வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக 46 பேர் கொண்ட திட்டமிடல் குழு
வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசாங்கம் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான திட்டமிடல் குழுவொன்றை உருவாக்கியுள்ளது.
வடக்கு மாகாணத்தின் நிர்வாக மையமாக மாங்குளத்தையும், கலாசார மையமாக யாழ்ப்பாணத்தையும், வர்த்தக மையமாக கிளிநொச்சியையும், துறைமுக நகராக மன்னாரையும் அபிவிருத்தி செய்யும் வகையில், திட்டங்களை வகுப்பதற்காகவே வடக்கு மாகாண தேசிய பௌதிக திட்டமிடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள நகரஅபிவிருத்தி அமைச்சின் செயலகத்தில் கடந்த நடந்த கூட்டத்திலேயே இந்தக் குழு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமைச்சர் வீமல் வீரவன்ச, வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறி, வீடமைப்பு அமைச்சின் செயலர் விமலசிறி, தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களப் பணிப்பாளர் ஜெயசேகர, வடக்கு மாகாணசபையின் செயலர் விஜயலக்சுமி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணசபையின் பிரதம செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 46 பேர் கொண்ட இந்தக் குழு, வடக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களை தயாரிக்கவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கலாசாரம், சமூக வாழ்வியல், மற்றும் முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் வகையில், அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமது கருத்துகளை தெரிவிப்பதற்காக குறிப்பிட்ட பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உபகுழுக்களையும் இந்தக் குழு அமைக்கவுள்ளது.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடத்தப்படவுள்ள நிலையில், வடக்கு மாகாண அபிவிருத்திக்கான குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது.

ஏமாறாதே .... ஏமாறாதே .... ஏமாற்றாதே ........... ஏமாற்றாதே........
ReplyDelete