Header Ads



டெங்கு நுளம்புகளுக்கு இரையாகும் பெறுமதிமிக்க மனித உயிர்கள்..!

(ஏ.எல்.ஜுனைதீன்)

    டெங்கு எனும் ஆட்கொல்லி நோயை இல்லாது ஒழிப்பதற்கு வாரம் ஒரு முறை குடியிருக்கும் இல்லம், பாடசாலை, காரியாலயம் மற்றும் உள்ளும் புறச் சூழலிலும் உள்ள “டெங்கு நுளம்பு” உருவாகும் இடங்களை இல்லாது ஒழிக்குமாறு சுகாதார பாதுகாப்பு மற்றும் போஷணை அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

    டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் எண்ணத்துடன் ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஒரு வாரத்தை தேசிய  நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக தீவிரமாகக் கடைப்பிடிக்குமாறும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

    நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது  நுளம்புகள் அதிகமாக இருக்கும் பாடசாலைகள், வீடுகள், பொது இடங்களில்  பயன்படுத்தப்படாது இருக்கும் காணிகளில் நீர் தேங்கியிருக்கும் பகுதிகள் ஆகிய இடங்களில் நுளம்பை அழிப்பதற்காக கிருமிநாசினிகளைத் தெளித்தும்,அநாவசியமாக வளர்ந்திருக்கும் புதர்களை வெட்டி தீக்கிரையாக்குவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
    டெங்கு பற்றி தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மக்களுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாவது,

    சுற்றுச் சூழலிலுள்ள டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை இனங்கண்டு அழித்து விடுவதே  டெங்கு நோய்க்கான தடுப்பு முறையாகும்.

    நுளம்பு கடிப்பதால் மட்டுமே டெங்கு வைரஸ் (ஈட்ஸ் ஈசிப்டைஸ் அல்லது ஈட்ஸ் அல்போபிக்டைஸ்) உடலுக்குள் செலுத்தப்படுகின்றது.   டெங்கு நுளம்பானது பகல் நேரங்களில் கடிக்கும். அதன் முட்டை இலகுவில் ஒட்டிக் கொள்ளும். சுத்தமான நீரில் மட்டுமே முட்டையிடும். ஒரு முட்டையிலிருந்து நுளம்பு உருவாக ஒரு வார காலமாகும்.

    ஆரோக்கியமான நுளம்பு ஒரு முறைக்கு 100 தொடக்கம் 200 முட்டைகள் வரை இடும். அப்புறப்படுத்தாவிட்டால் வரண்ட இடங்களில் 6 தொடக்கம் 12 மாதங்கள் வரை நுளம்பின் கரு முட்டை இறக்காமல் அப்படியே இருக்கும்.

    பூந்தொட்டிகள், நீர் தேங்கும் பாத்திரங்கள், தாங்கிகள், குளிர்சாதனப் பெட்டியின் கீழ் பகுதியில் உள்ள தட்டு, பழைய டயர், பிளாஸ்டிக் பாத்திரங்கள், சிரட்டை, டின், போத்தல், தயிர் சட்டி, கூரை பீலிகள், நீர் நிறைந்திருக்கும் கொங்கிகிறிட் கூரை, பறவைகள் குளிக்கும் நீர்த் தடாகம்,புரோமிலியா எனும் அலங்காரத் தாவரம், மூங்கில் மரம், நீர் தேங்கும் தாவரங்கள் என்பனவற்றில் டெங்கு நுளம்பு முட்டையிடும்.

டெங்கு நுளம்பு முட்டையிட்டு உற்பத்தியாகாமல் இருப்பதற்கு,
பழைய டயர்களில் மண் நிரப்பவும்,துளையிடவும் அல்லது நீர் தரிக்காமல் மூடிக் களஞ்சியப்படுத்தவும்.
பிளாஸ்டிக் பாத்திரங்கள், டின், போத்தல், சிரட்டை போன்றவைகளில் நீர் நிரம்பாமல் பாதுகாக்கவும் இல்லையேல் அவைகளை விற்று பணமாக்கவும்.
கூரை பீலிகள், நீர் நிறையும் கொங்கிறீட் கூரைகளில் அடைபட்டிருக்கும் இலைச் சறுகுகள் மற்றும் தேவையற்றவைகளை அகற்றி நீர் வழிந்தோட வழியமைக்கவும்.
நீர்த் தாங்கி, பெரல், பீப்பாய் போன்றவைகளை நன்கு மூடி வைக்கவும். வாரம் ஒரு முறை தேய்த்து  சுத்தப்படுத்தவும்.
பறவைகள் குளிக்கும் நீர்த்தடாகம், பூச்சாடி, பூந்தோட்ட அலங்காரப் பொருட்களை வாரத்திற்கு ஒரு தடவை தேய்த்து சுத்தப்படுத்தவும்.
குளிர்சாதனப் பெட்டியின் கீழ்ப்பகுதியில் தங்கும் நீரை வாரத்திற்கு ஒரு முறை அப்புறப்படுத்தி அதன் தட்டை நன்றாகச் சுத்தம் செய்யவும்.

டெங்கு காய்ச்சல் பற்றியும் அதன் அறிகுறிகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

    கடுமையான காய்ச்சல், தலைவலி,, வாந்தி, உடல் வலி என்பன டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். 3 அல்லது 4 நாட்களுக்குள் இவ் அறிகுறிகள் குறைந்து குணமடையலாம். ஆனாலும் சிலருக்கு டெங்கு உயிர் கொல்லி கடுமையாகப் பாதிக்கலாம்.

    தோலில் செந்நிற இரத்தக் கட்டிகள் தோன்றுதல், கண்கள் சிவந்து காணப்படுதல், மூக்கிலிருந்து இரத்தம் கசிதல், மலம் சிறு நீர் ஆகியவற்றுடன் இரத்தம் வெளியேறுதல், பல் முரசுகளிலிருந்து இரத்தம் கசிதல், வாந்தி அல்லது மலம் கறுப்பு அல்லது கபில நிறத்தில் வெளியேறல் என்பன டெங்கு உயிர் கொல்லி நோய்க்கான அறிகுறிகளாகும்.

    டெங்கு உயிர் கொல்லி நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியின் காய்ச்சல் திடீர் திடீரெனக் குறையலாம். ஆனாலும் நோயாளி தொடர்ந்தும் சோர்வாகவும் சுகயீனமடைந்தும் காணப்பட்டால் அது நோய் தீவிரமடைவதன் அறிகுறியாகவிருக்கலாம்.

    உடல் கடும் குளிரடைதல், உடல் வெளிறியிருத்தல்  குழப்ப நிலை மற்றும் உறக்க நிலை, மூச்சு வாங்குதல்,  நாடித் துடிப்பு அதிகமாயிருத்தல், தள்ளாடிய நிலை என்பன டெங்கு நோய் முற்றிய நிலைக்கான அறிகுறிகளாகும்.

    காய்ச்சலால் பாதிப்புற்ற குழந்தையின் காய்ச்சல் உடனடியாகக் குறைதல் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அஸ்ப்ரின் அல்லது அஸ்ப்ரின் அடங்கிய மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்கவும். காய்ச்சலைக் குறைப்பதற்கு பெரசிட்டமோல் கொடுக்கலாம். இதனை தினமும் நான்கு வேளைகளுக்கு மட்டும் கவனமாகக் கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் ஏற்படின் இயன்றவரை ஓய்வு எடுக்கவும். சிறுவரானால் பாடசாலைக்கு அனுப்பாமல் ஓய்வு எடுக்க விடவும்.
பகல் நேரங்களில் கட்டிலில் ஓய்வு எடுக்கும் போது நுளம்பு வலை பயன்படுத்துதல் மிகவும் நல்லது.
அதிகமாகப் பானங்களைப் பருகக் கொடுக்கவும்.
அஸ்ப்ரின் அல்லது அஸ்ப்ரின் அடங்கிய மருந்துகளைக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பின் அரச வைத்தியசாலை அல்லது உரிய வைத்தியரிடம் சிகிச்சை பெறவும்.
சிகிச்சையின் பின்னரும் நோய் அறிகுறிகள் தென்படுகின்றனவா என அவதானமாகயிருக்கவும்.

    அரசாங்கம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மீது காட்டிவரும் ஆர்வத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொது மக்கள் தங்கள் பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.