இஸ்லாம் மிக அருமையான வழிகாட்டுதல்களை சொல்லிக்கொடுக்கிறது - பீடாதிபதி பாக்கியராசா
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
குடும்ப உறவைப் பேணுவதில் இஸ்லாம் காட்டும் வழிகாட்டல் பின்பற்றப்பட்டால் உலக முரண்பாடுகள் நிச்சயமாக நீங்கும் என மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா தெரிவித்தார்.
ஓட்டமாவடி அல்கிம்மா சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் இன நல்லுறவைப் பேணும் வகையிலான வருடாந்த புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு 12-07-2013 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது அதில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களின் புனித நோன்பானது கோடிக்கணக்கான ஏழைகளின் பசியை உணர்த்திக் காட்டுவதுடன் அவர்களுக்கு உணவும் அளித்து வருகிறது. இஸ்லாமிய மதம் மிக அருமையான வழிகாட்டுதல்களை சொல்லிக்கொடுக்கிறது. நான் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களின் காலை நற்சிந்தனை கேற்பேன்.எனக்கு என்ன வேலைகள் இருந்தாலும் நான் முஸ்லிம்களின் காலை நற்சிந்தனை கேட்காமல் இருந்திட முடியாது.
ஆதில் ஒரு நாள் நான் கேட்டேன்.குடும்ப உறவை துண்டிப்பது பற்றியும் பேசாமல் இருப்பது பற்றியும் இஸ்லாம் அழகான வழிமுறையை சொல்லித் தருகிறது. அதாவது மூன்று நாளைக்கு மேல் பேசாமல் இருந்து விடக்கூடாது.அவ்வாறு இருந்தால் அவனை மார்க்கத்தை விட்டு வெளியேறியவன் பட்டியலில் சேர்க்கப்படும் என்று இஸ்லாத்தின் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்று இலங்கையில் உலகளாவிய ரீதியில் குடும்பங்களான அம்மா,அப்பா,சகோதர சகோதரிகள்,மாமி,மச்சான் இவர்களுக்கு மத்தியில் மிக நீண்ட பகையும் பிரச்சினையும் உருவாகின்றது. நிம்மதியில்லாத வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையில் குடும்பை உறவைப் பேணுவதில் இஸ்லாம் சொல்லும் அருமையான வழகாட்டுதலைப் பெரும் பட்சத்தில் இந்தப் பிரச்சினைகள்,நீண்ட காலப் பகைகள் நீங்கி சிறந்த முன்மாதிரிக்க சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். அதனால்தான் இஸ்லாம் மார்க்கம் சிறந்த போதனைகளை போதித்து வரும் மார்க்கமாக திகழ்கிறது.
எனவே உலகத்திலுள்ள முரண்பாடுகள்,பிரச்சினைகள்,குடும்பப் பிணக்குகள் நீங்க குடும்ப உறவைப் பேணுவதில் இஸ்லாம் கூறும் வழிகாட்டுதலை அடியொட்டி வாழவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அல்கிம்மா சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் சவூதி அரேபிய பணிப்பாளர் அஷ்ஷெய்க் அபூ ஹுஸாம், ,விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்,ஸ்ரீ.ல.மு.கா காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, அல்கிம்மா சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் ஓட்டமாவடிக் கிளைப் பொறுப்பதிகாரி எம்.எஃப்.எம்.ஹாறூன்(ஸஹ்வி),மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்வியற் கல்லூரி உப பீடாதிபதிகள் ,விரிவுரையாளர்கள், கல்விக் கல்லூரி மாணவ மாணவிகள் ,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment