Header Ads



இலங்கையில் எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது

வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும், நம்பகமான முறையிலும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  இந்தியாவின் 67வது சுதந்திர நாளை முன்னிட்டு, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இதுகுறித்து மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

“அண்மைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளது. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பும் சிறிலங்கா அரசிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. 

நிலையான அரசியல் தீர்வு ஒன்று காண்பதாக, இந்தியாவுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. 

சமத்துவம், நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே, சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.  போரின் முடிவு, எல்லா சமூகங்களும் சிறிலங்காவில் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான இணையற்ற வாய்ப்பை வழங்கியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.