Header Ads



வரலாறு படைத்தார் பர்வேஸ் ரசூல் - இந்திய தேசிய அணியில் வாய்ப்பு

ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இளம் "ஆல்-ரவுண்டர்' பர்வேஸ் ரசூல் வாய்ப்பு பெற்றார். இதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த முதல் காஷ்மீர் வீரர் என்ற வரலாறு படைத்தார். காயம் காரணமாக தோனிக்கு பதில் கேப்டனாக விராத் கோஹ்லி நீடிக்கிறார்.

முத்தரப்பு தொடருக்குப் பின், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி, ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட (ஜூலை 24- ஆக., 3) தொடரில் பங்கேற்கிறது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை, இந்திய கிரிக்கெட் போர்டு செயலாளர் சஞ்சய் படேல் நேற்று அறிவித்தார். இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி இம்மாத இறுதியில் தென் ஆப்ரிக்கா செல்கிறது. இதற்கான இந்திய "ஏ' அணியும் அறிவிக்கப்பட்டது. இதற்கு புஜாரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி:

கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், புஜாரா, ரெய்னா, ராயுடு, ரகானே, ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது ஷமி, வினய் குமார், உன்த்கத், மோகித் சர்மா. 
தென் ஆப்ரிக்காவுக்கான இந்திய "ஏ' அணி:
புஜாரா (கேப்டன்), தவான், முரளி விஜய், ரோகித் சர்மா, ரெய்னா, ராயுடு, தினேஷ் கார்த்திக், ரகானே, சகா, ரசூல், சாகிப் நதீம், முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, ஈஸ்வர் பாண்டே, உனத்கத், சித்தார்த் கவுல். 

யார் இவர்

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டிக்கான இந்திய "ஏ' அணியில் இடம்பிடித்தார். இதில், அவ்வளவாக சோபிக்கவில்லை. இதன் பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான (பிப்ரவரி ) பயிற்சி போட்டியில் 45 ரன்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தவிர, கடந்த பிரிமியர் தொடரில் புனே அணி சார்பில் விளையாடினார். பிரிமியர் தொடரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சார்பில் பங்கேற்ற முதல் வீரர் இவர்தான். இதன் பின், வெடிமருந்து வைத்திருந்ததாக, பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். 

வாய்ப்பை பயன்படுத்துவார்:

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடியிடம்தான், ரசூல் பயிற்சி பெற்றார். இது குறித்து பிஷன் சிங் கூறுகையில், ""கடவுள் கொடுத்த இந்த அரிய வாய்ப்பை ரசூல் முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். இந்திய அணியில் அஷ்வினுக்கு ரசூல் போட்டி இல்லை. அஷ்வின் அவருக்குரிய தனி திறமையுடன் விளையாடுகிறார். தவிர, ரசூல் திறமையான சுழற்பந்துவீச்சாளர்,'' என்றார். 

கடுமையான உழைப்பு:

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில்,"" ரசூலின் கடுமையான உழைப்பால், இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால் நான் அதிக மகிழ்ச்சியில் உள்ளேன். ஜிம்பாப்வே தொடரில் இவர் சிறப்பாக செயல்பட, கடவுளை வேண்டிக்கொள்கிறேன்<'' என்றார். 

No comments

Powered by Blogger.