ஏறாவூர் அக்மீர்வத்தை முஸ்லிம்கள் மீள் குடியேறுவதில் தடைகள்..!
(அப்துல்லாஹ்)
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் 1979 ஆண்டு வழங்கப்பட்ட காணிகளில் முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதில் பல சிக்கல்கள் தோன்றியிருப்பதாக குடியிருப்பாளர்கள் முறையிடுகின்றார்கள்.
1973 ஆம் காணிக் கச்சேரி நடத்தப்பட்டு அதன்படி ஏறாவூர் அக்மீர்வத்தை அல்லது சவுக்கடித் தோட்டம் எனுமிடத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வினால் காணி அளிப்பு சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் ஏறாவூரைச் சேர்ந்த 21 முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு சுமார் 30 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
மேற்குறித்த காணித் துண்டுகளுக்கு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜெயவர்தனவினால் கையொப்பமிடப்பட்ட காணி உறுதிப்பத்திரமும் அப்போதே வழங்கப்பட்டிருந்தது.
பயங்கரவாத வன்முறைகள் காரணமாக 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறித்த காணித்துண்டுகளைப் பராமரிக்கக் கூடிய சூழ்லை இல்லாததினால் குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள். எனினும் கிழக்கில் அமைதிச் சூழ்நிலை திரும்பியதன் பின்னர் அக்மீர் வத்தை கிராமத்தவர்கள் மீண்டும் தங்களது பழைய இடங்களுக்குத் திரும்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது நிர்வாக ரீதியில் பல்வேறு தடைகள் தங்களுக்கு விதிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதனிடையே குறித்த காணித்துண்டுகள் 1993 ஆம் ஆண்டு வேறு 19 பேருக்கு மிகவும் ரகசியமான முறையில் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கின்றது. இந்த விடயம் குறித்து பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் மாகாணக் காணி ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 'மேற்படி காணியானது சவுக்கடிக் கிராம உத்தியோகத்தர் பிரிவில் சவுக்கடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்காணிக்கு 1973 ஆம் ஆண்டு மட்டக்களப்பு கச்சேரியால் காணிக் கச்சேரி நடத்தப்பட்டு 21 முஸ்லிம் பெயர்வழி காரர்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் 1979 ஆம் ஆண்டின் காணி அளிப்பு சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் அளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இக்காணிக்கான நில அளவைத் திணைக்களத்தின் வரைபட இலக்கம் பிபிமட 670 என்பதாகும். எனினும் 1993 ஆண்டு இடம்பெற்ற பிறிதொரு காணிக்கச்சேரி மூலம் 19 பெயர் வழிகாரர்களுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் வரைபட இலக்கம் மட.ஈஆர்பி 9899 என்பதாகும். எனவே இக்காணிப் பிணக்கைத் தீர்த்து வைப்பதற்கான மேல் நடவடிக்கைக்காக மட்டக்களப்புக் கச்சேரி மாவட்டக் காணிக் குழுவிற்கு கடந்த வருடம் ஏப்ரல் 13 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. ஆயினும் இதுவரை பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இதனிடையே இக்காணி யாரிடமிருந்து சுவீகரிக்கப்பட்டதோ அந்நபரின் பிள்ளைகள் மேற்குறித்த காணியை மீண்டும் தங்களுக்கே வழங்குமாறு கேட்டுள்ளனர். எனவே இக்காணிப் பிரச்சினையானது சமூகங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக இருப்பதனால் இதனைத் தீர்த்து வைப்பதற்கான ஆலோசனையை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.' என்று தனது கடந்த ஜுன் 3 ஆம் திகதிய (2013.06.03) கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு, மாகாணக் காணி ஆணையாளர், ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர், பொலிஸ் ஆகிய தரப்பினரிடம் தாங்கள் முறையிட்;டுள்ளதாக ஏறாவூர் முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதனிடையே இக்காணிக்கு உரிமை கோரும் எந்தவொரு தரப்பும் 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்படி காணியைப் பராமரிக்கவில்லை என்பதும் அதனால் இந்த அக்மீர் வத்தை சவுக்கடித் தோட்டம் தற்சமயம் காடுமண்டிக் கிடக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Post a Comment