்துவாரா?
என முஸ்லிம்கள் ஜனாதிபதியிடம் கேட்கின்றனர். சில விஷமிகள் இன்னும் தாக்கப்பட்ட பள்ளிவாசலை உடைப்பதற்கே கங்கனம் கட்டிக்கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் இன்று மிகுந்த கவளையும் கண்ணீரும் விட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதனை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவதாக அமைதியையும், சமாதானத்தையும் விரும்பும் முஸ்லிம் சமுகம் தெரிவித்துக் கொள்கின்றது.
நாட்டின் தலைவர் என்றவகையில் அவரிடம் மட்டுமே தமது பாதுகாப்பை வேண்டி நிற்கின்றனர். இனவாதிகள் அமைதியான முஸ்லிம்களை சீண்டிவிட்டு நாட்டில் பாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்த தொடராக முனைகின்றனர்.
கடந்த மூன்று தஸாப்த கால கொடிய யுத்தத்தின் பின்னரான ஜனாதிபதியின் சமாதான முன்னெடுப்பை காடையர்களின் செயற்பாடுகள் சர்வதேசம் வரை இழுத்துச் சென்று மழுங்கடித்து ஜனாதிபதியை சர்வதேச குற்றவாளியாக ஆக்க முனைவதும் இச்செயற்பாடுகள் மூலம் அவதானிக்கப்படுகின்றது.
எனவே ஒரு சமுகத்தின் மீதான தாக்குதல்கள் மூலம் ஏற்படுத்தப்படவிருக்கின்ற மேற்படி நடவடிக்கைகளை ஜனாதிபதி உடன் தடுத்து நிறுத்தி அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துமாறு முஸ்லிம் மக்கள் அன்பாய் வேண்டி நிற்கின்றனர்.

Post a Comment