Header Ads



இங்கிலாந்தில் உணவகம் நடத்தும் ஆப்பிரிக்கப் பெண்ணின் கசப்பான அனுபவம்

மூன்று குழந்தைகளின் தாயான ரெனீ கொல்லெ என்ற ஆப்பிரிக்கப் பெண், இங்கிலாந்தின் லீட்ஸ் நகரத்தில் உள்ள ஒசெட் டவுன் மையத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். அவரது உணவகத்தில் இங்கிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.

இந்த உணவகத்திற்கு வரும் இங்கிலாந்து நாட்டுக்காரர்கள் உள்ளே நுழைந்ததும் இவர் கறுப்பினப் பெண் என்று தெரிந்தவுடன் சாப்பிடாமல் வெளியே சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி பல கேள்விகளும் இவரை நோக்கி எழுந்துள்ளன. இந்த செய்கைகளினால் வெறுப்படைந்த அவர் வித்தியாசமான ஒரு காரியத்தைச் செய்தார்.

தன்னுடைய உணவகத்தின் முன்னால், தான் ஒரு கறுப்பினப் பெண், எப்போதுமே அப்படித்தான் இருப்பேன் என்றும், பிடிக்காதவர்கள் உள்ளே வரவேண்டாம் என்றும் ஒரு அறிவிப்புப் பலகையினைத் தொங்கவிட்டார். சுத்தமான சூழ்நிலையில், ஆரோக்கியமான முழுமையான உணவு வேண்டுவோர் உள்ளே வரலாம் என்றும் தான் அவர்களைக் கடிக்கமாட்டேன் என்றும் அதில் எழுதியுள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பானது, உலகின் பல பகுதிகளிலிருந்தும் இனவெறியை எதிர்க்கும் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. உணவகத்தின் இணையதளத்தில் அவருக்கு ஆதரவாக செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

பல நாட்டினரும் அவரை இது குறித்து கவலைப்பட வேண்டாமென்றும், அவர் மற்றவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து நேரத்தை வீணாக்கவேண்டாம் என்றும், அவரது அறிவிப்பு நிலைமையை மாற்றக்கூடும் என்றும் தெரிவித்துள்ள இணையதள வாசகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.