அம்பாரை மாவட்டத்தில் ஒரே சீரான பள்ளிவாசல் நிர்வாக அமைப்பு தேவை
( ஏ.எல்.ஜுனைதீன் )
அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கவனத்திற்கு!
சமகாலத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தேறிவரும் வன்முறைகளும் காழ்ப்புணர்ச்சி மற்றும் சமய இழிவு படுத்தல் போன்ற செயற்பாடுகளும் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வொழுங்கில் சில மாற்றங்களின் தேவையை உணர்த்துகின்றது.
முஸ்லிம்களின் வாழ்வொழுங்கைக் கண்காணித்து நெறிப்படுத்துவதில் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்ட நிர்வாகமே பண்டைக்காலம் தொட்டு முக்கிய வகிபங்கை ஆற்றிவந்துள்ளது. அரசர்கள் காலத்தி;ல் இருந்து அரச உயர் அதிகாரிகள்,நீதிமன்றம்,பொலிஸ் போன்ற நிறுவனங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்வொழுங்கை நிலை நாட்டுவதிலும் தனி;ப்பட்ட பல பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பள்ளிவாசல்கள் நிர்வாகத்தையே நாடியுள்ளனர். தற்போதும் சில சந்தர்ப்பங்களில் இந் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. அனர்த்தங்களின் போதும் சமூக நலன்புரி நடவடிக்கைகளிலும் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்ட நிர்வாகமே முன்னின்று சேவையாற்றியுள்ளது. எனவே பள்ளிவாசல் நிர்வாக சபைகள் சமூகத்தில் நன்மதி;ப்பாளர்களைக் கொண்டதாகவும் நற்பண்புள்ளவர்களைக் கொண்டதாகவும் அமைவது அவசியமாக இருந்தது.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் ஊர்கள் அனைத்திலும் மேற் கூறப்பட்ட ; பள்ளிவாசல்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் அவ்வூர் பெரிய பள்ளிவாசல் மரைக்கார் சபையாகக் காணப்பட்டது. இச்சபையின் அங்கத்தவர்கள் அவ்வூரில் பிறந்து வசிக்கும் பல்வேறு தாய் வழிக்குடிகளைச் சேர்ந்தோரின் பிரதிநிதிகளாகும். குடிகளின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப மரைக்கார் சபையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. இம்மரைக்கார் சபை காலவரையின்றி தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தது. மரணித்தவர்கள், இராஜினாமாச் செய்தவர்களுக்குப் பதிலாக குறிப்பிட்ட குடிகளில் தகுதியான நன்மதிப்பாளர்களை மரைக்கார் சபையே தெரிவு செய்யும். இம்முறைக்கு மாறாக எடுத்த பல முயற்சிகள் தோல்வியாகவே முடிந்துள்ளது.
மரைக்கார்மார் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரிய போது நன்மதிப்பாளர் பலர் விண்ணப்பிக்க விரும்பவில்லை. விண்ணப்பித்தவாகளில் சிலர் தெரிவு செய்யப்படாத போது சட்ட நடவடிக்கை உட்பட பல குழப்பங்களை ஏற்படுத்த முயன்றனர். ஜமாஅத்தினர் அனைவரையும் கூட்டித் தெரிவு செய்யும் முறை பெரும் தொகையான மக்கள் வாழும் கிராமங்களில் விசேடமாக அரசியல் ஆர்வமும் பதவி ஆசையும் கூடிய மக்கள் மத்தியில் சாத்தியமற்றதாகவும் பாரிய குழப்பங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் மாறும்.
'பெரியோர்களை மதிக்கும் சமூகத்திலேயே பெரியோர்கள் உருவாக முடியும்' என்ற அறிஞர் சித்தி லெவ்வையின் கூற்றுக்கிணங்க பெரியோர்களை மதிப்பவர்களைத் தெரிவு செய்வதன் மூலமே பிற்காலத்தில் எமது சமூகம் பல பெரியோர்களைக் கொண்ட சமூகமாக மாறும்.
1950களின் பின் வக்பு சபை,முஸ்லிம் கலாசார திணைக்களம் என்பன ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் பள்ளிவாசல்களின் நிர்வாகத்திற்கென நம்பிக்கையாளர்கள் தெரிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நம்பிக்கையாளர்கள் தெரிவு அம்பாரை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பல் வேறுபட்ட முறைகளில் நடைபெற்று வருகின்றது. ஆயினும் பெரும்பாலான ஊர்களில் ஊருக்குப் பொதுவாக பெரிய பள்ளிவாசலை மையமாகக் கொண்ட ஒரு நம்பிக்கையாளர் சபையை மரைக்கார் சபையே அதன் உறுப்பினர்கள் மத்தியில இருந்து தெரிவு செய்கின்றது.
ஆயினும் கடந்த இரு தசாப்தங்களாக அரசியல் குரோதங்கள்,தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள்,பதவி மோகம்,தஹ்வா முரண்பாடுகள் போன்ற காரணிகளால் மரைக்கார் சபையின் செயற்பாடுகள் பல ஊர்களில் மாற்றமடைந்து அல்லது இல்லாதொழிந்து காணப்படுவதோடு பல பள்ளிவாசல்கள் தன்னிச்சையாக ஊர் கட்டுப்பாடுகளுக்கு உடன்படாது செயல்பட ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக தற்காலத்தில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஊர்களில் ஒரு கட்டுப்பாடான வாழ்வொழுங்கை நிலை நாட்டுவதற்கு பள்ளிவாசல்களை மையமாகக் கொண்ட நிர்வாக அமைப்பினால் முடியாதுள்ளது.
வக்பு சபை,முஸ்லிம் கலாசார திணைக்களம் என்பன பள்ளிவாசல்களின் நடவடிக்கைளைக் கண்காணிக்கும் தத்துவங்களைக் கொண்டுள்ள போதிலும் இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் யாவும் சுயாதீனமானதும் ஊர் மக்களினதும் ஜமாஅத்தாரினதும் நிதிப் பங்களிப்புகளினூடாக இயங்கும் ஸ்தாபனங்களாகும். இவற்றின் நிர்வாகம் அவ்வூர் சம்பிரதாயங்கள் மற்றும் வழமைகளுக்கு இசைவாகவே நடைபெற வேண்டியுள்ளது. எனவே வக்பு சபையானது பள்ளிவாசல்களின் நிர்வாகம், ஊழல் மோசடி போன்ற விடயங்களில் ஈடுபடுவதைத் தடுப்பதிலேயே முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மாறாக சில சுயநலவாதிகளின் வேண்டுகோள்களுக்கிணங்க வழமையான நிர்வாக முறைகளை மாற்றியமைக்க எத்தனிக்கும் போது சமூகத்திற்குள் குழப்பம் ஏற்படுகின்றது.
அம்பாரை மாவட்டத்தில் இவ்வாறான குழப்ப நிலை பல பள்ளிவாசல்களில் காணப்படுகின்றது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களிலும் ஒரே சீரான பள்ளிவாசல் நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது மூலம் இம்மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தி அவர்களது வாழ்வொழுங்கையும் சீராக்க முடியும்.
2002ஆம் ஆண்டு அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள சம்மேளனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட போது மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களிலும் ஒரே சீரான பள்ளிவாசல் நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது ஒரு முக்கிய நோக்காகத் தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் அக்கால யுத்த சூழலிலே சம்மேளனம் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக மட்டுமே கவனம் செலுத்தக்கூடியதாக இருந்தமையால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் இக் காலத்தின் தேவையை நிறைவேற்ற உடனடியாக பள்ளிவாசல் தலைமைகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் பள்ளிவாசல்களின் நிhவாகங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மாவட்ட மட்டத்தில் விசாரித்து தீர்வு காண சம்மேளனம் தயாராகுமானால் அது பள்ளிவாசல்களின் வீண் விரயங்களையும் நீண்ட நாட்களாகத் தொடரும் வக்பு சபை வழக்குகளையும் தவிர்க்க வழிவகுக்கும்.
டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்
தலைவர், சிரேஷட பிரஜைகள் ஒன்றியம் ,சாய்ந்தமருது
.jpg)
Post a Comment