கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை கூரையின் மீது ஏறி நின்று போராட்டம்
கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கறுவாத் தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்யாணி திசாநாயக்க என்ற ஆசிரியையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த இடமாற்றமானது தன்னை பழிவாங்கும் செயல் என குறித்த ஆசிரியர் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் அவருக்கான இடமாற்றம் உரிய நடைமுறைகளுக்கு அமையவே வழங்கப்பட்டதாக கல்லூரி அதிபர் உபாலி குணசேகர தெரிவித்தார். பாடசாலைகளில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் இருப்பார்களாயின் அவர்களின் விபரங்களை கல்வியமைப்பு கோருவது வழமையான விடயமாகும்.
இதன்படி, வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் குறித்த ஆசிரியையின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அதிபர் குறிப்பிட்டார். எனினும், தமது இடமாற்றத்தை அவர் விரும்பாத காரணத்தினால் அதனை ரத்து செய்யக் கோரி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment