Header Ads



பொது பலசேனா போன்ற கடும் போக்கு எம்மில் கிடையாது - விசுந்தானந்த தேரர்

கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த அமைப்பு ஒன்று இன்று 11-07-2013 கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதுவராலயத்திற்கு விஜயம் செய்து புத்தகயாவில் மகாபோதி தாக்கப்பட்டமை தொடர்பாக தமது கண்டனத்தை தெரிவித்தது.

ஹத்தரலியத்தை 'ஸ்ரீ சுவர்ணகே சங்கம்' என்ற அமைப்பே இதனை ஒழுங்கு செய்திருந்தது. அக்குழுவில் சமூகமளித்த திம்புல்கும்புரே விசுந்தானந்த ஹிமி தெரிவித்ததாவது,

உலகில் பௌத்தர்கள் எங்கு வாழ்தாலும் அவர்களது அரம்ப இடம் இந்தியாவாகும். அந்த அடிப்படையில் நான் இலங்கையில் வாழ்ந்தாலும் பௌத்தன் என்ற வகையில் எனது பூர்வீகம்  இந்தியாவாகும்.  நான்  புத்தகயாவிற்கு சென்று அங்கிருந்து உலக பௌத்த மக்களுக்கு ஒரு பிரகடணத்தை செய்யவுள்ளேன். 

அதாவது அச்சமின்றி பௌத்தர்கள் இந்தியாவிற்கு வரலாம் என்ற செய்தியை வழங்க உள்ளேன். எனவே எனக்கும் எனது குழுவிற்கும் இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தினுடாக தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

பொது பலசேனா போன்ற கடும் போக்கு எம்மில் கிடையாது. நாம் மலையகத்தவர்கள் (உடரட்ட) அதன் காரணமாகவே நாம் ஒரு முஸ்லிமையும் உடன் அழைத்து வந்துள்ளோம். மலைநாட்டைச் சேர்ந்த நாம் ஒருதாய் மக்களாக வாழ்கிறோம். 30 வருட சோகத்தை விட்டும் மீண்டுள்ள இவ்வேளை சிலர் அதனைக் குழப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். நாம் அப்படியானவர்கள் அல்ல. நாம் தொடர்ந்து சகோதர வாஞ்சையோடு வாழ்வதற்காக ஒரு நல்ல செய்தியை இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

இந்திய உதவித் தூதுவர் சார்பாக இரண்டாம் செயலாளர் வினோத் பாஸி மகஜர் ஒன்றையும் பெற்றுக் கொண்டு பதில் அளித்தார்.

நடந்த சம்பவம் குறித்து நாம் கவலை அடைகிறோம். இது இந்தியாவுடன் தொடர்புடையதல்ல. ஏதோ ஒரு பயங்கரவாத அமைப்பின் வேலையாகும். அதனை கண்டு பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அது புத்தகயாவிற்கு மட்டுமல்ல. இந்தியாவிலுள்ள சகல மத ஸ்தலங்களுக்குமாகும். குறிப்பாக இந்து மத வழிபாட்டுத்தலங்களுக்குக் கூட பாதுகாப்பு வழங்கவுள்ளோம் என்றார்.

இங்கு உரையாற்றிய ஹத்தரலியத்தை சிவில் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் எம்.ஐ.எம்.ராசிக் தெரிவித்ததாவது,

எந்த மதமானாலும் பௌத்தர்களது மிக முக்கிய பௌத்த தலமாக நாம் புத்தகயாவைக் கருதுகிறோம். முஸ்லிம்கள் என்ற வகையில் யார் செய்தாலும் அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். முஜாஙிதீன் அமைப்பு மீது பலர் சந்தேகம் தெரிவித்து வரும் இவ்வேளை இலங்கை முஸ்லிம்கள் பற்றி தெளிவான ஒரு கருத்தை நாம் வழங்கவேண்டியுள்ளது.

ஏனைய உலக நாட்டு முஸ்லிம்களில் இருந்து இலங்கை முஸ்லிம்கள் வேறு பட்டவர்கள். அதாவது சிங்களத்துடன் ஒன்றரக் கலந்தும் அவர்களது சந்ததியாகவும் நாம் இருக்கிறோம். எமக்கென்று தனித்துவம் இருந்தாலும் நாம் சிங்கள இனத்தவருடன் பரம்பரையாக ஒற்றுமையாக வாழ்து வருகிறோம். எம்மில் பேதம் இல்லை எனபதைக் காட்டும் வகையில் எமது சமூகத்தை நான் இங்கு பிரதி நிதித்துவப் படுத்துகிறேன் என்றார். இறுதியாக ஊர்வலமாக வந்த தூதுக்குழுவினர் அமைதியாகக் கலைந்து சென்றனர்.


No comments

Powered by Blogger.