Header Ads



டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக அறிக்கை..!

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது ஆணையை வழங்கி, அரசியல் அதிகாரங்களை எம்மிடம் ஒப்படைக்கும் போது மட்டுமே 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாத்து, அதை மேலும் வளர்த்தெடுத்து எமது மக்களின் அரசியல் இலக்கு நோக்கி செல்லும்  இலட்சியக்கனவுகள் சாத்தியமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,....

எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய பயணத்தை எங்;கிருந்து தொடங்க வேண்டும் என்பதில் நாம் கடந்த இருபது வருடங்களாக தீர்க்க தரிசனமாக சிந்தித்து சாத்தியமான வழியில் செயற்பட்டும் வந்திருக்கிறோம்.

அதன்படி, 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாத்து, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் திசை நோக்கி நாம் செல்வதில் பலத்த தடைகளையும், சவால்களையும் உயிர் இழப்புகளையும் எதிர் கொண்டு வந்தவர்கள்.

13வது திருத்தச்சட்;டம் அரைகுறை தீர்வு என்றும், உழுத்துப்போன தீர்வு என்றும், உருப்பட்டு வராத தீர்வு என்றும் நிராகரித்து ஒதுக்கி வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிகள்மக்களுக்கு இதுவரை எந்த தீர்வை பெற்று தந்திருக்கிறார்?..

அரசியல் தீர்வை பெற்றுத் தருவதற்கு மாறாக, 13வது திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் நிராகரித்து வந்ததன் மூலம், எமதுமக்கள் மீது வதைகளையும் வலிகளையும், இடப்பெயர்வுகளையும் பேரவலங்களாக சுமத்தியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே.

இன்று, அவர்களே 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை தேர்தலில் முண்டியடித்துக்கொண்டு போட்டியிடவும் முன்வந்திருக்கிறார்கள்.

13வது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு விடுமா என்றும், அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விடுமா என்றும் கேள்விகளும், சந்தேகங்களும் இன்று எழுந்திருக்கும் போது அன்று அதை அரைகுறை தீர்வென்று ஒதுக்கி வைத்தவர்கள் அதற்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

காலம் கடந்தாவது 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான மாகாண சபை தேர்தலில் போட்டியிட வந்திருப்பதை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். அனாலும், அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.

வடமாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று கனவு காணும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இது தமிழ் பேசும் மக்களுக்கு உரிய தீர்வல்ல என்று கூறி உலகத்தின் கண் முன்னால் வழமை போல் ஒப்பாரி வைத்து அழவே காத்திருக்கிறது.

இது கிடைக்கின்ற வாய்ப்புகளையும் கடந்த காலங்களைப் போல் உதாசீனம் செய்து, எமது மக்களை அரசியல் தீர்வின்றி இருண்ட யுகத்தினுள் தள்ளிவிட்ட சூழலையே எமக்கு ஞாபகப்படுத்துகிறது.

அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும். எமது மக்கள் வதைபட்ட போது அவலம் தீர்க்க வெளியுலகில் இருந்து யாரும் இங்கு வரவில்லை. எல்லாம் முடிந்த பின்னரே சகலரும் வந்தார்கள்.

எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும். எமது மக்களுக்கு அரசியலுரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விருப்பமும், பொறுப்புணர்ச்சியும் தமிழ் கட்சி தலைமைகளுக்கே பிரதானமாக இருந்திருக்க வேண்டும். 

ஆனாலும், அந்த விருப்பங்கள் அவர்களுக்கு இன்னமும் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்தும் அரசுடன் பகைமையை வளர்ப்பது போல் வேசமிட்டு, எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக நீடிக்க வைத்து, மக்களின் அவலங்களை காட்டி மீண்டும் தேர்தலின் வென்று, தமது சுயலாப அரசியலை தொடர்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எண்ணங்களாக தெரிகிறது.

போலியான வீர வசனங்களை பேசிக்கொண்டு, மறுபுறத்தில் அரசின் பின் கதவு தட்டி சொந்த சலுகைகளையும், சுக போகங்களையும் அனுபவிப்போரை எமது மக்கள் தோற்கடிப்பது உறுதியாகிவிட்டது.
மாகாண சபைகளுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்களை பாதுகாத்து மேலும் வளர்த்தெடுப்பது மட்டுமன்றி,..

அதன் ஊடாக, மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்பதை இலக்காக கொண்டு, எமது மக்களின் எஞ்சியுள்ள நிலங்களிலும் அவர்களை மீள்குடியேற்றம் செய்யவும்,....

எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை வளம் செழிக்கும் எழில்மிகு பூமியாக தூக்கி நிறுத்தவும்,....

வெளிப்படையாகவே அரசுடன் உறவுக்குக் கரம் கொடுத்து மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்தும் வருகின்ற ஈ.பி.டி.பி.யினராகிய எமது வேட்பாளர்களை தெரிவு செய்து, அமது மக்கள் அரசியல் ஆணையை எமக்கு வழங்குவதே ஒளிமயமான எதிர்காலத்திற்கான படிக்கற்களாகும்.

இவ்வாறு தெரித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் எமக்கு ஆணை வழங்குவது உறுதி என்றும், ஆணை கிடைக்கும் போது மக்களைக் கைவிட்டு எங்கும் ஓடிப்போகாமல் இறுதிவரை மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து வரும் நாமே சகல விடயங்களுக்கும் பொறுப்பு கூறுவோம் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு செயலாளர்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி

1 comment:

  1. ஆமா.. இத்தனை வருடங்களாக நீங்கள் அமைச்சராக இருந்து செய்யாமல் போன விடயங்களையெல்லாம் இனித்தான் செய்து ......ப் போகிறீர்களாக்கும்!

    பேசாம மீண்டும் ஒருக்கா காத்தான்குடிக்கு வந்து ஈச்சை மரம் எப்படி நாட்டறது.. வளர்க்கிறது என்று ட்ரெயினிங் எடுங்கோ..!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.