மன்னாரில் அடிக்கடி தடைப்படும் மின்சாரம் - ஷஹர் வேளையும் பாதிப்பு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மன்னாரில் அதிகாலை வேலையில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் பாவனையாளர்கள் தாம் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நாளாந்தம் அதிகாலை 3.00 மணியிலிருந்து மின்சாரம் தடைப்படுவதால் தற்போதைய நோன்புகாலத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் நேரத்தில் பெரும் அசௌகரியங்களை எதிர் கொள்வதுடன் எதிர்வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களும் மின் துண்டிப்பால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபையின் மன்னார் கிளையில் வினவியபோது மன்னாருக்கான மின் இணைப்பின் பிரதான இணைப்பில் பறய நாலங்குளத்தில் இருந்து மன்னார் வரையான பகுதிகளில் உள்ள மின்சாரத் தூண்களில் உள்ள மாபில்களில் இரவுவேளைகளில் அதிகளவான உப்பு படிவதே மின்சாரத் துண்டிப்புக்கு பிரதான காரணமாகும் என தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக தாம் தலைமையத்திற்கு பல முறை தகவல்கள் வழங்கியிருப்பதாகவும் மன்னார் கிளையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு துண்டிப்ப ஏற்படும்போது குறித்த பகுதிகளுக்குச் சென்று துண்டிப்பை சீர் செய்யச் சென்றாலும் இரவுவேளை என்பதால் அதனால் சரியான பயன் கிட்டுவதில்லையென்றும் விடிந்த பின்னரே அதனை சரியாக கண்டு சீர் செய்ய முடிகின்றது எனவும் மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தவகையில் இப்பிரச்சினைக்கு ஒரே வழி மன்னாருக்கான மின் கட்மைப்பை நிலக்கீழ் முறையில் மேற் கொள்வதேயாகும். எனவே இந்த மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் இனங்கண்டு அவற்றை அரசாங்கமும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் உரிய முறையில் சீர் செய்து கொடுக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமைச்சரின் கோட்டையே அடிக்கடி இருளில் மூழ்குகின்றதா?
ReplyDeleteகடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவரது சிஷ்யன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, மின்வெட்டு இல்லாத ஒரு நாடு நமது நாடுதான் என புகழ்ந்து பேசியது பொய்யா?
நிலக் கீழ் மின் திட்டத்தை அமுல்படுத்தினால் மன்னாரின் மின் வெட்டுக்குப் பரிகாரம் ஏற்படும் என்றால் அமைச்சர் றிஷாட் அதைச் செய்ய வேண்டியதுதானே..?
ஒரு வேளை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரச்சாரக் காலத்தில்தான் இதற்கெல்லாம் அடிக்கல் நாட்டி ஆராவாரமாக ஆரம்பிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளாரோ..?
தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளும் கூட ஒரு வகையில் வாக்குப் பறிப்புக்காக வழங்கப்படும் இலஞ்சமேதான்!
-புவி றஹ்மதுழ்ழihஹ், காத்தான்குடி-
Check the word shahar. I think it should be "Sahar".
ReplyDelete