A/L பரீட்சை 5 ஆம் திகதி ஆரம்பம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கள்கிழமை ஆரம்பமாகி 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 80 ஆயிரத்து 560 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 318 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாகவும் 45 ஆயிரத்து 242 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் பரீட்சை எழுதுகின்றனர். இப் பரீட்சையை நடத்துவதற்கென நாடுபூராவும் 2164 பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
க.பொ.த.(உயர்தர) பரீட்சைகள் நடைபெறும் மண்டபத்திற்குள் கையடக்கத் தொலைபேசிகளை பரீட்சை மண்டப மேற்பார்வையாளரைத் தவிர வேறு எவரும் உபயோகிக்க முடியாது எனவும் பரீட்சை பணிக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பரீட்சார்த்திகள் தம்முடன் கையடக்கத் தொலைபேசிகளை எக்காரணம் கொண்டும் பரீட்சை மண்டபத்திற்குள் எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பரீட்சைகள் ஆரம்பமாகும் தினத்திற்கு அண்மித்த ஐந்து நாட்களுக்கு முன்னரிலிருந்து பரீட்சைகள் நிறைவடையும் வரை பரீட்சார்த்திகளுக்கு மாலை வகுப்புக்களை ஒழுங்கு செய்தல், வகுப்புக்களை நடத்துதல், கருத்தரங்குகள் பாட இணை விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துதல், பரீட்சைக்கால அங்கீகரிக்கப்பட்ட வினாத்தாள்களை வெளியிடல் பரீட்சை வினாப்பத்திரங்களின் வினாக்களை வழங்குவதாக அல்லது அதற்கு சமமான வினாக்களை வழங்குவதாக சுவரொட்டிகள் பதாதைகள் துண்டுப் பிரசுரங்கள் இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்தல் அல்லது அவ்வாறானவைகளை வைத்திருப்பது என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. எவரேனும் ஒரு நபர் அல்லது நிறுவனம் இக்கட்டளையை மீறி செயற்பட்டால் அவர்கள் பகிரங்க பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படுவர் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளின் போது ஏதேனும் அசம்பாவிதம் அல்லது பிரச்சினைகள் ஏற்படின் 011 2411111 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது 011 2784422 என்ற தொலை நகல் மூலம் தொடர்பு கொள்ளமுடியும் மேலும் 011 2784208 011 2784537 0113188350 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் விசேட நிலையங்களுடனும் தொடர்பு கொள்ள முடியும். அத்தோடு 1911 என்ற விசேட இலக்கத்துடனும் நேரடியாக தொடர்பை ஏற்படுத்த முடியும். இது தவிர பொலிஸாருடனும் தொடர்பு கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Post a Comment