Header Ads



அதாஉல்லாவும், உதுமாலெப்பையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் - தவம்

(எஸ்.அன்சப் இலாஹி)

அமைச்சர் உதுமாலெவ்வை சம்புக்களப்பு வடிச்சல் தொடர்பாக நாம் கூறுகின்ற விடயத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அமைச்சர் அதாஉல்லாவும் அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதால் அவருக்கும் நாம் சொல்வது விளங்காது. ஆனால் இவற்றால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் என்பதனால் இவற்றை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிக்கான அக்கரைப்பற்று பிரதேச பயனாளிகளை தெரிவு செய்யும் கூட்டம் (22.08.2013) அவரது அலுவலகத்தில் இடம்பெற்றபோதே மேற்படி கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அக்கரைப்பற்றில் வெறும் நிர்மாணங்கள் நடைபெறுகின்றன அவை மக்களுக்கு எந்தளவு பிரயோசனமாக அமையும் என்பது கணக்கில் எடுக்கப்படுவதில்லை அதே போன்று தனி மனிதர்களின் தேவைகள் அவர்கள் எதிர் பார்ப்புக்கள் நிவர்த்தி செய்யப்படுவதில்லை. அவற்றை நிவர்த்தி செய்ய முடியாவிட்டாலும், ஆகக் குறைந்தது ஆறுதல் கூட கூறப்படுவதில்லை. நான் நினைத்ததை செய்வேன் நீங்கள் வாய் மூடி மௌனிகளாக இருக்கவேண்டும் என்ற அகங்கார அரசியலே இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்கள் வாக்களித்ததனால்தான் நாம் பாராளுமன்ற உறுப்பினரானோம் அமைச்சரானோம் என்பதை மறந்துவிட்டு மக்களை அடிமைகளாக நடாத்தும் நிலைமையே இன்று காணப்படுகிறது. கொந்தராத்துக்கள் மாத்திரம் தான் இப்போது இவர்களின் குறியாக இருக்கிறது.

எல்லாவற்றிலும் கைக்குக் கிட்டும் இலாபத்தை மட்டும் கணிப்பீடு செய்யும் அமைச்சர்களான அதாஉல்லாவுக்கும் உதுமாலெவ்வைக்கும் அவர்கள் விடும் தவறுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டினால், அவற்றை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லை 

அக்கரைப்பற்று பொதுச்சந்தையின் முதலாம் கட்ட நிர்மாணத்தை பிரதேச சபைத் தவிசாளராக இருந்து அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதியினைக் கொண்டுவந்து நாம் ஆரம்பித்து வைத்தோம். நாங்கள் ஆரம்பிக்கின்றபோது இருந்த கட்டட மாதிரி வரைபடத்தை மாற்றி, பிரதான வீதியை நோக்கி பொதுச் சந்தையின் பின்புறத்தை வைத்துக் கட்ட ஆரம்பித்தார்கள். இது பிழையானது, சந்தையின் முகத்தை பிரதான வீதி நோக்கி வைக்காது விட்டால் அச் சந்தை சோபை இழந்து போய்விடும் என்றோம். அதனை கவனத்தில் கொள்ளவில்லை. இறுதியில் அதுவே நடந்தது. மேலும் சிறிய மரக்கறிக்கடைகளை மேல் மாடிகளுக்கு மாற்ற வேண்டாம், நமது மக்கள் மாடிகளில் ஏறி பொருட்கள் வாங்கமாட்டார்கள், அப்படி மீறி மாடிக்கு கொண்டு சென்றால் அந்த மரக்கறிக்கடைகளை இழுத்து மூட வேண்டிவரும் என்றோம். அதனைக் கவனத்தில் கொள்ளாமல் மாடிக்குக் கொண்டு சென்றார்கள் இறுதியில் அந்த மரக்கறிக்கடை வியாபாரிகள் நட்டமடைந்து தொழிலையே கைவிட்டு இப்போது நடு வீதியில் நிற்கிறார்கள் இப்படித்தான் பஸ்தரிப்பு நிலையத்தினுள் அமைக்கப்பட்ட கடைத்தொகுதியிலும் இவ்வாறான குறைகளைக்காட்டினோம் அவற்றையும் கவனத்திற் கொள்ளவில்லை இப்போது அதுவும் பாளடைந்து கிடக்கிறது.

இதே போன்றுதான், இப்போது வீதிகளில் அமைக்கப்பட்டுவரும் வடிகான்களினால் அக்கரைப்பற்று மழைக்காலங்களில் மிக மோசமான வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகப்போகிறது என்று கூறினோம். அவ்வாறு வெள்ளப் பாதிப்பிலிருந்து அக்கரைப்பற்றை காப்பாற்ற வேண்டும் என்றால் நீர் வெளியேற்றும் நிலையங்களை (பம்பிங் ஸ்டேசன்ஸ்) உருவாக்கவேண்டும் எனக் கூறியுள்ளோம். அது கவனத்தில் கொள்ளப்படவில்லை. நாம் பொறுத்திருந்து பார்க்க இருக்கிறோம். நூன்கு வீதிகளுக்கு உட்பட்ட குடியிருப்பு நிலங்களுக்குள் துண்டம் துண்டமாகவும், கான்களுக்குள் வெளியிறங்க வசதியுமின்றி மழைக் காலங்களில் அக்கரைப்பற்று நீரில் மூழ்கி தத்தளிக்கப்போகிறது.

இப்படித்தான், அமைச்சர் உதுமாலெவ்வையும், சம்புக்களப்பு வடிச்சல் தொடர்பாக நாம் கூறுகின்ற விடயத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அமைச்சர் அதாஉல்லாவும் அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதால் அவருக்கும் நாம் சொல்வது விளங்காது. ஆனால் இவற்றால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் என்பதனால் இவற்றை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. சம்புக்களப்பு வடிச்சல் ஆரம்பிக்கப்படுகின்ற நிகழ்வுகளில் நானும் பங்கேற்றதாகவும், இப்போது அரசியலுக்காக விமர்சிப்பதாகவும் உதுமாலெவ்வை கூறுகிறார்.

சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் 2011ஆம் ஆண்டில்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு உதுமாலெவ்வையின் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட எந்தப் பொது நிகழ்வுகளிலும் நான் கலந்து கொள்ளாமல் தூரமாகியிருந்தேன். அமைச்சர் அதாஉல்லா தனது மகனை அறிமுகப்படுத்தி கட்சியை குடும்பச் சொத்தாக பிரகடனப்படுத்திய காலம் அது. ஆகவே சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்ற போது, அந் நிகழ்வில் நான் இருந்தேன் என்பது அப்பட்டமான பொய்யாகும். மேலும் 2012.07.15 ஆம் திகதி அக்கரைப்பற்றில் இடம்பெற்ற வீதிகள் ஆரம்ப நிகழ்வின் பொது மேடையில், இதே உதுமாலெவ்வை இருக்கின்றபோதே, நீர்ப்பாசனப் பிராந்திய பொறியியலாளர் அலியார் அவர்கள், சம்புக்களப்பு வடிச்சல் தொடர்பில் நீர் வெளியேற்றும் நிலையங்கள் மற்றும் கடலை விட முகத்துவார மட்டம் தாழ்வாக இருப்பது என்பது சரியானவை என்று பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு கூறினார். இவ்வாறு, இந்த இரண்டு விடயங்களும் திருப்திப்படுத்தப்படாதவரை சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் தோல்வியைத்தான் தளுவும் என்பதை நாமும், நீர்ப்பாசனப் பொறியியலாளரும் பகிரங்கமாகத் தெரிவித்தும் உதுமாலெவ்வை அவை எவற்றையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அட்டாளைச்சேனை விவசாயிகள் மேற்படி சம்புக்களப்புத் திட்டத்தின் எதிர் விளைவுகள் பற்றி உதுமாலெவ்வைக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கும் கடிதமும் அனுப்பி இருந்தனர். கெடு குடி சொற் கேளாது என்பதைப் போன்று உதுமாலெவ்வைக்கும் கெட்டுப் போகின்ற காலம் புத்தி பிடிபடவில்லை.

மேலும், நான் சம்புக்களப்பு வடிச்சல் தொடர்பில் பேசுவதை பிரதேச வாதம் என்று உதுமாலெவ்வை கூறுகிறார். நான் பேசுவது பிரதேசவாதம் என்றால், அட்டாளைச்சேனை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நசீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசசபை தவிசாளர் அன்சில் போன்றோரும் பேசிய விடயத்தை உதுமாலெவ்வை எப்படி நியாயப்படுத்தப் போகிறார். முக்கள் பிரச்சினையை சுட்டிக் காட்டுகின்றபோது அவற்றைத் திசை திருப்ப எத்தனிக்காமல் அவற்றிற்கு தீர்வு கொடுக்க முன்வரவேண்டும் என உதுமாலெவ்வையை கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் அமைச்சர் உதுமாலெவ்வை ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தராக அல்லது பொறியியலாளராகக் கடமையாற்றவில்லை. எனவே, தொழில்நுட்ப ரீதியிலான போதாமை தனக்கு இருக்கும் என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக் கொண்டு சம்புக்களப்புத்திட்டத்தை உடன் நிறுத்தி அதன் எதிர் மறை விளைவுகளை நிவர்த்தி செய்து, மாற்று வழிகளினூடாக சிறந்த பெறுபேறுகளைத் தரக்கூடிய வழியில் இத்திட்டத்தை முன்னெடுக்க முனைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.