Header Ads



ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம் - ஜம்இய்யதுல் உலமா

நாம் அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த புனித ரமழான் மாதம் எம்மை வந்தடைந்து சில நாட்களும் கழிந்து விட்டன. புனித அல்குர்ஆன் இறக்கப்பட்ட இம்மாதம் நன்மைகளை அதிகதிகம் சம்பாதித்துக் கொள்ளும் ஒரு மாதமாகும். இம்மாதத்தினை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிகளவு நன்மைகளை செய்து அல்லாஹ்வின் அன்பையும் பாவமன்னிப்பையும் பெற்றுக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.

இப்புனித மாதத்தில் முஸ்லிம் சமூகம் ஐக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விரும்புகின்றது. முஸ்லிம்கள் வீண் விளையாட்டுகளிலும் தேவையற்ற கருத்து முரண்பாடுகளிலும் ஈடுபட்டு தமது நேரத்தை வீணாக்காது நல்லமல்களை செய்வதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அத்தோடு, பெண்கள் தேவையின்றி வீதிகளில் நடமாடல், ஸஹர் நேரங்களில் வானொலியின் சப்தத்தை அதிகரித்தல், இளைஞர்கள் இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுதல், மற்றும் இரவு நேர தொழுகைகளின் போது ஒலி பெருக்கியின் சப்தத்தை மஸ்ஜித்களுக்கு வெளியே கேட்கும் வகையில் பயன்படுத்துதல் போன்ற பிறருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை எமது சமூகம் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பிறருக்கு தீங்காக அமையும் இவ்வாறான செயற்பாடுகளை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

இப்புனித ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் ஓதுதல், தறாவீஹ், வித்று, தஹஜ்ஜுத் போன்ற இரவு நேரத் தொழுகைகளில் கவனம் செலுத்தல், குர்ஆனுடைய மாதத்தில் குர்ஆனைக் கற்றல், மார்க்க சட்டதிட்டங்களை கற்றுக் கொள்ளல், ஸதகா ஸகாத் மூலம் ஏழைகளுக்கு உதவுதல், அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல் போன்ற இன்னோரன்ன நற்கருமங்களில் ஈடுபட்டு தங்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை வளர்த்து, பிறருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தவிர்த்து முன்மாதிரி மிக்க ஒரு சமூகமாக நாம் இருக்க வேண்டும்.

இப்புனித மாதத்தில் அல்லாஹ்வின் அன்பையும், பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றுக் கொண்ட நல்லடியார்களாக அல்லாஹ் எம்மனைவரையும் மாற்றியருள்வானாக. ஆமீன்.

அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

No comments

Powered by Blogger.