நாதியாவின் கதை, காஸாவின் கதை, பலஸ்தீனத்தின் கதை, உலகளாவிய முஸ்லிம்களின் கதை!
(அஷ்ரப் சிஹாப்தீன்)
அன்று காலை எனது தாயாரின் வீட்டுக்குச் சென்றது ஞாபகம் இருக்கிறது. என்னைக் கண்டதும் இறந்த எனது சகோத ரரின் மனைவி கேவி அழுதாள். காயமுற்று காஸா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மகள் நாதியாவை அன்று பிற்பகல் சென்று பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். உனக்கு நாதியாவைத் தெரியுமா? எனது சகோதரனின் பதின் மூன்று வயதான அழகிய மகளை உனக்குத் தெரியுமா?
அன்று பிற்பகல் அப்பிள் பழங்களை வாங்கிக் கொண்டு நாதியாவைப் பார்க்கப் படியிறங்கினேன். எனது தாயாரும் மதினியும் என் கண்ணில் படாமல் மறைந்திருந்தது ஏதோ ஒன்று நடந்திருப் பதை எனக்கு உணர்த்தியது. அவர்களால் என்னிடம் சொல்ல முடியாத ஒன்று, நான் தலையிட முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது என்று யூகித்தேன். நாதியாவின் மீது நான் வைத்திருந்த அன்பு என் உணர்வுடன் இணைந்த ஒன்று. இந்த உணர்வு இவ்வயதினர் எல்லோ ரிலும் நான் அன்பு வைக்கக் காரணமாக இருந்தது. அதுவே தோல்வி யையும் இடப்பெயர்வையும் கொண்டு வந்து ஒரு வகைச் சமூக விலகலெனச் சொல்லத் தகுந்த சந்தோசமான வாழ்வு பற்றிய சிந்தனையை ஏற்படுத்தியது.
அந்த நிமிடத்தில் என்ன நடந்தது? எனக்குத் தெரியவில்லை. அந்த அறைக்குள் நான் நுழைந்த போது அது மிக அமைதியாக இருந்தது. எவ்வளவு நோவுள்ள காயத்துடனும் கொடுமையான வருத்தங்களுடனும் இருந்த போதிலும்; பிள்ளைகளிடமும் ஒரு வித தெய்வீகத் தன்மை இருக்கிறது.
நாதியா கட்டிலில் படுத்திருந்தாள். அவள் படுத்திருந்த தலையணையில் அவளது அடர்ந்த கூந்தல் கற்றை அலையலையாக யாக விரிந்து கிடந்தது. அவளது கண்களில் ஆழமான அமைதி தென்பட்டது. எனினும் மின்னும் அவளது பெரு விழிகளுக்குள் எப்போதும் கண்ணீர் ஊறிச் சுரந்து கொண்டிருந்தது. அவளது முகம் சாந்தமாயிருந்த போதும் இன்னும் பேசுவதற்குச் சக்தியுள்ள ஆனால் சித்திரவதைக்குள்ளான ஒரு தீர்க்கதரிசியின் முகம் போலும் இருந் தது. நாதியா சிறு பிள்ளை. ஆனால் பார்ப்பதற்கு பிள்ளைப் பருவத் தைத் தாண்டியவளைப் போலத் தெரிந்தாள். ஒரு சிறுமியை விட வயது கூடியவளாக, அதை விடவும் வயதானவளாகத் தெரிந்தாள்.
'நாதியா!'
நான் தான் அழைத்தேனா அல்லது எனக்குப் பின்னால் வேறு யாராவது அழைத்தார்களா என்று எனக்கே சரியாக நிச்சய மில்லை. நாதியா கண்ணை உயர்த்தி என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையிலேயே கொதிக்கும் தேனீர்க் கோப்பைக்குள் விழுந்த சீனிக் கட்டியைப் போல நான் கரைந்து போனேன்.
ஒரு சின்னப் புன்னகையுடன் வெளிவந்த அவளது மெல்லிய குரல் என் காதில் விழுந்தது.
'அங்கள்... இப்போதுதான் குவைத்திலிருந்து வந்தீர்களா?'
அந்தக் குரல் அவளது தொண்டைக்குள்ளேயே உடைந்து வெளிவந்தது. தனது கைகளால் ஊன்றி நிமிர்ந்து கட்டிலில் சாய்ந்த வாக்கில் அமர்ந்தாள். நான் அவளது முதுகைத் தடவி அவளது அருகில் அமர்ந்தேன்.
'நாதியா, குவைத்திலிருந்து உனக்குப் பரிசுப் பொருட்கள் கொண்டு வந்திருக்கிறேன். நிறையப் பொருட்கள். நீ முற்று முழுதாகக் குணமடைந்து எனது வீட்டுக்கு வா. அவை எல்லாவற்றையும் உனக்குத் தருகிறேன். சிவப்பு நிறக் காற்சட்டை வேண்டும் என்று எனக்கு எழுதிக் கேட்டிருந் தாய் அல்லவா... நான் கொண்டு வந்திருக்கிறேன்.'
அந்த இறுக்கமான சூழலில் வெளிப்பட்ட பொய் அது. நான் என்னை மறந்து உளறியதை, நான் முதன் முதலாக உண்மை பேசுகிறேன் என்பது போல் நினைத்துக் கொண்டேன். நாதியா மின் சாரம் தாக்கியதைப் போல் திடுக்கிட்டு இறுக்கமான மௌனத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். நாதியாவின் கண்ணீர்த் துளிகள் எனது புறங்கையை நனைப்பதை உணர்ந்தேன்.
'பேசு... நாதியா... உனக்கு சிவப்பு நிறக் காற்சட்டை வேண்டாமா...?'
நாதியா என் மீது பார்வையை உயர்த்தினாள். அவள் பேச ஆரம்பிப்பது போலத் தோன்றியது. ஆனால் நிறுத்திக் கொண்டாள். பின்னர் பற்களை உரசுவது போல் தெரிந்தது. மிகத் தொலைவி லிருந்து கேட்பது போல் ஒலித்த அவளது குரலை நான் கேட்டேன்.
'அங்கள்!'
அவள் கையை உயர்த்தி, வெள்ளைத் துணியால் சுற்றப்பட் டிருந்த விரல்களால் அடித் தொடைப் பகுதியிலிருந்து துண்டிக்கப் பட்ட தனது கால் பிரதேசத்தைச் சுட்டிக் காட்டினாள்.
அன்பு நண்பா... அடித் தொடைப் பகுதியிலிருந்து துண்டிக் கப்பட்ட நாதியாவின் காலை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ஆழ்ந்த துயரத்தில் வார்க்கப்பட்டு அதுவே காலாதிகாலத் துக்கும் நிரந்தரமாகி விட்டிருக்கும் அவளது முகத்தை மறந்து விட முடியுமா? நாதியாவுக்குக் கொடுப்பதற்கென நான் கொண்டு வந்திருந்த இரண்டு றாத்தல் பாரமுள்ள பொருட்கள் மௌனமாய் என்னைப் பார்த்துப் பரிகசிக்க, அவற்றை இறுக்கமாகப்; பற்றிப் பிடித்தபடி அன்று காஸா வைத்தியசாலையிலிருந்து வெளியேறி னேன். சுட்டெரிக்கும் சூரியன் இரத்த நிறத்தில் காஸாத் தெருவெங் கும் நிறைந்திருந்தது. காஸா புதியதாகத் தெரிந்தது, முஸ்தஃபா! நீயோ நானோ அதை இப்படி இதற்கு முன்னர் பார்த்ததில்லை.
நாம் வாழ்ந்த ஸாஜியா சதுக்கத்தின் நுழைவாயில் பகுதியில் குவிந்து கிடந்த கற்களுக்கு ஓர் அர்த்தம் இருந்தது போல் எனக்குத் தோன்றியது. அந்த அர்த்தத்தை வெளிப்படுத்துவது அவற்றின் நோக்கமே தவிர வேறு எந்தக் காரணங்களையும் அதற்குக் கற்பிக்க முடியவில்லை. நல்ல மனிதர்களுடன் நாம் வாழ்ந்த, ஏழுவருடத் தோல்வியைச் சுமந்த இந்த காஸா, ஏதோ ஒரு வகையில் புதியதாகத் தோற்றமளிக்கிறது எனக்கு. இது ஒரு புதிய ஆரம்பமாகவே எனக்குத் தோன்றுகிறது.
நான் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த பிரதான வீதி யைக் கற்பனை செய்து பார்க்கிறேன். அது சபாத்தை நோக்கிய நீண்ட மிக நீண்ட தூரத்தின் ஆரம்பமாகும். காஸாவில் எல்லாமே அழுகையைக் கட்டுப்படுத்த முடியாத துயரத்தில் மூழ்கியிருக்கின் றன. இது ஒரு சவால். அதாவது துண்டிக்கப்பட்ட காலை மீளப் பொருத்துவது போன்ற சவாலை விடவும் முக்கியமான விடயம் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.
காஸாவின் தெருக்களில் நான் நடந்து சென்றேன். அத் தெருக்கள் எங்கும் கண்கள் கூசும் வெளிச்சம். வீட்டுக்குள் விழுந்து வெடித்த குண்டிலிருந்தும் அதன் தீ நாக்குகளிலிருந்தும் தனது தங்கைகளையும் தம்பிகளையும் பாதுகாத்த காரணத்தால் நாதியா தனது காலை இழந்தாள் என்று எனக்குச் சொன்னார்கள். நாதியா தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கலாம்... அவள் அங்கிருந்து ஓடித் தப்பித் தனது காலைப் பாதுகாத்திருக்கலாம்....
ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை.
(கஸ்ஸான் கனபானியின் “காஸாவிலிருந்து ஒரு கடிதம்” சிறு கதையின் ஒரு பகுதி. “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” என்ற அரபுக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியில் இக்கதை இடம் பெற்றிருக்கிறது.)

Post a Comment