Header Ads



அட்டாளைச்சேனையில் கல்விக்கண்காட்சி


(எஸ்.எல். மன்சூர்)

அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள அல் - ஜென்னா வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களது ஆக்கங்கள் அடங்கிய கல்விக்கண்காட்சி இன்று (04.07.2013)வித்தியாலயத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் றஊப் தலைமையில் அட்டாளைச்சேனைக் கோட்டக்கல்விப் பணிப்பாளர். எம்.ஏ.சி. கஸ்ஸாலி பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக தமன பிரதேச செயலாளரும், இப்பாடசாலையின் முன்னாள் மாணவருமான எம்.ஏ.சி. சாபிர்(ளுடுநுயுளு) அவர்களும், சிறப்பு அதிதிகளாக அக்கரைப்பற்று உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிர், ஆசிரிய ஆலோசகரான எஸ்.எல். மன்சூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் ஆக்கங்கள் கற்றலுக்கான வழிகாட்டியாக அமைந்துள்ளதை வருகை தந்திருந்த அதிகாரிகள் பாராட்டியதுடன், இவ்வாறான நிகழ்வுகள் ஊடாக மாணவர்களின் ஆக்கத்திறன் வளர்ச்சியடையவும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் அதிகரிப்பதற்கும், மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்கும் உதவியாக அமையும் என்றும் தெரிவித்தனர். குறைந்தளவு மாணவர்கள் கற்கின்ற இது போன்ற பாடசாலைகளில் இவ்வாறான கண்காட்சிகள் நடைபெறுவது பாராட்டத்தக்க விடயமாகும் என அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளரான அல்ஹாஜ். எம்.ஏ. அபுதாஹிர் தெரிவித்தார்.

மாணவர்களை ஊக்கப்படுத்தவும், கற்றல் திறனை விருத்தி செய்யவும், கற்றவற்றை காட்சிப்படுத்தவும் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களின் அடைவினை எடுத்துக் காட்டுகின்றன. இவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், அதிபர், மற்றும் பெற்றோர்கள் பாராட்டத்தக்கவர்கள் என அட்டாளைச்சேனைக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ஏ.சி. கஸ்ஸாலி தெரிவித்தார். இக் கல்விக் கண்காட்சியை பார்வையிட இப்பிரதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் ஆரம்பப்பிரிவு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றார்கள் எனப் பெரும் திரளானவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.