Header Ads



இலங்கை அரசாங்கத்திடம் முஸ்லிம்கள் விடுக்கும் வேண்டுகோள்

(எம் எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி)

இலங்கையில் பொதுவான ஒருசட்டம் இருக்க வேண்டுமே தவிர முஸ்லிம்களுக்கென தனியார் சட்டம் இருக்கக் கூடாது என இனவாத அமைப்புகள் அண்மைக் காலமாக கோஷம் எழுப்பி வருகின்றன.

பயங்கரவாத யுத்தத்திற்குப் பின் முஸ்லிம்களை ஒருகை பார்த்து விட வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கியுள்ள இந்த இனவாத அடிப்படைவாத சிங்கள பௌத்த இயக்கங்கள் முஸ்லிம்களுக்குள்ள அனைத்து விதமான உரிமைகளையும் நீக்கிவிட வேண்டும் என்ற செயற்திட்டத்தில் இயங்கி வருகின்றன.

முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் அரசியல் யாப்புக்குக் கட்டுப்பட்டே வாழ் கிறார்கள். நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டே வாழ்கிறார்கள். இதில் இதுவரை எந்த மாற்றத்தையும் கேட்டதுமில்லை கோரியதுமில்லை. முஸ்லிம்கள் மட்டுமன்றி இந்நாட்டிலுள்ள அனைத்து இன மத மக்களும் அப்படித்தான் வாழ்கிறார்கள். அப்படியிருந்தும் முஸ்லிம் மக்களின் தனியார் சட்டத்தை நீக்க வேண்டும் என இனவாதிகள் கூறுவது ஏன்?

தனியார் சட்டம் என்பது ஒவ்வொரு மதத்தினருக்கும் உரிய மதச் சட்டங்கு களுடன் கூடிய சட்டங்களை உள்ளடக்குகிறது. இது பௌத்த ஹிந்து முஸ்லிம் கிறிஸ்த பரங்கிய என எல்லா இன மக்களுக்கும் உரியதாகும்.  எல்லா இன மக்களும் தங்களுடைய மதத்தின் சட்டங்களுக்கேற்பவே வாழ்கிறார்கள். முஸ்லிம்களுக்குரிய தனியார் சட்டமும் இந்த வகையிலேயே வழங்கப் பட்டுள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டம் இன்று நேற்று வழங்கப்பட்டதல்ல. இந்த நாட்டு மன்னர்களின் ஆட்சிக் காலம் முதல் வழங்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. இச்சட்டம் அரசுக்கோ அரசியல் யாப்புக்கோ முரண்பட்டதுமல்ல.

முஸ்லிம்களுடைய தனியார் சட்டங்களை டச்சுக்காரர்களின் ஆட்சியில் ஒழுங்குபடுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. 1770 ஆம் ஆண்டில் டச்சுக் கம்பனி கவர்னர் போல்க் என்பவர் இதற்கான நடவடிக்கை எடுத்து 'முகம்மதிய சட்டக் கோவை' எனுப் பெயரில் சட்டங்களை தொகுத்து, அவைகளை தமிழில் மொழிபெயர்த்து முஸ்லிம் கிராமங்களுக்கு விநியோகிக் நடவடிக்கை எடுத்ததுடன் இம்முகம்மதிய சட்டக்கோவை டச்சு நீதிமன்றங்களால் நீதி பரிபாலனத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

இலங்கை முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களுக்கமைய சில மாற்றங்கள் செய்யப்பட்டு இம்முகம்மதிய சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது என்று பேராசிரியர் நடராஜா இலங்கை சட்ட வரலாறு என்ற தனது நூலில் கூறியுள்ளதாக சகோதரர் முஹம்மது சமீம் ‘‘ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்| எனும் நூலில் விபரிக்கிறார்.

இலங்கைக் கரையோர ஆட்சி பிரித்தானியர் கைவசம் வந்தபோது கவர்னர் நோத் இச்சிறப்புச் சட்டங்கள் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தன்னுடைய 1790 ஆம் ஆண்டின் பிரகடனத்தில் பறைசாற்றினார்.

1801 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் அரச நீதி பிரகடனத்தில் சிங்கள வர்களும் முஸ்லிம்களும் அவரவர்களுக்குரிய சட்டங்களின் படியே விசாரிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. 1805 ம் ஆண்டில் கவர்னர் மெயிட்லண்ட் மாகாண நீதிமன்றங்கள் மக்களின் பழக்க வழக்கங்களை மிகவும் கண்டிப்பாகக் கைக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். 1806 ம் அண்டில் முகம்மதியர்களைப் பற்றி சிறப்புச் சட்டங்கள் என்ற சட்டக் கோவையை கவர்னர் ஜோன்ஸ்டன் அலெக்ஸான்டர் ஷகவர்னரின் அரச மன்றத்தில் சமர்ப்பித்தார்.

இவ்வாறாக முஸ்லிம் தனியார் சட்டமான திருமணம், மணமுறிவு, காதி மன்றம், வக்பு சட்டம் என்று சட்டங்கள் காலத்திற்கு காலம் மாற்றங்களுடன் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. 1952ம் ஆண்டு முஸ்லிம்களைப் பற்றிய இச்சட்டம் இலங்கையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

1931ம் ஆண்டில் வக்பு சட்டம் திருத்தப்பட்டு 1962லும் 1982லும் மேலும் திருத்தப்பட்டு, அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. 1982லும் முக்கிய சில மாற்றங்களும் அதில் கொண்டு வரப்பட்டன. முஸ்லிம்களது தனியார் சட்டம் நாட்டுக்கோ ஏனைய இனத்தவர்களுக்கோ எப்பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தங்களது மார்க்க விவகாரங்களுக்கேற்ப தங்கள் பிரச்சினையை தீர்ப்பதன் மூலம் நாட்டின் நீதிமன்ற பிரச்சினைகள் பெரிதும் குறைவடையக் காரணமாகவும் உள்ளது.

எல்லா மதத்தவர்களும் தங்களது மதங்களினதும் பாரம்பரியங்களுக்கு ஏற்பவும் தனியார் சட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும்போது, முஸ்லிம்களை மட்டும் இலக்கு வைத்து பேசுவது அநாகரிகமானது. பயங்கரமானது.

யுத்தத்திற்குப் பின் நாடு அபிவிருத்தியடைந்து இனங்களுக்கிடையில் சிநேக பூர்வமான உறவுகள் மலரும் என்பதற்குப் பதிலாக முறுகல்கள் வளர்க் கப்படுவதையே காண்கிறோம். இது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே இனவாத அடிப்படைவாத சிந்தனைகளைப் பரப்பி, அச்சுறுத்தல்கள் விடுக்கும் இத்தகைய தீய சக்திகளின் அடிப்படைவாததத்தை மட்டுப்படுத்துமாறும் இனங்களுக்கிடையே நட்புறவை வளர்க்க வழிவகுக்குமாறும் நாம் அன்புடன் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

1 comment:

  1. உஹூம். இது செவிடன் காதில் ஊதும் சங்குதான். ஆட்சி மாறி காலம் பதில் தரும்வரை முயற்சியுடன் காத்திருப்போம் !

    ReplyDelete

Powered by Blogger.