மட்டக்களப்பில் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி நெறி
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் தமிழ் மொழியிலும் பொது மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கில் ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள 103 சிங்கள பொலிசாருக்கு 5 மாதமாக இடம்பெற்ற தமிழ் மொழி பயிற்சி நெறியின் இறுதி விழா இன்று மட்டக்களப்பு, கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் தமிழ் மொழி பயிற்சி நெறி பொறுப்பதிகாரி கே.ரவீச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோரின் வழிகாட்டலில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனின் அறிவுரைக்கமைய ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் சுமார் 05மாதம் இடம்பெற்ற குறித்த தமிழ் மொழி பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தில்; பல பாகங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய சுமார் 103 சிங்கள பொலிஸ் அதிகாரிகள் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து வெளியேறினர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ,மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் ஹக்மன, களுவாஞ்சிகுடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் ஜெயந்த ரத்னாயக்க, மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குனசேகர,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பொலிஸாரின் பல்வேறு மொழிகளிலான விழிப்புணர்வு நாடகங்கள், இசை நிகழ்வுகளும்,கலை கலாசார நிகழ்வுகள்,உயிர்நீத்த பொலிஸாருக்கான நினைவஞ்சலி உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
இன்று இடம்பெற்ற தமிழ் மொழி பயிற்சி நெறி நிறைவு நிகழ்வு ஆறாவது பயிற்சி நிறைவு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment