மியன்மாரில் வெள்ளம் - 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
பருவ மழை காரணமாக கிழக்கு மியான்மரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு உதவி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர் என்று அரசு ஊடகங்கள் தகவல் அளித்தன. மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரென் மாநிலத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 79 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 3 பேர் பலியானதாகவும், ஒருவரைக் காணவில்லை என்று பத்திரிகை செய்தி அறிவிக்கின்றது. கடந்த 27-ம் தேதி தொடங்கிய மழையில் நிலச்சரிவுகள் காரணமாக சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், சுமார் 245 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவித்தது.
அண்டை மாநிலமான மோனில் 5 ஆயிரம் பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். அதில் சிலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இந்த இரு மாநிலங்களுக்கும் தண்ணீரை சுத்தம் செய்ய உதவும் மாத்திரைகளுடன் மருத்துவ உதவிகளையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது. இர்ரவாடி டெல்டா பகுதியில் உள்ள ஆறுகளின் இரண்டு கரைகளிலும் வசிக்கும் மக்கள் இயற்கைப் பேரழிவுகள் குறித்து தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும், மின் அதிர்ச்சிகள், பாம்புகள், நிலச்சரிவுகள் மற்றும் மரங்கள் விழுதல் போன்றவை குறித்தும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Allahu Akpar
ReplyDelete