முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்த பாசிசப் புலிகளை தேர்தலில் களமிறக்கும் அரசு'
(சத்தார் எம்.ஜாவித்)
சுமார் 80 ஆயிரம் முஸ்லிம்களை விரட்டியடித்தவர்களை அரசு வடமாகாண தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சிப்பது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் மற்றுமொரு துரோகமாகும். வடமாகாண மக்களின் வாழ்க்கையில் விளையாட்டுக் காட்டும் ஒரு கபட நாடகமான தேர்தலாக அமையப் போவதையே தற்போதைய தேர்தல் நடவடிக்கைகள் காட்டுவதாக நோக்கப்படுகின்றது. அந்த மக்களை முற்றிலும் ஏமாற்றும் தேர்தலாகவும் மக்களின் ஜனநாயகத்திற்கு இடமளிக்கப்படுமா? என்ற ஐயத்தை காட்டுவதான நிலையையே இன்றைய அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.
குறிப்பாக வடமாகாண சபைத்தேர்தலில் ஆட்சியின் பங்காளர்களாக யுத்தத்தில் துவண்ட மக்களே மனிதாபிமான அடிப்படையில் போட்டிபோட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் ஆனால் இங்கு அதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதத்தில் கட்சிகள் முகம்தெரியாதவர்களை முன் நிறுத்துவதையிட்டு மக்கள் அதிர்ப்த்தி கொண்டவர்களாக காணப்படுகின்றனர். கடந்த முப்பது வருட கால யுத்தம் செய்த கொடுமைகளும் அதனால் பட்ட துயரங்களும் அதனை அனுபவித்த வடமாகாண மக்களின் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவங்களாகும்.
இவ்வாறான நிலையில் யுத்தத்தையே தோற்றுவித்து முன் நின்று நடத்தியவர்களில் பலரை அரசாங்கம் வடமாகாண சபைத் தேர்தலில் குழுவாக உள்வாங்கி குளிர்காய வைப்பதற்கும் அவர்கள் செய்த அடாவடித்தனங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்ற என்னத்தில் அவர்களும் வெக்கமில்லாமல் போட்டிபோட தமது பெயர்களை வழங்கியயுள்ளமையை இட்டும் மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர். உண்மையான ஜனநாக விரும்பிகளாலோ அல்லது மனிதாபிமானம் படைத்தவர்களாலோ ஜீரணிக்க முடியாது. அந்தளவுக்கு மக்களை ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு பல வழிகளிலும் அட்டூழியம் புரிந்தவர்களை அரசாங்கம் உள்வாங்கி இருப்பதானது எதிர் காலத்தில் பாரிய விபரீதங்களை ஏற்படுத்தலாம் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றார்கள்.
ஒரு காலத்தில் மக்களுக்கு உரிமைகளை வென்றெடுத்து தருவதாக அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள் நாளடைவில் மக்களுக்கு எதிராகவும், மக்களை யுத்தக் கேடயங்களாகவும் நாடு. தேசம் என்றும் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமைகளையும் தோற்று வித்தவர்கள் தேர்தல் மூலம் வந்து மக்களுக்கு என்னத்தை வெட்டி விPழ்த்துவார்கள் என்று மக்கள் கேட்கின்றனர். அரசாங்கம் முதலில் எவ்வாறானவர்களை தேர்தலில் போட்டிபோட வைக்கவேண்டும்? அவர்களை மக்கள் விரும்புவார்களா? என்பதனையெல்லாம் யோசிக்காது ஆயுதம் தூக்கி உயிர்களை கொண்டும், உடமைகளை நாசமாகியவர்களையும் தமது இலாபத்திற்காக தேர்தலில் நிறுத்துவதானது மக்களுக்கச் செய்யும் மாபெரும் துரோகமாகவே மக்கள் கருதுகின்றனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் போக்குகளை எடுத்துக் கொண்டால் அதனுல் பல அரசியல் பங்காளிகளாக ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் ஏன் ஒரு இனத்தையே வடகிழக்கில் அவர்களின் பூர்வீகங்களில் இருந்து ஈவிரக்கமற்ற வகையில் துப்பாக்கி முனையில் விரட்டியவர்கள் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு அரசாங்கச் செலவில் ஏன் பொதுமக்களின் பணத்தில் சுகபோகங்கள் அனுபவிப்பது மக்கள் மனதில் எரியும் நெருப்பாகவே உள்ளதாக 1990 ஆம் ஆண்டு புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்றும் குமுறுகின்றனர்.
23 வருடங்களுக்கு முன் உடுத்திய உடுப்புடன் பாசிசப் புலிகளால் விரட்டப்பட்ட வடமாகாண முஸ்லிம் மக்கள் இன்றுவரை உரிய வசதிகள் இன்றி நாடோடிகளாக தமது பூர்வீகங்களுக்கு அப்பால் வாழ்வதும் இன்று வரை அரசியல் வாதிகளால் எந்தவித உதவிகளும் இன்றி மீள்குடியேற்றமும் இன்றி வாழ்வதும். சொந்த பூர்வீகத்தையும், உடமைகளையும், பல உயிர்களையும் காவுகொள்வதற்கான முக்கிய பங்காளிகளாக இருந்தவர்ககளை கைது செய்து உரிய தண்டனைகளை வழங்கி அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சிறு விமோசனத்தையாவது கொடுக்க முயற்சிக்காமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துகின்றது.
வடமாகாண மக்களுக்கு வெறுப்பான தற்போது அரச மரியாதையில் சுகபோகங்களுடன் இருக்கும் தயா மாஸ்டர், கே.பி போன்றவர்களை முன் நிறுத்தி மீண்டும் மக்களை சீண்டிப்பார்க்க அரசு முயல்வது ஆக்கபூர்வமான விடயமல்லவென மக்களால் விஷனம் தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் மக்களுக்கு சொல்லொனா அநியாயங்களையும், கொடுமைகளையும் செய்துவிட்டு ஏதுமே செய்யாத உத்தமர்கள்போல் அரசுடன் ஒட்டியும் அதற்கு அரசு ஆதரவளிப்பதும் பாரிய மனித உரிமை மீறல் இல்லையா? என மக்கள் வினவுகின்றனர்.
அரசாங்கம் தற்போத சாதாரணமாக புலிகள் இயக்கத்தில் உதவியாளர்களாகவும், எடுபிடிகளாகவும் இருந்தவர்களை யுத்தம் முடிந்து இன்றுவரை தேடித்தேடி பிடித்து தண்டனை வழங்கும்போது முழுப் பூசனிக்காய்போல் புலி முக்கியஸ்தர்களை அரசு அரவனைப்பதில் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள் மட்டுமல்லாது அரசின்மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்து வருவதையே அரசின் மேற்படிச் சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. புலிகளால் விரட்டப்பட்ட வடமாகாண முஸ்லிம் மக்கள் கடந்த 23 வருடங்களை தமது வாழ்வில் சகலவற்றையும் இழந்தவர்களாகவும் புலிகளால் பலிவாங்கப் பட்டவர்களாகவும் இருக்கும் இவ்வேளையில் இவர்களுக்கு எந்தவித உறுதிப்பாடுகளையும் வழங்காது அனைவராலுமே குற்றவாளியென வர்ணிக்கப்படும் தயா மாஸ்டரை தேர்தலில் களமிறக்குவதற்கான உறுதிவழங்கி தேர்தலில் உள்வாங்க இருப்பது எந்தவிதத்தில் நியாயம்? என்பதனை வடமாகாண முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல வடமாகாணத்தில் பாதிக்கப்பாட்ட தமிழ் மக்களும் கூட நியாயம் கேட்கின்றனர்.
தற்போது அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கம் விநாயக மூர்த்தி முரலிதரன், டக்களஸ் தேவானந்தா, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பலர் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் வரலாற்று துரோகம் இழைத்தவர்கள் என்பதனை அரசு புரியாதிருந்தாலும் அவர்களால் பலிவாங்கப்பட்ட மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
1990ஆம் ஆண்டு புலிகளால் ஈவிரக்கமற்ற முறையில் விரட்டப்பட்ட சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாகாண முஸ்லிம் மக்களுக்கு எப்போது அரசாங்கம் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கப்போகின்றது என்ற வினாவுக்கு இன்னும் அரசால் பதில் வழங்கப்படவில்லை?. மண்ணிக்க முடியாத துரோகம் இழைத்தவர்களை மடியில் வைத்துக் கொண்டு தாலாட்டுப்பாடும் அரசாங்கம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களிடம் ஏன் தமிழ் மக்களிடத்திலும் வாக்குக் கேட்பது வேடிக்கையான விடயமாக இருப்பதையே சுட்டிக்காட்டுவதாக வடமாகாண மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தண்டனை பெறவேண்டியவர்கள் இன்று மக்களுக்கு முன் அமைச்சர்களாகவும், மக்களை வழி நடத்துவதற்கு அரசால் திசை திருப்பப்பட்டிருப்பதானது பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்புக்களுக்கும், துன்பத்திற்குமே இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை என்பதாக புத்திஜீவிகளும், பாதிக்கப்பட்ட மக்களும் குரல் கொடுக்கின்றனர். உண்மையான ஜனநாயக நாடாக இலங்கை விளங்குமானால் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யவேண்டும். ஆனால் இன்று குற்றவாளிகள் சுதந்திரமாக அரச பாதுகாப்பில் இருப்பதும் மற்றுமொரு வியப்பான விடயமாகும்.
ஆனால் மேற்படிச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் இன்று ஜனநாயத்தில் நம்பிக்கை இன்மையை தோற்றுவித்து வருவதும் வெளிப்படையாகவுள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டு 23 வருடங்கள் கடந்தும் தாம் நீதிக்கும், ஜனநாயகத்திற்கும் மாற்றமாக தனிமனித குழு சட்டத்தை கையில் எடுத்ததன் காரணமாக அநாதைகளாக இருக்கும் மக்களுக்கு எப்போது அரசாங்கம் நியாயம் பெற்றுத் தரும் என பாதிக்கப்பட்ட வடமாகாண மக்கள் இன்றுவரை ஏங்கி நிற்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் அராஜகத்தால் கடந்த 23 வருடங்களாக அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார விடயங்களில் பாரிய பின்னடைவுகளுடன் விலாசமற்றவர்களாக காணப்படும் மக்களை அரசியல் வாதிகள் அவர்களின் சாதுர்ய கதைகளால் மயக்கி அவர்களின் சுகபோக அரசியல் வாழ்வுக்கான உறுதிப்பாட்டுக்கு மக்களின் வாக்குகளை பறித்தெடுக்கும் தந்ரோபாயங்களுக்கான சந்தர்ப்பங்கள் மட்டுமே இடம்பெயர்ந்தவர்கள் வழங்கிய பரிசு.
நாட்டின் துரோகிகளாக மட்டுமல்லாது சர்வதேசம் வரை குற்றவாளிகளாக விலாசமிடப்பட்ட விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை காப்பாற்றி விருப்பமில்லாத மக்கள் மத்தியில் மீண்டும் திணிக்க நினைப்பது வடமாகாண சபைத்தேர்தலின் நியாயமான தேர்தலுக்கான சமிக்கையல்ல என்பதனையே புலப்படுத்துகின்றது. உண்மையில் இவர்கள் தேர்தல் களத்திற்கு முன் நிறுத்தப் படுவார்களானால் அவர்கள் தமது வெற்றிக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் அப்பால் அரசின் ஆதரவாளர்களாக அரசின் கட்சியில் போட்டியிடுவதால் தம்மாலான சகல தில்லுமுல்லுகளை மட்டுமன்றி சர்வாதிகார போக்குகளையும் கையாளமாட்டார்கள் என்பதில் என்ன நம்பிக்கை இருக்கின்றது? என மக்கள் கேட்கின்றனர்.
தேர்தல் விடயங்களில் நடக்கும் திருவிளையாடல்களுக்கு இலங்கையின் கடந்தகால தேர்தல் அனுபவங்களை மக்கள் நன்றாகவே கற்றுள்ளனர். ஓரளவு நிம்மதியாக நடைபெற எதிர்பார்க்கும் வடமாகாண சபைத் தேர்தல் தற்போது வடமாகாண மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல்களையும், நம்பிக்கை இன்மையையும் வெளிப்படுத்துவதாகவே நோக்கப்படுகின்றது. முப்பது வருட சோக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து யுத்த வெற்றியின் பின்னராவது வடமாகண மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு தேர்தலாக இத்தேர்தலை சர்வதேசக் கண்ணோட்டத்தின் மத்தியில் நடைபெறுவதற்கு அரசு உதவவேண்டும் என வடமாகாண மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே வடமாகாண சிறபான்மை மக்களின் அரசியல் வாழ்வுக்குள் குற்றக் கறைகளை உள்வாங்காது ஆயுதம் ஏந்தாத சேவை செய்யக் கூடியவர்களையும், யுத்தத்தால் அழிவுற்ற வடக்கை மீட்பதற்காக ஆர்வமுள்ள புத்தி ஜீவிகளையும் மக்கள் விரும்பும் வகையில் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வேண்டும் என்ற வகையில் தேர்தல் நடைபெறுவதற்கு அரசு முழுப் பொறுப்பையும் எடுப்பதோடு அதற்குச் சாதகமான நிலைமைகளை தடைகளின்றி செய்து கொடுக்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பங்களாகும்.

Post a Comment