தூக்கில் தொங்குவது போன்ற படக்காட்சி - 11 வயது சிறுவன் வபாத்
(எம்.எஸ்.பாஹிம்) தொலைக்காட்சியில் தூக்கில் தொங்குவது போன்ற படக்காட்சியை பார்த்துவிட்டு அதுபோன்று செய்ய முயன்ற சிறுவன் ஒரு வன் பரிதாபகரமாக இறந்த சம்பவமொன்று காலி தலாபிட்டிய பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றது.
இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 11 வயதான எம்.என்.என்.பர்ஹான் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டினுள் சேலைத் துணியால் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் கழுத்து சிக்கி மூச்சுத் திணறியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.
சம்பவம் இடம் பெற்ற சமயம் வீட் டில் எவரும் இருக்கவில்லை என அறிய வருகிறது. சிறுவனின் மூத்த சகோதரனும், சகோதரியும் உறவினர் வீடொன்றுக்குச் சென்றிருந்த போது தந்தை வேலைக்குச் சென்றுள்ளார். தாய் வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளதால் அப்பம்மாவிடமே இச்சிறுவன் வளர்ந்து வந்துள்ளான்.
குறித்த சிறுவனுக்கு பிஸ்கட் வாங்குவதற்காக அப்பம்மா கடைக்குச் சென்றிருந்தவேளை இவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்ததாக அறியவருகிறது. இவர்கள் பலகை வீடொன்றிலேயே வசித்து வந்ததோடு வீட்டில் மின்சார வசதி இல்லாததால் வாகன பற்றரி மூலமே மின்சாரம் பெற்று தொலைக்காட்சி பார்த்துள்ளனர்.
சிறிது நேரத்தின் பின்னர் இறந்த சிறுவனின் மூத்த சகோதரன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்பொழுது தம்பி ஊஞ்சல் துணியில் தொங்குவதையும், அருகில் பிளாஸ்டிக் கதிரையொன்று இருப்பதையும் கண்டுள்ளார். இதனையடுத்து அயலிலுள்ளவர்கள் சிறுவனைப் பரீட்சித்தபோது அவன் இறந்துள்ளமை தெரியவந்தது.
இம்மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்றுக்காலை கராப்பிட்டிய பெரியாஸ்பத்திரியில் நடைபெற்றது. சிறுவனின் இறுதிக் கிரியை நேற்றுப் பிற்பகல் தலாப்பிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது.
சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சிறுவனின் தந்தை நிலாம்டீன், தான் வீட்டில் இல்லாதபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், நோன்பு மாதத்தில் மகனை பல புலமைப்பரிசில் பரீட்சை, கருத்தருங்குளுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறினார். தான் ஒருபோதும் இப்படியொரு சம்பவம் இடம்பெறுமென எதிர்பார்த்திருக்கவில்லை என்றும் கூறினார்.
சம்பவம் குறித்து மாணவனின் கற்கும் அல்-அக்ஷா கனிஸ்டவித்தியாலய அதிபர் றிஸ்கி கருத்துத் தெரிவிக்கையில், மாணவர்கள் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிகளை பார்த்து அப்படியே நம்பி விடுவதால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறுவதாகவும், பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் எனவும், அதன்மூலம் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தவிர்க்க முடியுமெனவும் குறிப்பிட்டார். இறுதிக் கிரியையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
.jpg)
Post a Comment