கால்பந்தை உதைப்பதன் மூலம் மின்சாரம் - மாணவர்கள் கண்டுபிடிப்பு
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கால்பந்தை, அமெரிக்க பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், உலக அளவில் மின்சார பற்றாக்குறை காணப்படுகிறது. இதற்காக பல்வேறு வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கால்பந்து விளையாட்டின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும், என, அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் நிருபித்துள்ளனர். இதற்கு ஏற்ப அவர்கள் கால்பந்தை உருவாக்கியுள்ளனர்.
அமைப்பு:
இந்த கால்பந்து, தண்ணீர் புகாத, "ஈ.வி.ஏ., போம்' என்னும் பொருளால் செய்யப்பட்டது. சாதாரண கால்பந்தை விட சற்று அதிக எடை கொண்ட, இதில் காற்று நிரப்பப்படவில்லை. "சாக்கெட்' என்று பெயரிடப்பட்டுள்ள, இப்பந்தில், "ரீசார்ஜ்' செய்யக்கூடிய பேட்டரியுடன் இணைக்கப்பட்ட, ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருக்கும். பந்தை உதைக்கும் சமயத்தில், பந்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள, "பென்டுலம்', பேட்டரியுடன் இணைக்கப்பட்ட ஜெனரேட்டரை இயக்கி, மின்சாரத்தை தயாரிக்கும்.
பயன்:
இவ்வாறு தொடர்ந்து அரை மணி நேரம், பந்தை உதைக்கும்போது, கிடைக்கும் மின்சாரத்தில், ஒரு சிறிய எல்.இ.டி., விளக்கை மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒளிர செய்ய முடியும். சிறுவர்கள், பெரியவர்கள் என்று யார் வேண்டுமானாலும், இப்பந்தை கொண்டு விளையாடலாம். ஒவ்வொரு அரை மணி நேர விளையாட்டிற்குப் பின், மூன்று மணி நேரம் பயன்படுத்துவதற்கான மின்சாரம் கிடைக்கும். அடுத்த ஆண்டு, இக்கால்பந்து விற்பனைக்கு வருகிறது.

Post a Comment