Header Ads



முஸ்லிம் இனத்துவ அடையாளங்கள் மீதான நெருக்குவாரங்களும், அதற்கான தீர்வும்

(அஸ்மி ஏ. கபூர் - மாநகர சபை உறுப்பினர்)

இலங்கை அரசியல் அரங்கில் இனத்துவ அடையாளத்தை முன்நிறுத்தி நிகழ்த்தப்பட்டு வருகின்ற முஸ்லிம்கள் மீதான இனத்துவ அடையாள ஒடுக்குமுறை|| பேரினவாத செயற்பாடுகள் தொடர்பான நாம் இறந்தகால, நிகழ்கால, நிகழ்வுகளினூடே எதிர்காலத்தை அறியவேண்டியவர்களாகவிருக்கின்றோம். இலங்கையின் பௌத்த மதத்தின் வருகை பற்றியும், அரசர்களது வரலாற்று தொடர்பியல் பற்றியும் தீபவம்சமும், மகாவம்சமும் குறிப்பிடுகின்றன. கி.மு. 2000ம் ஆண்டிலிருந்து இலங்கை நாட்டிற்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான தொடர்பை வரலாற்றிலிருந்து காணலாம்.

1505ம் ஆண்டில் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நாட்டைப் பாதுகாப்பதில் முஸ்லிம்களின் பங்கு அவசியமானதாகவும் முக்கியமானதாகவும் காணப்பட்டது. அதேபோல் ஒல்லாந்தருக்கும், ஆங்கிலேயருக்கும் முஸ்லிம்கள் முள்ளாகவே தென்பட்டனர். சுதந்திரத்திற்கு முன்னராக காலத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான ஒற்றுமை இன்றியமையாத ஒன்றாகும். சுதந்திரத்திற்கு பின்னராக இலங்கையில் 1956ம் ஆண்டிற்கு பிறகான காலம் தான் வேற்றுமைகள் தலைதூக்க ஆரம்பித்தது. இனப்பல்வகைமை கொண்ட நாடொன்றில் ஏற்பாடுகின்ற அசாதாரண சூழல் உக்கிரமடைந்து யுத்தம் தொடர்ந்து அது நிறைவடைந்ததாகி விட்டது. இருந்த போதும் தீர்வு காணப்படாமலும் போரின் வடுக்களை மறாவா நிலையிலும் மீண்டும் அசாதாரண நிலை தோன்றுமா என்கின்ற ஐயப்பாடு எழுகின்றது. 

இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் நிலை என்ன? யுத்தத்தின் போது நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான கட்டமைப்பு, நிர்ணயம் என்பன தொடர்பில் வெகுவாகக் கூர்ந்து அவதானிக்க வேண்டிக்கிடக்கிறது. போருக்கு முன்னரான சூழலில் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டறிந்து அதற்கானத் தீர்வுகளைப் பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சீரான தலைவர்கள் அதன் பொறுப்புக்களை ஏற்றிருந்தார்கள். சமூக நலன்களையும் அதன் அவசியமான அவசரமான தன்மையினையும் கருத்திற்கொண்டு அறிஞர் சித்திலெப்பை போன்றவர்கள் செயலாற்றினார்கள். 

தமிழ் மக்கள் இன ஒடுக்குமுறைக்குட்பட்ட போது போராட்டம் மூலம் அவர்களது உரிமைக் கோரி நின்றவர்களாலேயே முஸ்லிம் சமூகம் ஒரே மொழி நிலக்கட்டமைப்புக் கொண்ட தமிழ் சமூகம் மீது நம்பிக்கை இழக்க காரணமாயிற்று. அதனால்தான், நமக்கான சுயாதீன வழியையும் அதனூடான நிர்ணயத்தையும் மறைந்த தலைவர் அஷ;ரஃப் முன்மொழிந்திருந்தார். அவற்றை செயற்படுத்துவதற்கான அவகாசம் வழங்கப்படாமலே அவர் இறைவனடி சேர்ந்தார். வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் முஸ்லிம்கள் அனுபவித்த இன்னோரன்ன இடர் நிலைக்கு அப்பால் 

1. கொல்லப்பட்ட உயிர்கள் Æ விதவைகள் 
2. காணாமல் போனவர்கள் 
3. காயம் ஏற்பட்டோர்
4. இடம்பெயர்ந்தோர்
5. பறிமுதல் செய்யப்பட்ட வயல்நிலங்கள்
6. மூடப்பட்டிருக்கும் வழிபாட்டுத்தலங்கள் (பள்ளிகள், மத்ரஸாக்கள்)
7. திட்டமிட்டு பறிக்கப்பட்ட எல்லை நிர்ணயம்

என்பன தொடர்பில் பேசவும் இது தொடர்பான எந்தவொரு ஆவணப்படுத்தலும் முழுமையாக இல்லாத நிலையில் சமகால அரசியல் சர்வதேச மயப்பட்டு போனநிலையில் எமது யுத்தகால இழப்புகளுக்குக்கூட சீராக வழிகாட்டுதலின்மையினால் சமூகம் இருண்ட நிலையை நோக்கி தள்ளப்பட்டிருக்கும் நிலையில் நிகழ்காலத்தில் எமதுக்கெதிரான பேரினவாத தீவிர போக்குடையவர்களால் ஹலால் விடயம் தொடர்பான பிரச்சினை, தொடர்ச்சியான பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல், எதிர்ப்பு நடவடிக்கைகள் முஸ்லிம்களின் வியாபார தளங்களுக்கெதிரான வன்முறை, முஸ்லிம் பெண்கள் (ஹிஜாப்) ஆடை தொடர்பான விமர்சனங்கள் என பலதரப்பட்ட நெருக்குவாரங்களை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வருகின்றது. இந்த நிலை தொடருமானால் மிகுந்த இன்னல்களை முஸ்லிம் சமூகம் சந்திக்க நேரிடும். இதற்கான தீர்வு பொறிமுறை என்ன? முன்னர் குறிப்பிடப்பட்ட யுத்த அழிவுகள் தொடர்பான எந்தவொரு ஆவணப்படுத்தலுமின்றி அவற்றை கிடப்பிலே போட்டு விட்டு தற்போது இடம்பெறுகின்ற பேரினவாத செயற்பாடுகள் தொடர்பான காத்திரமான முடிவு அல்லது முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான முஸ்திபுகளோ காணமுடியாமல் இருப்பது நம் சமூகம் கொண்டிருக்கும் பாரிய குறை என்று கூறவேண்டும். இவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வை அரசியல் கட்சிகளோ அதன் தலைமைத்துவங்களினூடாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பது முரண்நகையே. 

அதிகாரங்களுக்காகவும் உள்வீட்டுச் சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்குமே காலம் அவர்களுக்குப் போதுமானதாகும். இதற்கான மாற்று வழியாக சமூகத்தின் அனைத்துத் தரப்புகளிலிருந்தும் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், மார்க்க அறிஞர்கள், ஏனைய சமூகநலன் இயக்கங்களின் பிரதிநிதிகள் என்பவர்கள் தங்களது சுயவிருப்பு வெறுப்புகளுக்கப்பால் சமூகத்தின் நிலைதொடர்பாக ஆழமான கதையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு முறையான ஆவணப்படுத்தலினூடே சமூகத்தின் அனைத்து விடயங்களையும் கையாளுதல் வேண்டும். அவர்களாலேயே நிகழ்கால சம்பவங்களுக்கான தீர்வு இறந்த கால இழப்புக்களுக்கான நிவாரணமும் நியாயமும் எம்மால் பெறமுடியும். இல்லையேல் நாம் இன்னும் பின்நோக்கி நகர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகும். சமூகநலனில் அக்கறையுள்ள சமூகமாக மாறி எமது அடையாளங்களையும் எமது இருப்பையும் தாமே தக்க வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ் யாவற்றுக்கும் போதுமானவன்.

No comments

Powered by Blogger.