பாட்டு வடிவில் புதிய மொழிகளை கற்பது சுலபமா..?
"புதிய மொழிகளை, பாட்டு வடிவில் கற்கும்போது, அது எளிதில் நம் மனதில் பதிந்து விடுகிறது' என, லண்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதுகுறித்து, எடின்பர்க் பல்கலைக்கழகத்தின், ரீட் ஸ்கூல் ஆப் மியூசிக் ஆய்வாளர், கரேன் லூத்க் கூறியதாவது: ஆங்கிலம் பேசுபவர்களுக்கு, ஹங்கேரிய மொழியை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. எனவே, ஹங்கேரி மொழியில் எழுதப்பட்ட சொற்களே சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் பங்கேற்ற, 20 பேரிடம், ஐந்து வகையாக சோதனை நடத்தப்பட்டது.
இதில், பாட்டு வடிவில் இம்மொழியைக் கற்றவர்கள், மற்றவர்களைவிட விரைவாக, புதிய மொழியை கற்றுக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில், வாசிப்பு மூலம் கற்றுக் கொண்டவர்கள், மிகக் குறைந்த அளவிலேயே புதிய மொழியை கற்றுக் கொண்டதும் தெரியவந்தது. இந்த ஆய்வின் மூலம், ஒரு மொழியை கவனமாக, பாடல் வடிவில் கற்றுக் கொள்பவர்களால், எந்த மொழியையும் கற்க முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது. எங்களது இந்த ஆய்வின் முடிவு, வருங்கால ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment