இஸ்லாமிய உலகப்பின்னணியோடு பலமான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் அவசியம்
(எஸ்.எல்.எம். பழீல் மு.காங்கிரஸின் உச்சபீட கல்வி, மனித உரிமைகளுக்கான பணிப்பாளரும், முன்னாள் 'சிரான் சமாதான செயலக பணிப்பாளர்)
தமது சொந்த அரசியல் நலன்களுக்கப்பால் சமூகநலன் கருதி வேற்றுமையில் ஒற்றுமை காணும் முஸ்லிம் அமைச்சர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடு இன்றைய காலத்தின் தேவையாகும். இந்த கருத்தொற்றுமையோடு சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையில் எமது முஸ்லிம் அமைச்சர்கள் 'கிராண்ட்பாஸ்' பள்ளிவாசல் விடயத்தில் துரிதமாக இயங்கிய முன்மாதிரியும் அவர்கள் வெளியிட்ட காட்டமான வேண்டுகோள், கண்டன அறிக்கையும் பாராட்டுதற்குரியனவாகும். இந்த ஒருங்கிணைப்பினையும் ஒற்றுமையான கூட்டுச் செயற்பாட்டினையும் மேலும் பலப்படுத்தி எமது சமுதாயத்தினை நோக்கி வீசப்படுகின்ற புதுவடிவிலான சவால்களை பெருமளவிற்கு நாம் எதிர்கொள்ளமுடியும்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமீபகாலங்களாக இடம்பெற்றுவந்த முஸ்லிம்கள் மீதான சீண்டுதல்கள், மதசார்பான வஞ்சனைகள் பள்ளிவாசல் மீதான தாக்குதல்களில் எமது சமூகமும் தலைவர்களும் இவ்விடயங்களை பகிரங்கமாக விவாதித்து சந்தியில் போட்டு இனஒற்றுமையை உடைத்துவிடாமல் பொறுமைகாத்து பக்குவமாக எமது தலைவர்கள் கையாண்ட விதம் பலதரப்பிலும் சிலாகித்து பேசப்படுகின்றது. இதற்கு மாறாக, மறுபுறத்தில் 'வெளிப்படையாகப் பேசி கிளர்ந்தௌ வேண்டும். அரசாங்கத்தை விட்டு எமது அமைச்சர்கள் உடனே வெளியேறவேண்டும்' என்றவாறு உணர்வுபூர்வமாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை போன்ற பல்மொழிபேசும் பல்லின சமுதாயத்தில் இனஒற்றுமை எனும் 'கண்ணாடிக் குவழையை' சந்தியில் போட்டுடைப்பதென்பது இலகுவானது. ஆனால் அது உடைந்து சிதறியபின்பு ஒருங்கிணைத்து, ஒட்டவைத்து உருவமைத்தலென்பது இலேசான கைங்கரியமல்ல.
இனங்களுக்கிடயிலான ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வெகுவாக வேண்டிநிற்கும் யுத்தத்திற்கு பிந்தியதான இக்காலகட்டத்தில் மேலும் முரண்பாடுகளையும் இனவிரிசல்களையும் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தவிர்க்கப்படல்வேண்டும். எனவேதான் 'கிராணட்பாஸ்' சம்பவத்தினைத் தொடர்ந்து சமுதாயத்தினர் ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு சந்திக்கு வந்த வேளையில் அதைப் பக்குவத்துடன், பொறுமையோடு, பொறுப்புணர்ச்சியோடு ஆட்சியாளர்களோடு கையாண்டு தமது அரசியல் முதிர்ச்சியினை முஸ்லிம் அமைச்சர்கள் கையாண்ட முறை போற்றுதற்குரியதாகும். ஆனால் இந்த ஒற்றுமையான 'அமைச்சர்கள் கூட்டினை' மேலும் வலுப்படுத்தி மேலும் முன்னெடுத்து செல்லவேண்டிய பொறுப்பு எமது மதிப்புக்குரிய அமைச்சர்களைச் சார்ந்தது. அரசியல் சாணக்கியம் பொறுமை, விட்டுக்கொடுப்பு உள்ளக முரண்பாடு பழிவாங்கல்களை விட்டெறிந்து தியாகத்துடன் தலைமைத்துவத்துக்குரிய உயரிய பண்பாடுகளை வெளிக்காட்டவேண்டும். இதற்குத் தேவையான ஒத்துழைப்பு, ஆதரவினையும் வழங்கவேண்டியது இந்நாட்டு முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்.
60 வருடத்திற்கு மேலாக சாத்வீக முறையில் போராடி பேச்சு வார்த்தைகளிலும் தோல்வி கண்டு ஆயுதமேந்தி பெரும் அழிவுகளையும் சந்தித்த தமிழினம் இன்று சர்வதேச சமுதாயத்தின் துணையுடன் வேகமாக விடிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் தலைவர்களும் தமது சமுதாய நலன் கருதித்தான் இறுதியில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ' தமிழ்த் தேசிய கூட்டமைப்பு' எனும் குடையின் கீழ் ஜந்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இயங்கி வருகின்றனர். தமிழினத்தின் வாழ்வுரிமைஇசமாதான முன்னெடுப்பு, சுயநிர்ணயம் எதிர்கால விடிவு, தேர்தல்கள் என்பவற்றுக்கான சகல முக்கிய தீர்மானங்களும் இவ்வமைப்பினால் விட்டுக்கொடுப்பு பரஸ்பர புரிந்துணர்வு நல்லிணக்கங்களின் மூலம் கருத்தொற்றுமையோடு மேற்கொள்ளப்படுகின்றன.
வடமாகணத்திற்கான தேர்தலிலே தமது இனத்தின் சுயநிர்ணயத்தை, தன்மானத்தை பாதுகாக்ககூடிய முன்னணி கல்விமானும் முன்னாள் உயர் நீதி மன்ற நீதி பதியுமான விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக ஒருமித்த கருத்தோடு தமிழ் கூட்டணி ஏக மனதாக தெரிவு செய்து சரித்திரம் படைத்திருப்பதை முஸ்லிம் கட்சிகள் பாடமாக கொள்ளவேண்டும். இத்தீர்மானத்தை எட்டுவதில் மூத்த தலைவர் சம்பந்தன் ஜயாவுடைய அரசியல் சாணக்கிய அனுபவ அரசியல் ஞானம் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றது. உள்நாடும் சர்வதேசமும் அவரின் விவேகமான தலைமத்துவ பண்புகளை வெகுவாக பாராட்டி இருக்கின்றன.
தமிழ் தேசியத்தின் கடந்தகால போராட்ட வரலாறும் சமகால ஒன்றிணைந்த பயணமும் அதிக பாடங்களை முஸ்லிம் தலைமைகளுக்கும் தேசியத்திற்கும் போதித்து நிற்கின்றன. அடிப்படையில் எமது நாடளாவிய சமுக பரம்பலும், எமது வேறுபட்ட மத கலாசார விழுமியங்களும் மரபுமுறையான இணக்க அரசியல் கோட்பாடுகளும் எம்மை போராட்ட அரசியலிலிருந்தும் இணக்க அரசியலுக்கு தள்ளிய போதிலும் நாமும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அதிகமான சமகால பிரச்சினைகளில் தமிழினத்தோடு ஒன்று பட்டு நிற்கின்றோம். ஆகவே அவற்றை எதிர்கொள்வதில் அவர்களின் முன்மாதிரியான வேற்றுமையில் ஒற்றுமை காணும் அரசியல் கோட்பாட்டில் முஸ்லிம் கட்சிகளையெல்லாம் ஒன்றிணைத்த வகையிலான 'முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தினால் என்ன? இதற்காக வேண்டி இன்று உருவாக்கம் பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டமைப்பினை ஏன் நாம் அடித்தளமாக பயன்படுத்தக் கூhடாது? என்ற பலமான கேள்வி எழுந்து நிற்கின்றது.
உள்நாட்டிலே பலமான அரசியல் கூட்டமைப்புடன் இந்தியா அமெரிக்கா, சர்வதேச தமிழ் புலம்பெயர் சமுக இணைப்பு என பலமான சர்வதேச பின்ணணியிணையும் தமிழ் சமுதாயம் கொண்டிருக்கின்றது. தமது போராட்டங்களினால் வெல்ல முடியாத உரிமைகள், சுயநிர்ணயத்தை சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமது நியாயமான கோரிக்கைகளை, சர்வதேச ஒத்துழைப்புடன் வென்று கொள்வதற்கு பகீரத பிரயத்தினை தமிழ் தலைவர்கள் முன்னெடுக்கின்றனர். இதற்கிடையில் இஸ்லாமிய உலகம் 175 கோடி சனத்தோகையோடு 55ற்கும் மேற்பட்ட செல்வ வழமிக்க நாடுகளோடு உலகத்தையே போஷிக்குமளவிற்கு இயற்கை வழங்கொண்டனவாக வியாபித்துக் காணப்படுகின்றன. இந்நாட்டிலே எண்ணிக்கையில் சிறுபாண்மையினராக சவால்களோடும் நெருக்கு வாரங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எந்தளவிற்கு எமது இஸ்லாமிய சகோதர உலகத்தோடு தொடர்புகளை கொண்டிருக்கின்றோம்?;. எமது உறவுகளை பலப்படுத்தியிருக்கின்றோம்? என்ற கேள்வி இன்னும் விடை காண முடியாத இடைவெளியாகவே தென்படுகின்றது.
எமது நிலைமைகள் கருதி, ஆட்சியிலிருக்கின்ற அரசாங்கங்களோடு இணக்க அரசியலைத்தான் நாம் பின்பற்றவேண்டும் என்பது பொருத்தமாக இருந்தாலும் மத கலாசார பண்பாடுகள் சார்ந்த அடிப்படை உரிமை விடயங்களிலாவது முஸ்லிம் கட்சிகள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கூட்டாக இயங்குவதே எமது சமுதாயத்தை அழிவிலிருந்தும் காப்பாற்றுவதற்கான ஒரேயொரு வழியாகுமென்பதை நடைமுறை சாத்தியமாக இன்று காண்கின்றோம். ஆகவே எமது இந்த அமைச்சர்களின் கூட்டமைப்பினை எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவாக்கம் செய்து, இஸ்லாமிய உலகத்தை எமது காப்பரணாக இறுக்கமாக எம்மோடு இணைப்பதுதான் இந்நாட்டு முஸ்லிம்கள் உரிமைகளோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்குரிய ஒரேயொரு வழியாகும்.
.jpg)
ஒற்றுமையாக செயல்பட்டால் நன்மைதான் அது பலமும்தான் அதில் மற்று கருத்து கிடையாது.
ReplyDeleteஆனால் தற்போதைய பிரச்சினைக்கு சிங்கள மக்கள் அல்ல மூல காரணம் பெரும் பான்மையான சிங்கள பெளத்த மக்கள் இந்த நாட்டில் நடக்கும் கூத்துக்கு உடன்பாடு இல்லை. ஒருசில சிறு சிறு குழுக்கள் இந்த ராஜபக்ச அன் கோ இன் ஆசீர்வாதத்துடன் நடத்துகிறது .
ஆக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதோ அல்லது அதன் போக்கை எதிர்ப்பதுவோ சிங்கள மக்களை எதிர்பதாக அர்த்தப்படாது என்பதுவே எனது தாழ்மையான கருத்தாகும்.
எஸ் எல் எம் பழீல் அவர்களே, நீங்கள் கூறும் இந்த அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைக்கு ஒரு போதுமே தீர்வுகள் பெற்றுத்தரவில்லை. மாறாக அவர்களின் பதவிகளுக்கும் அரசியல் இருப்புக்கும் சேதாரம் இல்லாமல் இந்த ராஜபக்ச அன் கோ களின் தனி சிங்கள தீவிரவாத துவேசமான அரசியல் முன்னேடுப்ப்புக்கு ஒத்தாசை புரிபவர்களாகவே உள்ளனர்.
கிரான்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினையில் சற்று உற்று நோக்கினால்....... இன்னும் ஓரிரு தினங்களுக்கு இந்த அமைச்சர்கள் தங்களுது கோரிக்கையில் சற்று உறுதியாக இருந்திருந்தால் அல்லது ஓரிரு தினங்களுக்கு தங்களது முடிவை பிந்தி போட்டிருந்தாளே இந்த ராஜபக்க்ஷ அன் கோ வுக்கும் இதில் ஈடுபட்ட சிங்கள கடையர்களுக்கும் நல்ல அழுத்தம் இருந்திருக்கும். அதை விடுத்து சமாதானமாக தீர்வு எட்டப்பட்டதாக அறிவித்தார்கள். நமக்காக குரல் கொடுத்தவர்களும் நன்றாக முக்குடைபட்டார்கள். இதில் மற்றுமொரு விடயம் என்ன வென்றால் நமக்காக குரல் கொடுத்த பிர நாட்டு ராஜ தந்திரிகளுக்கே சங்கடமான தொரு நிலையை உருவாக்கி இருந்தோம். எதிர்காலத்தில் இந்த நாட்டின் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு உடனடி கண்டனங்களோ அல்லது அழுத்தங்களோ இந்த அரசாங்கத்துக்கு கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த அமைச்சர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது.
தயவு செய்து பூனை கண்ணை மூடிக்கொண்டு பால்குடிப்பது போல் இருக்காமல், சரியான யதார்த்தமான மூலத்தை அறிந்து நேர்மையான துணிவான இறைவனுக்கு மட்டுமே அஞ்சிய உண்மையான முஸ்லிமாக அரசியல் செய்யுமாறு இந்த அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.