Header Ads



இந்தியாவை சந்தோஷப்படுத்துவதா? அல்லது இலங்கையின் சிங்கள பெளத்த மக்களை சந்தோஷப்படுத்துவதா?

(Vi) இந்தியாவை சந்தோஷப்படுத்துவதா? அல்லது இலங்கையின் சிங்கள பெளத்த மக்களை சந்தோஷப்படுத்துவதா? என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம் எடுக்க வேண்டும். இத் தீர்மானத்திலேயே இந்த ஆட்சியின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷித் அமெரிக்காவின் அடிவருடி. எனவே இலங்கையை பிரிக்கும் நிகழ்ச்சி நிரலே அவரால் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் வருகையானது தீர்க்கமானதாகும். 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை தடுக்கவும் மாகாண சபை முறைமையை ஒழிப்பதை தடுக்கவுமே அவர் இங்கு வருகிறார். இதற்கு அரசாங்கம் அடங்கிப் போகுமென்றே தற்போதைய சூழ்நிலைகளும் அமைச்சர் பஷிலின் இந்திய விஜயமும் எடுத்தியம்புகின்றன.

அதேவேளை சல்மான் குர்ஷித்தின் கொள்கையை விட வித்தியாசமான கொள்கையுடையவர் மேனன்?எனவே எமது அரசாங்கத்தின் கபடத்தனங்களை சமாளிப்பதற்கு இந்தியா எதனையும் செய்யும். ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலை செய்தனர். எனவே வடக்கைப் பிரித்து கூட்டமைப்பிற்கு வழங்கினால் தமிழ்நாடு பிரியும் என்பதை இந்தியா அறியும். இதனை அறியாத முட்டாள்களென இந்தியாவை எடை போட முடியாது.

எனவே மேனனின் இலங்கை தொடர்பான அணுகுமுறை வித்தியாசமாக அமையும். ஆனால் 13 தொடர்பில் கடுமையாக இருக்கும். அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியா சென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். குர்ஷித் அமெரிக்காவின் அடிவருடி இந்தியாவை விட இலங்கையை இரண்டாகப் பிரிக்கும் தேவை அமெரிக்காவிற்கே அதிகம் உள்ளது. எனவே அந்த நிகழ்ச்சி நிரலையே குர்ஷித் முன்னெடுக்கின்றார்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய அரசுடன் 13 தொடர்பில் கடும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசுக்கெதிரான கடும் போக்கை கடைப்பிடிக்கின்றார். எதிர்காலத்தில் அவர் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் ஆபத்தும் உள்ளது. இதனால் மீண்டும் ஜாதிக ஹெல உறுமய சிங்கள பெளத்தர்கள் மத்தியில் செல்வாக்கை எட்டிப் பிடிக்கும்.

அமைச்சர் விமல் வீரவன்ச, பொதுபல சேனா என சிங்கள பெளத்த அமைப்புக்களும் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. அரசாங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சிங்கள பெளத்த மக்களின் ஆதரவுடனேயே அதிகாரத்தில் உள்ளது. அது இழக்கப்படும் பட்சத்தில் அரசாங்கம் வீழ்ச்சியுறும். சந்தோஷப்படுத்துவது எனவே இந்தியாவை சந்தோஷப்படுத்துவதா அல்லது சிங்கள பெளத்த மக்களை சந்தோஷப்படுத்துவதா? ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதா? என்பது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

1 comment:

Powered by Blogger.