Header Ads



எகிப்தில் ஜும்ஆ தொழுகைக்கு பின் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு இஹ்வான்கள் அழைப்பு


இன்று வெள்ளிக்கிழமை முர்சியை மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க அழுத்தம் கொடுக்க பாரிய ஆர்ப்பாட்டத்தை கெய்ரோவில் நடத்த முர்சி ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் தஹ்ரிர் சதுக்கத்தில் ஒன்றுகூட ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உயர்மட்ட தலைவர் மொஹமத் பஅதியை கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர். பஅதி மீது எகிப்து வழக்குத் தொடுனர் அலுவலகம் நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பித்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதோடு, மேலும் பலரை கைது செய்ய பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. கெய்ரோ இராணுவ தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இராணுவத்தினர் எந்த அறிவுறுத்தலும் இன்றி ஆர்ப்பாட்டக்காரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு கற்றம் சாட்டுகிறது. ஆனால் பாதுகாப்பு அரணை முறிக்க முயன்ற குண்டர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இராணுவம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கெய்ரோ நகரின் பல பகுதிகளிலும் கடந்த புதன்கிழமையும் முர்சி ஆதரவாளர்கள் பல பேரணிகளை நடத்தினர். இதில் கெய்ரோ நஸ்ர் மாவட்டத்திலுள்ள ரபா அத்வியா பள்ளிவாசலுக்கு வெளியில் 13 வது நாளாக நேற்றும் நூற்றுக்கணக்காக முர்சி ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.