Header Ads



விஞ்ஞான, தொழினுட்ப கல்வி காலத்தின் கட்டாயம் - சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ்

(எம்.வை.அமீர்)

எமது நாட்டில் ஏனைய துறைகளுக்கான பட்டதாரிகள் அதிகமாக காணப்படுகின்றனர். ஆனால் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறைகளுக்கு பலத்த கிராக்கி நிலவி வருகிறது. அண்மையில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய தொழில் நுட்ப பாடநெறிகள் மூலம், 50 வீதமாக உள்ள கலைத்துறையினரை, 25 வீதமாக குறைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாக  தென்கிழக்கு பல்கலைக்கழக கணணி விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர் எ.எல்.ஹனீஸ், அட்டாளைச்சேனை அல் முனீரா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற விஞ்ஞான பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின்  போது தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் இரண்டாவதாக 1AB பாடசாலையாக அல் முனீரா மகளிர் கல்லூரி தரம் உயர்த்தப்பட்டத்தையும், விஞ்ஞான பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், அல் முனீரா மகளிர் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.அப்துல் சலாம் தலைமையில் 2013.07.03 ம்  திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையும் விசேட அதிதிகளாக வலைய கல்விப்பணிப்பாளர் எ.எல்.எம்.காசீம, இலங்கை வங்கி முகாமையாளர் ABA கபூரும்  மற்றும் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்களும் பெற்றோரும் மாணவர்களும் பங்கு கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய சிரேஷ்ட விரிவுரையாளர் எ.எல்.ஹனீஸ் விஞ்ஞான கல்வியை கற்றவர்களின் தேவைப்பாடு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகமாக காணப்படுவதாகவும் எமது மாணவர்கள் விஞ்ஞான கல்வியை தேடி படிக்க வேண்டிய தேவை உளதாகவும் தெரிவித்தார்.

விஞ்ஞான கல்வியை கற்ற ஒரு மாணவர் ஏனைய கல்வியை தொடர்வதற்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் தொழிலை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படுவதில்லை என்றும் கூறினார்.

உயர் தரத்தில் விஞ்ஞான பாடங்களை கற்பது கஷ்ட்டமான விடயம் என்றும், பல்கலைக்கழக அனுமதியை பெறுவது கடினம், என்றும் மாணவர்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயம் நிலவுவதாகவும், இப்படியான எண்ணப்பாடுகள் களைந்து எறியப்பட வேண்டியவை என்றும், விஞ்ஞான பாடங்களை உரிய பரிசோதனை செயல்முறைகளுடன் கற்கும் போது மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்றும், தேடல்கள் அதிகம் உள்ளதால் மிகவும் ஆர்வமுடைய கல்வியாக இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், வாழ்க்கையில் முன்னேற கடின உழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.

விஞ்ஞான பாடங்கள் சம்மந்தமான பாடக்குறிப்புகள்,பயிற்சிகள்,செயல்முறைகள் மற்றும் செய்து காட்டல்கள் போன்ற பல பயனுள்ள விடயங்கள் இணையத்தளங்களில் பொதிந்து காணப்படுவதாகவும் இவற்றை மாணவர்கள் எவ்வாறு நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது சம்மந்தமான வழிகாட்டல் விரிவுரைகளை எதிர்காலத்தில், தான்  கட்டணமற்ற முறையில் கற்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் நலிந்த நிலையில் இருந்த அல் முனீரா மகளிர் கல்லூரி, பாடசாலை அபிவிருத்திசபை மேற்கொண்ட முயற்சியாலும் விசேடமாக  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும்  உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் எ.எல்.எம்.அதாவுல்லா போன்றோரின் பாரிய பங்களிப்பினாலும்   அல் முனீரா மகளிர் கல்லூரி புதுப்பொழிவு பெற்றுள்ளதாகவும் பல மாடிக்கட்டிடங்களை கண்டுள்ளதாகவும் இவர்களின் இந்த சேவையை அட்டாளைச்சேனை மக்கள் என்றும் நன்றியுடன் நோக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விஞ்ஞான பிரிவுக்கு சிறந்த நான்கு இளம் ஆசிரியர்களை பெற்றுள்ளதாகவும் அவர்களை நன்கு பயன்படுத்தி சிறந்த பெறுபேறுகளை பெற்று வைத்தியர்களாக பொறியியலாளர்களாக விஞ்ஞான துறை சார்ந்த நிபுணர்களாக வளர வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.