தொழிற்பயிற்சி அதிகார சபையின் 18 வருடப் பூர்த்தி நிகழ்வு (படங்கள்)
(ஏ.ஏல்.நிப்றாஸ்)
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 18 வருடப் பூர்த்தியை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட நிகழ்வு நிந்தவூரிலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றது.
தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர் மற்றும் முன்னாள் உதவிப் பணிப்பாளர் ஏ.அமீர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் 'தொழில்நுட்ப மற்றும் தொழில்வாய்ப்பு சவால்களை எதிர்கொள்ள இளைஞர்களை தயார்படுத்தல்' என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர் உரையாற்றினார். பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.பசீது வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து விஷேட துஆப் பிரார்த்தனையும் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொழில் அமைச்சராக இருந்தபோது, 1995ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இவ் அதிகார சபையானது தற்போது இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது. 6 தேசிய தொழிற்பயிற்சி நிறுவனங்களையும், 22 மாவட்ட தொழிற்பயிற்சி வளாகங்களையும் 230 இற்கு மேற்பட்ட கிராமிய தொ.ப. நிலையங்களையும் இது கொண்டுள்ளது.


Post a Comment