ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்..!
அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி)
சந்தேகம்: நோன்பு நோற்றவர் வாந்தி எடுத்தால் அவரது நோன்பு முறிமா?
தெளிவு: நோன்பு நோற்றவர் வாந்தி எடுத்தால் நோன்பு அவரது முறியாது. அவர் அதிகமாக வாந்தி எடுத்தாலும் சரியே! ஆனால் அவர் வேண்டுமென்று வாந்தி எடுத்தால் அவரது நோன்பு முறிந்து விடும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஒரு நோன்பாளிக்கு மிகையாக வாந்தி வந்தாலும் அவரது நோன்பு முறியாது. அவர் அந்த நோன்பை பிந்தி நிறைவேற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஒருவர் வலிந்து வாந்தி எடுத்தால் அவர் அந்த நோன்பைப் பிறகு நிறைவேற்ற வேண்டும்.’ (இப்னு மாஜா)
சந்தேகம்: நோன்பாளி மறதியாக உண்டால் அல்லது பருகினால் நோன்பு முறியுமா?
தெளிவு: நோன்பாளி மறதியாக உண்டாலோ அல்லது பருகினாலோ அது அவரது நோன்பில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஒருவர் நோன்பு நோற்ற நிலையில் மறதியாக உண்டால் அல்லது பருகினால் அவர் தனது நோன்பை பூரணப்படுத்தட்டும். அல்லாஹ்தான் அவருக்கு உணவளித்தான். நீர் புகட்டினான். (புஹாரி)
எனவே மறதியாக ஒரு நோன்பாளி உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தனது நோன்பை முறித்துக் கொள்ளக் கூடாது மாறாக அவர் தனது நோன்பை தொடரவேண்டுமென்பது மேற்படி நபிமொழியின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
சந்தேகம்: குளிப்புக் கடமையான நிலையில் ஒருவர் நோன்பு நோற்கலாமா?
தெளிவு: இல்லற வாழ்வில் ஈடுபட்டு அல்லது தூக்கத்தில் ஸ்கலிதமாகிக் குளிப்புக் கடமையான நிலையில் உள்ள ஒருவர் நோன்பு நோற்பதற்குக் குளிப்புக் கடமையல்ல என்பதை பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட்டு விட்டுக் குளிப்புக் கடமையான நிலையில் பஜ்ர் நேரத்தையடைவார்கள். பின்னர் குளித்துவிட்டு நோன்பை தொடருவார்கள். (புஹாரி) குறிப்பு: ஸஹர் நேரம் முடிந்து விடும் என்றிருந்தால் நோன்பை நோற்றுவிட்டு பின்னர் குளித்துக்கொள்ள வேண்டும்.
சந்தேகம்: பிரயாணத்தில் இருப்பவர் கஷ்டப்பட்டு நோன்பு நோற்கவேண்டுமா?
தெளிவு: பிரயாணி தான் பயணிக்கும் போது அவசியம் நோன்பு நோற்க வேண்டியது கிடையாது. அவ்வாறு அவர் தன்னைக் கஷ்டப்படுத்திக்கொள்வதை இஸ்லாம் வெறுக்கிறது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது ஒரு மனிதர் நிழலில் தங்கவைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ‘அவருக்கு என்ன நடந்தது? என்று கேட்டார்கள் இவர் நோன்பு நோற்றிருக்கிறார் என்று மக்கள் கூறினார்கள். அப்பாது நபி (ஸல்) அவர்கள் ‘நோன்பு நோற்பது பயணத்தில் சேராது என்றார்கள்.’ (புஹாரி)
சந்தேகம்: நோன்பாளி பற்பசையால் பல் துலக்கலாமா?
தெளிவு: ஒரு நோன்பாளி எந்த நேரத்திலும் பல் துலக்கலாம். பற்பசை உபயோகத்தினால் நோன்புக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஈரமான குச்சியினால் பல் துலக்குவது தவறில்லை என இப்னு ஸூரின் (ரஹ்) கூறிய போது அதற்னுகு ருசி இருக்கிறதே எனக் கூறப்பட்டது. தண்ணீருக்குக் கூட ருசி இருக்கிறதே! அதன் மூலம் வாய் கொப்பளிக்கின்றீரே! என்று பதிலுக்கு கேள்வி கேட்டார்கள்.
சந்தேகம்: நோன்பாளி இரத்தம் கொடுக்கலாமா?
தெளிவு: நோன்பாளி உடலியல் ரீதியாகப் பலவீனமடைய மாட்டார் எனக்காணுமிடத்து அவர் இரத்தம் கொடுப்பதில் அல்லது பரிசோதனைக்காக இரத்த்தம் எடுப்பதில் எந்தவிதக் குற்றமுமில்லை. நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்தார்கள். (புஹாரி)
சந்தேகம்: நோன்பு நோற்ற நிலையில் நோன்பாளி தன் மனைவியை முத்தமிடலாமா?
தெளிவு: நோன்பாளி உடலுறவில் ஈடுபடக் கூடாதென்பது மார்க்கச் சட்டமாகும். ஆனால் அவர் பகல் வேலைகளில் தன் மனைவியை முத்தமிடுவதில் எந்த விதத் தடையிமில்லை. அதே போன்று அவர் தன் மனைவியை கட்டியணைப்பதிலும் எந்த விதக் குற்றமுமில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ‘நானும் நோன்பாளியாக இருக்கும் நிலையிலேயே நோன்பாளியான அவர் என்னை முத்தமிட்டார.’ (புஹாரி)
சந்தேகம்: சூரயன் மறைந்துவிட்டது அல்லது பஜ்ர் உதயமாகவில்லை என்ற ஊகத்தில் சாப்பிட்டுவிட்டால் அல்லது உடலறவு கொண்டுவிட்டால் அவரது நோன்பு குறித்தான நிலை என்ன?
தெளிவு: இந்த நிலையிலுள்ளவர் நோன்பைப் பின்னர் கழாச் செய்யவேண்டுமென்பது பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் முடிவாகும். உடலுறவு கொண்டவர் குற்றப் பரிகாரமாக ‘ழிஹார்‘ என்ற குற்றத்துக்குறிய பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்.
சந்தேகம்: பகல் வேளையில் நோன்பாளிக்கு ஸ்கலிதமானால் நோன்பு முறியுமா?
தெளிவு: நோன்பு காலங்களில் பகலில் நோன்பாளிக்கு ஸ்கலிதமானால் அவர் குளித்து தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். அவரது நோன்பு முறிந்துவிடமாட்டாது.

Jazakkalh
ReplyDelete