Header Ads



பள்ளேகலை சிறைச்சாலை கைதிகள் நோன்பு திறக்க ஏற்பாடு


(இக்பால் அலி)

பல்லின சமூகங்கள் மத்தியில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் முன்மாதிரி மிக்க முஸ்லிம்களாக வாழ வேண்டும் என்பதுடன் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை முஸ்லிம்கள் நாட்டிற்கு சாபக்கேடானவர்களா? என மாற்று மதத்தவர்கள்  கேள்வி கேட்கும் நிலை உருவாகி இருப்பதாகவும், அதற்கான அடிப்படைக் காரணம் முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாம் போதித்துள்ள நெறிமுறைகளை சரியாகப் பின்பற்றாத நிலையின்  காணரமாகவே ஏற்பட்டுள்ளதாகவும் என்று அஷ்ஷய்க் எம். ஜே. எம் ரிஸ்வான் மதனி  தெரிவித்தார்.

அஷ்ஷய்க் ஜே. ஏ. எஸ். எம். அஷ்ரப் அனுசரணையுடன்  பள்ளேகலை திறந்த சிறைச்சாலையின் ஏற்பாட்டில் 30 நாள்  நோன்பு திறப்பதற்கான விசேட இப்தார் நிகழ்வுக்கான ஆரம்ப வைபவம் நேற்று புதன் கிழமை 10-07-2013 நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக் கலந்து கொண்ட பள்ளேகலை திறந்த சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஏ. கே. யூ. எச். அக்பர், சிறைச்சாலையின் நலன்புரி அதிகாரி விக்கிரம ஆராய்ச்சி அஷ்ஷய்க் ஜே. ஏ, எஸ். எம். அஷ்ரப், அல்ஹாஜ் நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில உரை நிகழ்த்திய  அஷ்ஷய்க் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி  அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை முஸ்லிம்கள் நாட்டிற்கு சாபக்கேடானவர்களா? என மாற்று மதத்தவர்கள் நோக்கும் நிலை உருவாகி இருப்பதாகவும், அதற்கான அடிப்படைக் காரணம் முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாம் போதித்துள்ள நெறிமுறைகளை குறிப்பாக சாதாரண மதுப்பழக்கத்தில் கூட இஸ்லாத்தின் வழிகாட்டலை கடைப்பிடிக்காது மதுவுக்கும் போதைப்பொருளுக்கும் அடிமையாகி உள்ளனர். இஸ்லாத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட நபித்தோழர்கள் அக்கால மக்களைப் போன்று குடிப்பழக்கம், போதைப் பொருள் என்பவற்றிற்கு அடிமையாக இருந்தனர். எனினும், எப்போது மது தடை என்ற அல்குர்ஆனிய வசனம் அவர்கள் மத்தியில் ஓதிக்காண்பிக்கப்பட்டதோ அந்த நிமிடமே அவர்கள் தமது மதுக்குவளைகளை வீசி உடைத்தனர். மதுப்பாத்திரங்களை கவிழ்த்து இறை சட்டத்திற்கு மதிப்பளித்தனர். நபித்தோழர்களைப் போன்று இறைச்சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நிலை நம்மிடம் காணப்பட்டிருக்குமானால் இவ்வறான துரதிஷ்டமான சிறைவாழ்க்கைக்கு நாம் தள்ளப்பட்டிருக்க்கமாட்டோம் என்றார்.

குற்றவியல் சட்டங்கள் இலங்கை அரசால் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாற்றமாக மனிதன் உலகில் பிறந்த முதலே சட்டமும் பிறந்தது என்பது இஸ்லாத்தின் நலைப்பாடாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் குற்றமிழைத்தவர்கள்  இஸ்லாமிய சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டடு தண்டிக்கப்பட்டார்கள். குடித்தவர்கள், வெறித்தவர்கள் கசையடிகொடுக்கப்பட்டார்கள். ஒருவர் மற்றவரின் பல்லை உடைத்தற்காக அவரது பல் உடைக்கப்படவேண்டும் என்ற இஸ்லாமிய தீர்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள். 

இலங்கைக்கு இஸ்லாம் பரவியது அரபு வியாபாரிகளால்தான். அவர்கள் நம்பிக்கை, முன்மாதிரி போன்ற உயரிய பண்புகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்த காரணத்தினால் அக்கால ராஜாக்களால் மரியாதைக் கண்கொண்டு பார்க்கப்பட்டார்கள். அவர்களின் பரம்பரையில் வந்த நாம் நாட்டிற்கு சாபக்கேடாக இருப்பது பற்றி சிந்திக்க வேண்டும். 

ரமளான் என்பது அல்லாஹ் நம்மை பரிசுத்தப்படுத்தப்படுத்துவதற்காக அருளிய புண்ணிய மாதமாகும். எனவே இரவின் இறுதியில் எழுந்து அல்லாஹ்விடம் இறைஞ்சி சிறைவாசகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மன்றாடுவோம். அவனிடம் தூய இதயத்துடன் நெருங்கிப் பிரார்த்திப்பவர்களை அவன் கைவிடுவதில்லை. தவறு என்பது மனிதன்தான் செய்வான். தவறு செய்வதனுக்குத்தான் மன்னிப்பு இருக்கின்றது எனவே இஸ்லாத்தை அறிவுபூர்வமாகப் பின்பற்றி முன்மாதிரிமிக்க பிரஜைகளாக மாற முயற்சிப்போம்; என்று அவர் மேலும் தெரிவித்தார். 

1 comment:

Powered by Blogger.