குறை வசதிகளுடன் கூடுதல் நன்மை செய்ய வேண்டும் - ஹஜ்ஜூல் அக்பர்
(JM.Hafeez)
உலக நாகரீகங்கள் அனைத்தும் நதிக்கரையில் வளர இஸ்லாமிய நாகரீகம் நீரில்லாத பாலை நிலத்தில் வளர்ந்த வரலாறு முக்கியமாகும். என்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷேக் றசீட் ஹஜ்ஜூல் அக்பர் தெரிவித்தார். மடவளை பஸார் ஜமாஅத்தே இஸ்லாமி கிளை ஒழுங்கு செய்த விசேட சன்மார்க்கப் பிரசங்கம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.மடவளை சன்ஷைன் மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.
அதில் அவர் மேலும் தெரிவித்தாவது,
குறைந்த உள்ளீடுகளைக் கொண்டு கூடிய வெளியீடுகளை தரும் இயந்திரங்களே சந்தையில் சிறந்த இயந்திரங்களாகக் கருதப் படுவதுபோல் குறைந்த 'இன்புட்டை'க் கொண்டு கூடிய 'அவுட்புட்டை'த் தரும் சிறந்த 'கொலிட்டி' கொண்ட இயந்திரம்தான் எமது றமலான் நோன்பாகும்.
ஒருவனுடைய ஆளுமையை அவனது மரண வீட்டில் நாம் கண்டு கொள்ளலாம். ஒருவன் பலருடனும் நற்பு ரீதியாகவும் அவர்களுக்கு நன்மை செய்பவனாகவும் வாழ்ந்தானாயின் அவனது மரண வீட்டில் எல்லோரும் கூட்டம் கூட்டமாகக் கூடுவது அவன் வாழ்ந்த காலத்து ஆளுமையைப் பறை சாற்றுவதாக இருக்கும்.
உங்களில் சிறந்த மனிதன் யார் எனில், எவன் மனிதனுக்கு அதிகம் சேவை புரிகின்றானோ அவனே உங்களில் சிறந்தவர் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
குறைவாக அனுபவித்து கூடுதலான நற்காரியங்கள் புரியும் பயிற்சியை வழங்கும் ஒரு வழிமுறையாக புனித ரமலான் உள்ளது. ஒரு வேற்று மத சகோதரர் ஒரு முஸ்லிமைப் பார்த்துக் கேட்டார் நீங்கள் குடிப்பு வகைகளை எல்லாம் நன்றாகக் குடித்து விட்டு கடினமான வற்றை உண்ணாது தானே நோன்பு நோற்கின்றீர்கள் எனக் கேட்டார். அதற்கு அவர் பதிலளித்தார். 'அப்படி என்றால் வாம் வாழ்நாள் முழுவதுமே நோன்பு பிடிப்போம்' என்று. இங்கே முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது இவ்வாறான சிரமமான காரியங்களை நாம் செய்து பழக்கப்படுத்தி விட்டோம் என்பதனால் அதன் தாத்பரியங்கள் புரிவதில்லை. சாதாரணமாக சஹர் நேரத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். முதல் நாள் குறைவாகத் தூங்கிய ஒருவன் மீண்டும் அதிகாலையில் எழுந்து உணவு உண்பதென்பது உலகில் எந்த மனிதனாவது செய்யக் கூடிய ஒன்றா? அது மட்டுமா மீண்டும் தூங்காது சுபஹூத் தொழுகையையும் நிறைவேற்றுகிறான். முழு நாளும் உண்ணாது பருகாது இருக்கிறான். அதுவும் ஒரு மாதத்திற்கு அதைச் செய்கிறான். தன்னால் இயன்றவரை தான தருமம் செய்கிறான். ஏழை எளியவர்களுக்குக் கொடுக்கிறான். வருடத்தில் ஒருநாள் ஸகாத் கொடுக்க உரிமை இருந்தும் அதனையும் றமலானிலே செய்கிறான். ஏனெனில் கூடுதல் நன்மையைப் பெற்றுக்கொள்வதற்காக. தன்னால் முடிந்தாலும் முடியாவிட்hலும் பல்வேறு வணக்கங்களை நிறை வேற்றுகின்றான். இவற்றிற்காக அவன் குறைந்தளவே அனுபவிக்கிறான்.
இது பழக்கத்தில் வந்ததன் காரணமாக நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளா விட்டாலும் குறைந்த அளவு அனுபவித்து கூடிய அளவில் நற்காரியம் செய்யும் ஒருகாலமாக ரமலான் உள்ளது. எனவே ரமலான் அதற்கான பயிற்சியையே எமக்குத் தருகிறது.
உலகில் பல்வேறு நாகரீகங்கள் தோன்றின. சிந்து நதிக்கரை நாகரீகம், நைல் நதிக்கரை நாகரீகம் என்றெல்லாம் பட்டியல் படுத்தலாம். உலகில் அனைத்து நாகரீகங்களும் நதிக்கரையிலிருந்து அரம்பித்துள்ளன. காரணம் நதியை அண்டிய பகுதிகளில் மக்கள் வாழ வசதியாக இருக்கும். இதனால் அவர்கள் அங்கு குடியேறி விவசாயம் மற்றும் கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்து அவர்களிடத்தில் பல்வேறு நாகரீகப் பண்புகள் உருவாகின.
ஆனால் இஸ்லாமிய நாகரீகத்தை எடுத்துக் கொண்டால் அப்படியல்ல. அங்கு வெறும் பாலை நிலமாக இருந்தது. அங்கு நீறூற்றுக்களோ, வேறு வளங்களோ குறைவாக இருந்தன. இஸ்லாமிய நாகரீகம் ஊற்றெடுத்த காலத்தை அண்மித்த பகுதியில் பெறும் வல்லரசுகளாகவும் சாம்ராஜ்யங்களாகவும் இருந்த உரோமாபுரி, கிரேக்கம், பிரான்ஸ், ஸ்பெயின், போன்ற பலம் பெறும் வல்லரசுகள் எல்லாம் போட்டா போட்டியிட்டு நாடுகளைப் பிடித்த போதும் அரேபியத் தீபகற்பத்தைக் கண்டு கொள்ளவில்லை. காரணம் அங்கு பாலை நிலத்தைத் தவிற வேறு ஒன்றும் இருக்கவில்லi. அப்படியான ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றினால் அங்குள்ள மக்களை சுரண்டுவதைத் தவிர்த்து அம்மக்களுக்கு உணவளிக்கும் வேலையையும் வல்லரசுகள் செய்ய வேண்டி வந்திருக்கும் என்பதால் அவர்கள் அது பற்றிக் கவலை கொள்ள வில்லை. நடந்தது என்ன?
அப்படியாக ஆடுகளை மேய்க்கும் ஒரு கூட்டத்தாரையே உலகை நிர்வகிக்கும் நிர்வாகிகளாக இறைவன் மாற்றி அமைத்தான். காரணம் அவர்களது உள்ளத்தில் வெறுமையே காணப்பட்டது. குறைவாகவே அனுபவித்தார்கள். ஒரு சஹாபியின் கூற்றுப்படி கைபர் யுத்த்தத்தம் முடிவடைந்த காலத்தின் பின்புதான் அவர்கள் வயிரார சாப்பிடும் நிலை ஏற்பட்டதாம்.
அதாவது இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 18 ஆண்டுகள் கடுமையாக உழைத்த பின்புதான் அவர்கள் வேளைக்கு வேளை சாப்பிடும் நிலை ஏற்பட்டது. இவை அனைத்துமஇணைந்து கூறுவது என்ன வென்றால் குறைந்த உள்ளீட்டைக் கொண்டு கூடுதல் வெளியீட்டை பெற வழிகாட்டிய சந்தர்பங்களாகும்.
எனவே உலக நாகரீகங்கள் அனைத்தும் நதிக்கரையில் வளர இஸ்லாமிய நாகரீகம் நீரில்லாத பாலை நிலத்தில் வளர்ந்த வரலாறு முக்கியமாகும். அல்லாவின் வேத ஊற்று தவிர்ந்த நீர் ஊற்றுக்கள் அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே எமது ஆளுமை விருத்தியில் நாம் சமூகத்திற்கும். அதற்கு அப்பால் மறு உலக வெற்றிக்கும் பாடுபடுதல் வேண்டும். அதற்காக குறைந்த வளங்களைக் கொண்டு கூடிய பயனைப் பெறுவது போல் குறை வசதிகளுடன் கூடுதல் நன்மை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றார்.

Great speech....
ReplyDelete