முஸ்லிம் விரோதத் தாக்குதல்கள்: அழிவிற்குள் தள்ளிவிடக் கூடிய அசமந்த போக்கு
(லதீப் பாரூக்)
இரண்டு வருடங்களுக்கு முன்பு சூடுபிடித்த முஸ்லிம் விரோதப் பிரசாரங்கள் இன்று முழு வீரியத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கம் பார்வையாளனாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பொறுமை இழந்த முஸ்லிம் சமூகம் வீதிகளில் இறங்கி தமது பிரச்சினைகளை முன்வைப்பது பற்றி சிந்தித்து வருகிறது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் இலங்கை நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெறுகின்ற தனித்த நிகழ்வுகள் போன்று பல அசம்பாவிதங்கள் தோன்றினாலும், இவை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டவை: ஒருங்கிணைக்கப்பட்டவை: ஒரு தீவிர நோக்கத்திற்காக இடம்பெற்று வருபவை என்ற உணர்வு முஸ்லிம் சமூகத்தில் வளர்ந்து வருகின்றது.
புத்த பிக்குகள் ஒரு சிலரை முன்னணியில் கொண்டு இயங்குகின்ற இத்தாக்குதல்கள் அபாயகரமானவை. இதற்கு முஸ்லிம்கள் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டுக் காட்டுகின்ற துலங்கல்கள், எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தி விடலாம்.
எவ்வாறாயினும், முப்பதாண்டு கால யுத்தத்தில் இருந்து மீண்டு வந்திருக்கின்ற நாட்டினால், மற்றொரு பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது. அத்தகையதொரு பிரச்சினையைத்தான் இனவாதிகள் உருவாக்க முற்படுகிறார்களோ எனவும், இதன் மூலம் நாட்டில் ஏற்படப்போகின்ற பாதிப்புக்கள் குறித்துக் கருத்திற் கொள்ளாது, முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தி, அவர்களை சூறையாடி, கொலை செய்கின்ற தமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான களத்தையே இவர்கள் சமைத்து வருவதாகவும் முஸ்லிம் சமூகம் சந்தேகிக்கிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் தகவல் துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், “எதற்காக நாம் காத்திருக்கின்றோம்? ஒரு அழிவு இடம்பெறும் வரை நாம் காத்திருக்கின்றோமா?” எனக் கேட்டிருந்தார். நாட்டை மற்றொரு அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்துவதற்கான நேரமே இது என அவர் தெரிவித்திருந்தார்.
அண்மையில் சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில், உடனடியாக அரச தலையீட்டின் அவசியத்தையும், இல்லாதபோது தவிர்க்க இயலாமல் ஏற்படப்போகின்ற அபாயகரமான விளைவுகளையும் குறித்து அவர் எச்சரித்திருந்தார்.
இத்தீவிர கருத்து முகாம்களைச் சேர்ந்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தவறுகின்றமை, இவர்களுக்கு வழங்குகின்ற கௌரவமாகும் என்ற உணர்வு முஸ்லிம் சமூகத்தில் வளர்ந்து வருகின்றது. இது வரை, இத்தீவிரக் கும்பலின் கொட்டத்தை அரசாங்கம் அடக்க வேண்டும் என முஸ்லிம் சமூகத்தில் இருந்தும், மைய நீரோட்ட சிங்கள சமூகத்தில் இருந்தும் ஒலித்த குரல்கள், செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே காற்றில் கரைந்து போய்விட்டது.
தமது அதிகாரம் மற்றும் சொகுசுகளுக்காக தமக்கு வாக்களித்த மக்களை மறந்து, தமது மனசாட்சிகளை அடகு வைத்தவர்கள் போன்று நமது அரசியல்வாதிகளும் இது தொடர்பில் செயற்பட்டு வருகிறார்கள். பல குட்டிக் கட்சிகளாகவும், முகாம்களாகவும் பிரிந்திருக்கின்ற இவர்களை, முஸ்லிம் சமூகத்தைப் பந்தாடுவதற்கான துருப்புச் சீட்டாக அரசாங்கமும் பயன்படுத்தி வருகின்றது. எனவே, இவர்களின் வார்த்தைகளையும், முஸ்லிம் சமூகத்தையும் ஒரு பொருட்டாகவே அரசாங்கம் கருதாத நிலை உருவாகியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் கொழுகொம்புகளான இவர்கள், முஸ்லிம் சமூகத்திற்குப் பாரமாக மாறியிருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ள வேண்டும். அல்லது சமூக உணர்வும், சூடு சொரணையும் உள்ளவர்களாக இருப்பின் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்.
முஸ்லிம் விரோத நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதாக தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற அங்கத்தவர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட முடியும் என்றால், முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் இது தொடர்பில் வாய் திறப்பதற்கு இருக்கின்ற தடை என்ன?
முஸ்லிம் விரோதத் தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாகவும், முஸ்லிம்களைத் தாக்குவதற்கு அரசாங்கம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்ட போது, “பொது பல சேனாவே முஸ்லிம் விரோதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பாகும்” என முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர் பைஸர் முஸ்தபா குறிப்பிடுகின்ற அளவுக்கு, முஸ்லிம் அரசியல் வங்குரோத்து நிலையில் காணப்படுகின்றது.
எவ்வாறாயினும், அரசாங்கத்திற்குள் ஓர் அரசாங்கமாகச் செயற்பட்டுக் கொண்டும், வெளிப்படையாகவே சட்டங்களை மீறிக் கொண்டும், முஸ்லிம்களை திட்டுத் தீர்த்துக் கொண்டும் திரிகின்ற பொதுபல சேனாவிற்கு, அரசாங்கத்துடன் ஏதாவது ரகசிய உறவுகள் இருக்க வேண்டும் என்ற கருத்தே முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிறது.
இந்த உலகத்தில் வாழ்பவராக இருப்பின், தான் சார்ந்த முஸ்லிம் சமூகம் அனுபவித்து வருகின்ற அபாயகரமான கையாலாகத் தனத்தை, பைஸர் முஸ்தபா அறிந்திருக்க வேண்டும்.
முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பலருக்கு இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால், அரசாங்கத்திற்கான தமது நயவஞ்சகத்தனமான செஞ்சோற்றுக் கடனை வெளிப்படுத்துவதற்கு, ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வதுதான். இவ்வாறு செய்வதன் மூலம், தமக்கு வாக்களித்த சமூகத்தின் நலன்களை இவர்கள் அடகு வைக்கிறார்கள். இவர்கள் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களிடம் சுய கௌரவம் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டும்.
“இது சிங்கள பௌத்த நாடு” என்று கொக்கரித்து வரும் கடும்போக்குவாதிகள், இலங்கை சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுபான்மையினரே என்பதையும், எல்.டீ.டீ.யினர் தனிநாடு கோரிப் போராடிய போது, அதனை ஆதரிக்காமல், தியாகங்களையும், வேதனைகளையும் முஸ்லிம் சமூகம் தாங்கிக் கொண்டமையினால்தான், நாடு பிரிவினையைச் சந்திப்பது தவிர்க்கப்பட்டது என்பதையும் மறந்து விடுகிறார்கள்.
மூன்று தசாப்த கால பிரிவினை யுத்தத்தின் நெடுகிலும் முஸ்லிம்கள் பள்ளிவாயல்களில் படுகொலை செய்யப்பட்டார்கள். இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. நிலங்கள் பரிக்கப்பட்டன. வயல் நிலங்களும், விளைச்சலும் அழிக்கப்பட்டன. கால்நடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அவ்வாறிருந்த போதிலும், தனி ஈழக்கோரிக்கையை நிராகரிப்பதில் முஸ்லிம் சமூகம் உறுதியாக இருந்தது. போதிய ஆயுதங்களையும், தொழிநுட்பத்தையும் இலங்கை இராணுவம் பெற்றிருக்காத அக்காலப் பகுதியில், புலிகளுடன் முஸ்லிம் சமூகம் கைகோர்த்திருந்தால், இன்று தனியீழம் ஒன்று உருவாகி இருக்கலாம்.
இவ்விதம் நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருத்திற் கொண்டு, பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த போதிலும், அதற்குப் பிரதியுபகாரமாக நாடு தழுவிய ரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட தாக்குதல்களையே முஸ்லிம் சமூகம் இன்று சந்தித்து வருகிறது.
பொலிஸாரின் கண் முன்னாலேயே முஸ்லிம் பெரியார் ஒருவரின் அடக்கத்தளம் ஒன்று அநுராதபுரத்தில் உடைக்கப்படுவதோடு ஆரம்பித்த முஸ்லிம் விரோத நடவடிக்கைகள், இன்று ஏதோ ஒரு வடிவத்தில் தொடர்ந்தேச்சையாக இடம்பெறுகின்ற வழமையான நிகழ்வுகளாக மாறியுள்ளன.
உதாரணமாக, மிருக வதையைத் தடை செய்யக் கோரி, ஜனாதிபதியிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்காக கதிர்காமத்தில் இருந்து, அலரி மாளிகை வரை இக்கடும்போக்கு இனவாதிகள் பாத யாத்திரை ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர். ஒரு மகஜரை சமர்ப்பிப்பதற்கு, முஸ்லிம் உணர்வுகளைப் பாதிக்கின்ற வகையிலானதொரு பாத யாத்திரை அவசியம்தானா? கவலை தருகின்ற விடயம் யாதெனில், வெளிப்படையாக நாட்டின் சட்டங்களை அவமதிக்கின்ற இக்கும்பலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டமைதான்.
சில தினங்கள் கழித்து, மட்டக்களப்பு மாவட்டம், அஸ்ஹர் வித்தியாலயத்தில் புத்தர் சிலையொன்று ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் ஷாதுலிய்யா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் இருக்கின்ற ஒரே மைதானம் இதுவே!
இம்மைதானம் பௌத்த விகாரை ஒன்றுடன் இணைந்ததாக அமைந்துள்ளது. 2010, மார்ச் முதலாம் திகதி, மைதானம் விகாரைக்கு சொந்தமானது எனக் கோரி, மைதானத்தைப் பிரித்த பிரிசுவரை விகாரைக்குப் பொறுப்பான பிக்குகள் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பானதொரு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது. ஜூன் 25, 2013 அன்று இது தொடர்பில் வழங்கப்பட்ட நீதி மன்றத் தீர்ப்பில், மைதானம் பாடசாலைக்குச் சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்த நிலையில், ஐந்து நாட்கள் கழித்து, மைதானத்தின் நடு மத்தியில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இது இடம்பெற்று சுமார் பத்து நாட்கள் கழித்து, ஜூலை 11, 2013 அன்று, மஹியங்கனை அரபா ஜும்ஆ மஸ்ஜித் காட்டுமிராண்டித் தனமான முறையில், இழிவுபடுத்தப்படுகின்றது. நோன்பு கால இரவுத் தொழுகையை (தராவீஹ்) நிறைவேற்றிய பின்னர், முஸ்லிம்கள் இரவு பத்து மணியளவில் வெளியேறி இருக்கின்றனர். இரவு 11.10 அளவில் பள்ளிவாயல் அமைந்திருக்கின்ற பகுதிக்கு மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தின் பின்னர் முகம் மூடி அணிந்த ஆறு நபர்கள் மோட்டார் சைக்கில்களில் வருகை தந்துள்ளனர்.
பள்ளிவாயலின் முன்னால் நின்று கொண்டிருந்த பள்ளிவாயல் நிர்வாகி சீனி முஹம்மத் மீது, இவர்கள் மிளகாய்த்தூளை வீசித் தாக்கியுள்ளனர். பிறகு கற்களை வீசி பள்ளியின் முன் கதவை உடைக்க முற்பட்டுள்ளனர். கதவை உடைக்க முடியாமல் போனதால், ஜன்னல்களை உடைத்து, பள்ளியினுள் புகுந்துள்ளனர். இறந்த பன்றியொன்றின் தலை, இரத்தம், கால், சுவாசப்பை முதலான உறுப்புக்களை பள்ளி முழுதும் வீசி எறிந்த, தமது முஸ்லிம் விரோத உணர்வை இவர்கள் தீர்த்துக் கொண்டார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பௌத்த கலாசாரம் மற்றும் நாகரீகத்திற்குச் சொந்தமான நாடு என்று கூறப்படுகின்றதொரு நாட்டில், இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதுதான் கொடுமையானது. வரலாற்றுக்கு முந்தைய காலத்து வேடர்கள் கூட, இத்தகைய அரக்கத்தனமான நடத்தையை வெளிப்படுத்த மாட்டார்கள்.
தொடர்ந்து ஊவா மாகாண அமைச்சர் அனுர கமகே அவர்களுக்கு நிலமை அறிவிக்கப்பட்ட போது, அவர் பொலிஸாருடன் ஸ்தலத்திற்கு விரைந்தார். அமைச்சர், மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு இணங்க பள்ளிவாயல் சுத்தம் செய்யப்பட்டது.
நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, காத்தான்குடியில் இருந்து இங்கு குடியேறிய வர்த்தகரும், ரன்முத்து கோல்ட் ஹவுஸ் உரிமையாளருமான சீனி முஹம்மத் என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இப்பள்ளிவாயல் அமைந்துள்ளது. 1991 முதல் இப்பள்ளிவாயல் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகவே வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையை நிறுத்துமாறும், பள்ளிவாயலை அவ்விடத்தில் இருந்து அகற்றி விடுமாறும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, ஜூலை 12 ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்போடு ஜும்ஆ தொழுகை நடாத்தப்பட்டது.
எவ்வாறாயினும், வழமை போலவே, இவ்வசம்பாவிதம் தொடர்பிலும் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு மாறாக, ஜூலை 19 அன்று வெள்ளிக் கிழமைத் தொழுகை, அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடாத்தப்படாமல் இருந்தமை குற்றவாளிகளைத் தட்டிக் கொடுக்கின்ற செயலாகும்.
பொதுபல சேனாவின் அழுத்தங்கள் காரணமாகவே இது இடம்பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மஹியங்கனைப் பிரதேசத்தில் சுருசுருப்பாக இயங்கி வருகின்ற இவ்வமைப்பினர், விரைவில் ஒரு பொதுக் கூட்டத்தை அங்கு நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹகீம் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“ஒரு வாரத்திற்கு மேலாக மஹியங்கனைப் பள்ளிவாயல் இலக்கு வைக்கப்பட்டு வந்துள்ளது. பல மாதங்களாக தீவிர இனவாத அமைப்புக்களால் முன்னெடுக்கப்படுகின்ற முஸ்லிம் விரோதப் பிரசாரம் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தொடர் தாக்குதல்களின் வரிசையில் மிக அண்மைய தாக்குதலே இது. விசேஷமாக புனித ரமழான் மாதத்தில் இத்தகைய சகிப்புத் தன்மை அற்ற தாக்குதல்கள் நடாத்தப்பட்டமை முஸ்லிம் உணர்வுகளைப் பாதிப்பதோடு, சமூகங்கள் மத்தியிலான இடைவெளியை மேலும் கூர்மைப்படுத்தவே உதவப் போகின்றது. இதற்கு முன்பும் கடும்போக்குவாதிகளால், குறித்த பள்ளிவாயல் தாக்குதலுக்கு உள்ளான போது, எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பொதுபல சேனா செயலாளர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் வெளிப்படையாக முஸ்லிம் விரோத பிரச்சாரத்தைத் தூண்டி வருவதாக நம்பகமான தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் ஹகீம் மேலும் தெரிவித்துள்ளார். இத்தகைய குற்றச் செயல்கள் குறித்த அரசாங்கத்தின் அசமந்த போக்கு , மதங்கள் இடையிலான வன்முறையை அரசாங்கம் தூண்டி வருகின்றது எனப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் ஹகீம் சுட்டிக் காட்டியுள்ளார்.
மஹியங்கனைத் தாக்குதலுக்கு ஒரு வாரம் கழித்து இடம்பெற்ற மற்றொரு அசம்பாவிதத்தில் , மாட்டு இறைச்சியை ஏற்றிச் செல்வதற்காக தெமடகொட பேஸ்லைன் பாதைக்கு வந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான லொரி ஒன்றை, பௌத்த பிக்குகள் மூவர் தீ வைத்துள்ளனர். பகல் ஒரு மணியளவில் வருகை தந்த இப்பிக்குகள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி மீது பெற்றோலை ஊற்றி, தீ வைத்து விட்டு, தெமடகொட சந்தியை நோக்கித் தமது வாகனத்தைச் செலுத்திச் சென்றுள்ளனர்.
தமிழ் தேசிய இதழொன்றின் ஓர் ஆக்கத்தில், தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அஸாத் ஸாலி, இது முஸ்லிம்கள் தமது இறைச்சித் தொழிலை மூடச்செய்வதன் மூலம், வெளிநாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய வைப்பதற்கான இலக்கோடு மேற்கொள்ளப்படும், பொருளாதார நலன்களை மையப்படுத்திய முயற்சியாகும் எனவும், முஸ்லிம் வர்த்தகர்களைத் துறத்தி அடித்து விட்டு, முஸ்லிம் நிலங்களை கையகப்படுத்திக்கொள்ளும் முயற்சி எனச் சிலர் சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தாக்குதல்கள் நிறுத்தப்படா விடின், சமாதானத்துடன் வாழ்வதற்கு தமக்கு இருக்கின்ற சட்டபூர்வமான உரிமையை உறுதி செய்து கொள்வதற்காக முஸ்லிம்கள் பாதைக்கு இறங்க வேண்டி இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

الله اكبر
ReplyDeleteயாரையப்பா நம்புவது........
Muslimkal thannaithaaney emaatrikkolginra oru vidayam ennavenraal,"Naangal ellorudanum
ReplyDeleteotrumaiyaga vaalkinroam" enru thodarnthu Aluzu pulambikkonriruppazuthaan.enayya
inaththawarin karuththennavenraal,"VEIRU VALIYILLAMAL APPADI VAALGIREERGAL"
enbathu.Aduththennavenraal,yuththaththin pin varuginra abiviruththiyin varthaga palangalil
niyaayamaanalavu muslimkalukkum poayvidukirazu enbazai ivargalaal chagiththukkolla
mudiyaaza mananilai.Innumoru periya laabam ennavenraal,irukkinra urimaigalum
salugaigalumey paripoakinra nilaiyil,puzuppuzu koarikkaigalil kavanam chaluththa mudiyaamal
poavazu.Ivai anaiththinazum palan yaaraip poay cherum? Ivai maaththiram alla,innum niraiya
ragasiyangal izan pinnaniyil nichchayam irukkinrana.Ezu eppadi iruntha poazum,onru mattum
nichchayam.MUSLIM ARASHIYAL VAAZIGALUKKUM PURAKKOATTAI VIYAPAARIGALUKKUM IDAYIL VITHTHIYAASAM THEDA MUNAYA VENDAAM.