Header Ads



'ஹஜ்ஜுப் பெருநாள் மாட்டோடு வந்து நம் எல்லோரது தலைகளிலும் ஏற முற்படலாம்'

(ஏ.எல்.ஜுனைதீன்)

  இலங்கையில் ஒரு இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்துவதற்கு ஒன்றிணைகின்றவர்கள் ஏன் முஸ்லிம் சமூக அரசியலை முன் வைத்து ஒன்றுபடுவதில் பின் நிற்கிறார்கள்? என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் அனைத்தும் இன்று ஒன்றுபட வேண்டியுள்ளது. நாம் திறந்த மனதுடன் இதை பற்றிப் பேச வேண்டும். நிச்சயமாக காலம் இவர்களை ஒன்று படுத்தியேயாகும் என்ற தேவை இருந்து கொண்டிருக்கிறது.என  தென் கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

  சாய்ந்தமருது அல்-ஹிலால்  வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார் ரமீஸ் அப்துல்லாஹ் தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

  இன்று பெளத்த இனவாத சக்திகள் அரசின் கைகளைக் கட்டி வைத்திருக்கின்றன. இந்தச் சூழ் நிலையில் சிறுபான்மை அரசியலைக் கொண்டு செல்வது மிகக் கஷ்டமாகும். இதனால் நாம் மிக அவசரமாக ஒன்று பட்டு சில தீர்மானங்களுக்கு வர வேண்டியுள்ளது.

  இலங்கையின் தேசிய அரசியலில் தமிழர் தேசத்துக்கான சுயாட்சிக் கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த கால கட்டங்களில் முஸ்லிம்களும் அதற்குச் சமனான கோரிக்கைகளை முன் வைத்து வந்தார்கள். தமிழ் சமூகம் என்னென்ன கோரிக்கைகளை முன் வைத்ததோ அதற்கு சமமாக  மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் அஷ்ரபும் அதற்கேற்ற வகையிலான எவராலும் நிராகரிக்க முடியாத கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.

  ஆனால், 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தச் சூழல் முற்றாக மாற்றமடைந்தது. தமிழ் சமூகம் தனது தனி நாட்டுக் கோரிக்கையிலிருந்து நிலை மாற்றம் பெற்று மாகாண ஆட்சி முறையையும், சமஷ்டியையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தங்களை மாற்றியிருக்கிறார்கள். இச் சந்தர்ப்பத்தில் நாங்கள் ஏற்கனவே  முன்வைத்த நகல் திட்டங்களின் அடிப்படையில் எமது அரசியலைக் கொண்டு செல்ல முடியாத நிலை மாறி அரசியல் ரீதியாக எந்தக் கோரிக்கைகளையும் திடமாக முன் வைக்காது சந்தர்ப்பத்திற்கேற்ற முடிவுகளை எடுக்க முடியாத நிலையிலேயே எமது தற்போதய அரசியல் சென்று கொண்டிருக்கிறது.

  தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற பிளவு இதற்கெல்லாம் முக்கிய காரணியாக இருந்து கொண்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையிலான கட்சி நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய ஆட்சியமைப்பைப் பெற்றுக் கொண்டது. அக்கட்சி 18 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தையும் முன் வைத்தது. ஜனாதிபதி முறைமையிலே இரு தடவைகளுக்கு மேல் மூன்றாவது தடவையாகவும் ஒருவர் தெரிவு செய்யப்படும் விடயம், அதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

  இந்நிலையில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் தேவையைப் பூர்த்தி செய்கின்ற ஒரு கட்சியாக விளங்க முற்பட்டது. இதன்போது கட்சியின் தலைமைத்துவம் ஒரு இக்கட்டான நிலையை அடைந்தது.கட்சிக்குள்ளே தலைவர் அஷ்ரபுக்குப் பின்னர் இருந்து வரும் சுய நலன்கள், சுய நலத்திற்காக கட்சியை விற்கும் தன்மை, கட்சிக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் திறந்த மனதுடன் பேசுகின்ற தன்மை இல்லாமை என தற்பொழுது எதுவுமே இல்லாத நிலை காணப்படுகின்றது.

  இவ்வாறான நிலையில் கட்சியைக் காப்பாற்றுவதற்காகவும் கட்சிக்குள் எஞ்சியிருக்கின்ற பிரதிநிதிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அன்று இந்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கின்ற தீர்மானத்திற்கு வந்தது. உண்மையில் இவ்வாறான இணக்க அரசியலை மேற்கொள்ள வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. ஆனால், இணக்க அரசியல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட கடிதத் தொடர்புகள், ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையைப் பேணுவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தவறியிருக்கின்றது.

   அன்று இவ்வாறான சந்தர்ப்பங்கள் எழுகின்ற போது மறைந்த தலைவர் அஷ்ரப் அவற்றை ஊடகமயப்படுத்தி மக்கள் முன் கொண்டு சென்றிருந்தார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இப்பொழுது இவற்றையெல்லாம் மக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவதில்லை.

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கும், ஜனாதிபதிக்கும் அல்லது ஆட்சியாளருக்குமிடையே ஒரு புரிந்துணர்வு இருக்கின்றதா என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது. வெளியே சண்டை பிடிக்கின்றவர்கள் உள்ளே ஒற்றுமையாக இருக்கின்றார்களா என்ற கேள்வியை மக்கள் கேட்கத் தலைப் பட்டுள்ளார்கள். 'தம்பியுடையான் படைக்கஞ்சான்' என்ற நிலையிலுள்ள அரசில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகப்பட்டிருக்கின்ற நிலையை உணரக்கொடியதாகவும் உள்ளது.

தமிழர்களின் அரசியல் வரலாறு எப்போதுமே காத்திரமாக தமது எதிர்ப்பு அரசியலைச் செய்கின்ற பண்பு, அதனைக் கையாளுகின்ற தன்மை என்ற அடிப்படை அவர்களிடம் இருக்கின்றது. ஆனால், எமது அரசியல் வரலாற்றில் எதிர்ப்பு அரசியலை விட இணக்க அரசியலிலே ஒத்துப் போகின்றவர்களாக நாங்கள் இருக்கின்றோம். எமக்கு இருக்கின்ற பிரச்சினை இணக்க அரசியலை நாங்கள் எப்படி கொண்டு செல்வது என்பதேயாகும். இனத்துவ அரசியலில் நாங்கள் மிக மோசமான நிலைக்கு தற்போது வந்திருக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஒன்றுபட வேண்டிய தேவை எழுகின்றது.

  நோன்புப் பெருநாள் பிறையோடு சென்று விட்டது. ஆனால், எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் மாட்டோடு வந்து நம் எல்லோரது தலைகளிலும் ஏற முற்படலாம். இவ்வாறான துன்பகரமான சூழ் நிலையில் முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Dear reporter Junaideen please learn to report what function, what theme, etc.

    ReplyDelete
  2. Major communities Sinhalese and Tamils accuse Muslims as opportunists.Is there any truth
    in it? We defend ourselves saying it's not true.Is it accepted?SLMC maintains that it had to join the govt and give it a hand to get 18th amendment passed.Now,what's UPFA assessment of SLMC's support for the amendment?It is clear that SLMC wants to continue with UPFA as long as they are in power and it reckons UPFA will be in power for another one or two terms .SLMC can have ministers but not its people thanks to Buddhist extremism.Not the govt but the extremists will play the role of keeping Muslims away from demanding more and threatening even existing concessions and rights.Is this not what's happening now?Anyhow
    under the UPFA,there's an extremist Sinhala organization to humiliate,demean,harass and
    even to attack Muslims! The UNP loses Muslim votes in this election means,threat against
    Muslims have worked and those Muslim leaders with the govt will have a laugh.Wait,there will
    be a last minute indirect appeal even from ACJU asking the voters,not to let down UPFA.

    ReplyDelete

Powered by Blogger.