வெலிவேரியாவுக்காகவா கிராண்ட்பாஸ் முன்னெடுக்கப்பட்டது..?
(பேராசிரியர் கீதபொன்கலன்)
அடுத்த பிரச்சினை ஆரம்பமாகின்ற போது வெலிவேரிய மறந்து போகும். இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என்கின்ற வாதத்துடன் கட்டுரையை முடித்திருந்தோம். இதனுடன் இணைந்த அரசாங்கத்துக்கு பயனுடைய ஒரு பரிமாணமும் உள்ளது. அடுத்த தேர்தலிலும் கூட வெலிவேரிய மறந்துவிடப்படக் கூடும். அது அரசாங்கத்துக்கு சாதகமானதே. எனவே, செப்டெம்பர் 21 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற போது வெலிவேரிய என்ற ஒன்று இடம்பெற்றதா என்று கூடத் தோன்றக் கூடும். இருந்த போதும், வெலிவேரிய அரசாங்கத்துக்கு எதிரான பாரிய இயக்கமொன்றின் ஆரம்பமாக இருந்திருக்கக் கூடிய உள்ளார்ந்த இயலுமை காணப்படவே செய்தது. இருப்பினும், அது எதிர்க்கட்சிக் கூட்டணியினால் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்ற போது மட்டுமே செயற்படத்தக்கதாக இருந்திருக்கும். புத்திசாலித்தனமான எதிர்க்கட்சி ஒன்று அதனை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வதில் மிகுந்த அக்கறை உடையதாக இருந்திருக்கும்.
இந்த அடிப்படையிலேயே கடந்த வாரம் வெலிவேரிய படுகொலைகளுக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் போராட்டம் ஒன்று கோட்டையில் இடம்பெற்றிருந்தது. இவ் விடயத்தில் எதிர்க்கட்சிகளின் சவால் என்னவெனில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் வரையாவது வெலிவேரியாவை அரசியல் நிகழ்ச்சி நிரலில் தக்க வைத்துக் கொள்வது. அது அவ்வளவு இலகுவானதாக இருக்கப் போவதில்லை. எனவே, சிறிதாக ஒரு கூட்டம் போட்டோம். கூச்சலிட்டோம், வீடு போனோம் என்கின்ற வழமையான அணுகுமுறை பலனளிக்கப் போவதில்லை. இப்போது எதிர்க்கட்சிகளுக்கு தேவையானதெல்லாம் ஒரு வெற்றி, சற்று பலனுடைய ஒரு வெற்றி. அந்த ஒரு வெற்றி தொடர்ச்சியான சங்கிலித் தாக்கம் ஒன்றை ஏற்படுத்திவிடக் கூடும். அந்த முதல் வெற்றிக்கு இப்போது இடம் பெறுகின்ற சில நிகழ்வுகள் பயனுடையவையாக இருக்கக் கூடும். உதாரணமாக. வெலிவேரிய, கிராண்ட்பாஸ் போன்ற சம்பவங்களின் அடிப்படையில் அரசாங்கம் புதிய எதிரிகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளமையினால் அதன் வாக்குத் தளத்தில் ஒரு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத் தியம் உள்ளது. இருப்பினும், அது மாற்றத்தின் ஆரம்பமாக அமையுமா இல்லையா என்பது எதிர்க்கட்சிகளின் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி வெலிவேரியவை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய இயலுமையில் உள்ளது. அந்த இயலுமை இன்றைய நிலையில் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும் வெலிவேரியாவின் உள்ளார்ந்த இயலுமை அரசாங்கத்துக்கு மெதுவாக புலப்படத் தொடங்கி இருந்தது.
ஆரம்பத்தில் ஒரு அசட்டை இருக்கவே செய்தது. ஆயினும் விரைவாகவே வெலிவேரியவின் தேசிய பரிமாணமும் அந்த கோபத்தின் ஆழமும் புரிய ஆரம்பித்திருந்தது. உதாரணமாக வெலிவேரிய சம்பவத்தின் போது இராணுவத்தினர் பொது மக்களால் தாக்கப்படுவதை தெளிவாகவே பார்க்கக் கூடியதாக இருந்தது. அது தொடர்பில் பொது மக்கள் மட்டத்தில் இருந்து பாரிய கண்டனங்கள் எதுவும் எழுந்திருக்கவில்லை. அதுவே அரசாங்கத்திற்கு ஒரு செய்தியாக இருந்திருக்க முடியும். அத்துடன் இராணுவம் தொடர்பிலும் அந்தப் பகுதி அரசியல் வாதிகள் தொடர்பிலும் குறிப்பாக பசில் ராஜபக்ஷ பற்றியதுமான கண்டனங்களும் அதிருப்தியும் பாரதூரமானதாகவே இருந்தது. அத்துடன் எதிர்க்கட்சிப் போராட்டம் என்றவுடன் இவ்விடயம் அரசியல் ரீதியாக பயன்படுத்தப்படுவது அரசாங்கத்திற்கு எவ்விதம் பாதகமானதாக அமையும் என்பது புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. அத்துடன் மக்கள், அதாவது சிங்கள மக்கள் பெருமளவில் வீதிக்கு இறங்குகின்ற போது (மட்டுமே) அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதை கடந்த காலத்தில் கண்டிருக்கின்றோம். இது இப்போதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது பிரச்சினைக்குரிய தொழிற்சாலை மூடப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய தொழிற்சாலை நிச்சயமாக மூப்படுமா, இல்லையா என்பது இப்போதே கூறப்பட முடியாதாயினும், அறிவிப்பு இப்பிரச்சினை தொடர்பிலான அரசியல் கரிசனை காரணமாகவே மேற்கொள்ளப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. உடனடியாக நெருப்பை தணிப்பதற்கு (பிரச்சினையை தீர்ப்பதற்கு) சில விடயங்கள் கூறப்படுவதும் பின்னர் அவை நடைமுறைப் படுத்தப்படாமல் விடப்படுவதும் இப்போது சாதாரணமாகியுள்ளது.
இவ் அறிவிப்பு வெலிவேரிய அடிப்படையிலான சிங்கள மக்களின் கோபத்தை தணித்து விடுமா என்பது (தேர்தல் முடிவு வெளிவரும் வரை) பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது. வெளிவேரியவின் தாக்கத்தையும் எதிர்க்கட்சிகள் அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சாத்தியத்தையும் மந்தப்படுத்த உதவிய ஒரு விடயம் அல்லது சம்பவம் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் ஆகும். வெலிவேரியாவில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக கிராண்ட்பாஸ் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது என்ற அடிப்படையிலான ஒரு வாதம் அரசாங்க விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே. இது வெலிவேரியாவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு தாக்குதலா அல்லது தேசிய ரீதியில் முஸ்லிம் நலன்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற தாக்குதல்களின் ஒரு பகுதியா என்பது இன்னும் தெளிவானது அல்ல. ஆயினும் அது கவனத்தை திசைதிருப்ப உதவியது என்பதில் சந்தேகமில்லை. அது எவ்வாறிருந்த போதிலும் இவ்விடயத்தில் முஸ்லிம்களின் நிலை பரிதாபகரமானதாக மாறியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் மத வணக்கஸ்தலங்கள் மீதும் முஸ்லிம் நலன்கள் மீதும் தாக்குதல்கள் இடம்பெறத் தொடங்கிய போது, அது வெறும் தப்பபிப்பிராயத்தின் விளைவே என்று முஸ்லிம் அரசியல் வாதிகள் உட்பட பலரும் கூறி வந்தனர். அப்போதே இங்கு அடிப்படையான கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் சில காணப்படுகின்றன.
எனவே, சிங்கள முஸ்லிம் பிரச்சினை இலகுவாக போய்விடப் போவதில்லை என்பதை இப்பகுதியில் சுட்டிக் காட்டி இருந்தோம். அது இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு சீரான வகையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இத்தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கான குறிப்பாக இவ்வாண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் தொடர்வதற்கான சாத்தியங்கள் உறுதியாகக் காணப்படுகின்றன என்பது துரதிஷ்டமானது. இங்கு இதனிலும் துரதிஷ்டமானது என்னவெனில் முஸ்லிம் மக்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத ஒரு நிலையில் இருப்பது ஆகும். தமது நலன்கள் மீது திட்டமிட்ட அடிப்படையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதும் அவை தொடர்வதற்கான சாத்தியம் இருப்பதும் தெரிந்தும் அவை தொடர்பில் உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாமல் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய யதார்த்தத்தினுள் அவர்கள் உள்ளனர். கிராண்ட்பாஸ் வணக்கஸ்தலம் மீதான தாக்குதல் இடம்பெற்ற போது அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் வெறுமனே சும்மா கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தமை தெளிவாக அவதானிக்கப்படக் கூடியதாக இருந்தது. அத்துடன் தாக்குதலின் பின்னர் "இரு தரப்பினரும் சமரசமாக பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டார்கள்' என்ற நிலைப்பாட்டிற்கு சம்மதமளிக்க வேண்டிய ஒரு கட்டாய நிலையினுள் அவர்கள் தள்ளப்பட்டிருந்தனர். இதே விதமான ஒரு அரசியல் சூழல், தாக்கப்படுவதும் பின்னர் சமரசமாகப் போய்விடுவதும் நுகேகொடையில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னரும் இடம்பெற்றதாக ஞாபகம். தாக்கப்பட்ட சமூகத்திற்கான நீதி என்ற கோணத்தில் இருந்து பார்க்கையில் முக்கியமானது. தாக்கியவர்கள் யார், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதாகும். பிரச்சினை சுமு கமாக தீர்க்கப்பட்டிருந்தாலும் (?) குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா. அவ்வாறு தண்டிக்கப்படாத போது அடுத்த தாக்குதல் நிறுத்தப்படுவதற்கான சாத்தியமும், அவ்விதம் நிறுத்தப்படும் என்கின்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான சாத் தியமும் குறைந்து போய்விடும். தாக்கப்பட்டதன் பின்னர் சமரசமாகப் போய்விடுகின்ற அணுகுமுறையை முஸ்லிம்கள் எத்தனை காலம் பின்பற்றுவார்கள் என்பது முக்கியமான ஒரு பிரச்சினை ஆகும். இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் சமூக மட்ட உறுப்பினர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளியொன்று ஏற்படுவதற்கான சாத்தியமொன்று உள்ளமை மறுக்கப்படுவதற்கில்லை. கிராண்ட்பாஸ் தாக்குதலிலும் அதிகமான அச்சத்தைத் தூண்டக் கூடிய சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றது.
மாவதகம பரகாடெனிய பள்ளிவாசலுக்கு முன்னுள்ள "பள்ளிவாசல் அமைதியாகச் செல்லவும்' என்கின்ற அறிவிப்புப் பலகையை நீக்கும்படி அப்பிரதேச பொலிஸாரின் வேண்டு கோளுக்கேற்ப பெலஸ்ஸ நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இவ் அறிவிப்புப் பலகை நீக்கப்பட வேண்டும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பிரதேச பௌத்த பிக்குகள் தலைமையில் போராட்டம் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போது பொலிஸாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப பலகை நீக்கப்படவுள்ளது. அவ்வடிப்படையில் நோக்குகையில் கிராண்ட்பாஸில் இடம்பெற்றது போலவே தாக்குதல்தாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஒரு வித புரிந்துணர்வும் ஒருங்கிணைப்பும் காணப்படுவது போல் உள்ளது. இங்கு அச்சமூட்டுவது என்னவெனில் பெயர்ப் பலகை நீக்கப்பட வேண்டியதற்கான காரணமாக காவல்துறையினால் முன்வைக்கப்பட்ட விடயம் ஆகும். பிரதேச சிங்கள மக்களிடையே இது பதற்றத்தை தூண்டுவதை தடுப்பதற்காக இந்நடவடிக்கை அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாதமும் அது நீதிமன்றங்களினால் ஏற்றுக் கொள்ளப்படுவதும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை மட்டுமல்ல, ஏனைய சிறுபான்மையினரையும் அச்சமூட்டக் கூடியதாகும். இப்போது சிங்கள மக்கள் மத்தியில் பதற்றத்தை தணிப்பதற்காக வேறு என்னவெல்லாம் செய்யப்படக் கூடும் என்ற கேள்வி ஏற்படுகின்றது. அது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் மேற்கூறப்பட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் ஆதரவுத் தளத்தையும் வாக்கு வங்கியையும் பாதித்து வருவதாகவே தோன்றுகின்றது. குறிப்பாக, முஸ்லிம் வாக்குகள் அரசாங்கத்திடம் இருந்து விலகி வருவதாகவே தோன்றுகின்றது. நியாயமான தேர்தல் ஒன்றின் முடிவில் இதன் தாக்கம் தெளிவாகவே இருக்க வேண்டும். இருப்பினும், உதாரணமாக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் முஸ்லிம் வாக்குகளின் இழப்பு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனால் முஸ்லிம் வாக்காளர்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அவர்கள் இலகுவாக முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க முடியும். இருப்பினும், உண்மையில் காங்கிரஸ் அரசாங்கத்துடனேயே உள்ளமையினால் இறுதியில் முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்த மாதிரியே இருக்கும். எனவே, முஸ்லிம் நலன்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக அவர்களது வாக்குகளை இழக்க வேண்டுமே என்ற கவலை அரசாங்கத்துக்கு இருக்க வேண்டியதில்லை.
.jpg)
Post a Comment