Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் பங்களிப்பு பாராட்டத்தக்கது - கலாநிதி எம்.ஏ.எம்.ஷுக்ரி

(Ni) தேசிய விவகாரங்களில் இணைந்து நல்லுறவை வளர்ப்பதில் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். தனித்து இயங்காமல் பௌத்த, தமிழ் ஊடக அமைப்புக்களுடனும் இணைந்து தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், சமாதானம் போன்றவற்றுக்குப் பாடுபடுவதில் முஸ்லிம் மீடியா போரத்தின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.

பேருவளை ஜாமிஆ நழீமிய்யா கலா பீடப் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.ஷுக்ரி இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம் மீடியா போரத்தின் 18 ஆவது வருடாந்த மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றினார்.

என்.எம்.அமீன் இம்மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். அவர் தமது உரையில் 1995 இல் 34 பேருடன் உருவான நமது போரம் இன்று 700 உறுப்பினர்களைக் கொண்டு வளர்ச்சி அடைந்துள்ளது.

நாட்டின் இறைமை, சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாத்து இன ஒற்றுமையைப் பாதுகாப்பதில் நாம் பெரும் பங்காற்றி வருகின்றோம் என்றார். தொடர்ந்து பேசிய கலாநிதி ஷுக்ரி, ஊடகம் தொடர்பாக நாம் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும். இஸ்லாத்தைப் பயங்கரவாதமாகக் காட்டி அது வன்முறை கொண்ட மதமென மேற்குலக ஊடகங்கள் தப்பாகத் தெரிவித்து வருகின்றன.

இன்று உலகில் இருவகையான யுத்தங்கள் நடக்கின்றன. ஒரு புறம் இராணுவ யுத்தங்கள் போர்களங்களில் நடக்கின்றன. மக்கள் அதனால் அழிகின்றனர். மறுபுறம் தொடர்பு சாத னத் துறையின் போராட்டங்களும் பண்பாட்டை அழித்து வருகின்றன. மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளைத் திரித்துக் கூறிக் கொண்டிருக்கின்றன.

எனவே நாம் தெளிவைப் பெற வேண்டும். முஸ்லிம் மீடியா போரம் வேறுபட்ட தனித்த இயக்கம் அல்ல. அது வளரும் மாணவ சமூகத்தைச் சரிவர வழிநடத்த வேண்டும். முஸ்லிம் மீடியா போரம் பாடசாலை மட்டத்தில் நடத்தி வரும் தொடரான ஊடகச் செயலமர்வுகள் சிறந்த ஏற்பாடாகும்.

தேசிய சமாதானமே அவசரத் தேவை ஆகும். எனவே இதனை நிலைநாட்ட நாம் பாடுபட வேண்டும் என்றார். கலாநிதி எம்.ஏ.எம்.ஷுக்ரியின் கல்விப் பணிகளைப் பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை முஸ்லிம் மீடியா போரம் இவ்விழாவில் வழங்கியது. “ராவய’ பத்திரிகை இன நல்லுறவைப் பேண மேற்கொள்ளும் பணிக்காக அப்பத்திரிகைக்கும் விசேட விருது வழங்கப்பட்டது.

      

No comments

Powered by Blogger.