முஸ்லிம் குடும்பத்தினருக்கு இப்படியும் நடந்தது..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
வர்த்தக நிலயம் ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த முஸ்லிம் குடும்பத்தவர்களிடம் வர்தக நிலைய சிப்பந்தி போன்று நடித்த திருட்டு ஆசாமி ஒருவன் இரண்டாயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு நைசாகத் தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.
கொழும்பு -9, தெமட்டகொடப் பிரதேசத்திலுள்ள இரண்டு அடுக்கு மாடி வர்த்தக நிலையம் ஒன்றில் இச் சம்பவம் நடைபெற்றது. ஏனையவர்களுக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்பதற்காக இச்சம்பவத்தை இங்கு தருகின்றோம்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்ட இவ் வர்த்தக நிலையத்தில் குடும்பத்தவர்களோடு வந்திருந்த முஸ்லிம் பெண் ஒருவர் தான் கேட்ட பொருளை மேல் மாடியில் போய் பார்த்து எடுக்குமாறு வர்த்தக நிலைய உரிமையாளர் கூறியிருக்கிறார். அதற்கு இணங்க இப்பெண்ணும் இவரது உறவினர்களும் மேல் மாடி சென்றுள்ளனர். இவர்களோடு ஒரு ஆசாமியும் வர்த்தக நிலையத்தில் உள்ளோர் தமது வியாபார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கூடச் சென்றிருக்கின்றான். வர்த்தக நிலைய உரிமையாளர் அந்த ஆசாமியை பெண்ணின் உறவினர் என்று நினைத்துள்ளார். பெண்ணோ அந்த ஆசாமியை வர்த்தக நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர் என எண்ணியுள்ளார்.
பொருள் வாங்க வந்திருந்த பெண் எடுக்கும் பொருட்களுக்கு எல்லாம் அந்த ஆசாமியே விலை சொல்லியிருக்கின்றான். இறுதியாக ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதன் விலை 1650 ரூபா எனப் பேசி வாங்குவதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். சிப்பந்தியாக நடித்த ஆசாமி பொருளுக்கான பணத்தைக் கேட்டிருக்கிறான். பொருள் வாங்கிய பெண் 2000 ரூபா பணத்தை அவனிடம் கொடுத்துள்ளார். வர்த்தக நிலைய சிப்பந்தியாக நடித்த ஆசாமியோ மீதியை கீழே வந்து முதலாளியிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு 2000 ரூபா பணத்துடன் விரைவாகக் கீழே இறங்கிச் சென்று விட்டான்.
பொருள் வாங்க வந்திருந்த பெண்ணும் அவரோடு வந்திருந்த உறவினர்களும் அங்கிருந்த ஏனைய பொருட்களையும் பார்த்துவிட்டு மெதுவாகக் கீழே இறங்கி முதலாளியிடம் சென்று மீதிப் பணத்தைக் கேட்டிருக்கிறார்கள். முதலாளியோ என்ன மீதி? எப்போ என்னிடம் பணம் தந்தீர்கள்? என்று அப்பெண்ணைப் பார்த்து திருப்பிக் கேட்ட போது மேல் மாடியில் வைத்து உங்கள் ஊழியரிடம் 2000 ரூபா பணம் கொடுத்தேனே என்று பெண் கூறியுள்ளார். முதலாளி அங்குள்ள ஊழியர்கள் அனைவரையும் அழைப்பித்துக் காட்டி இவர்கள் யாரிடம் பணத்தைக் கொடுத்தீர்கள்? என வினவியபோதுதான் தானும் தனது உறவினர்களும் திருட்டு ஆசாமி ஒருவனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்திருப்பது தெரியவந்தது.

There should be CCTV!
ReplyDelete