(Thnaharan) சவூதியிலுள்ள வெளிநாட்டு வீட்டு பணியாளர்களின் உரிமையை பாதுகாக்கும் புதிய சட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. எனினும் இந்த பணியாளர்கள் இஸ்லாத்தை மதிப்பதோடு அவர்களது முதலாளிமாருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
சவூதி அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களின்படி பணியாளர்களுக்கு எந்த தாமதமும் இன்றி மாதாந்தம் சம்பளம் வழங்க தொழில் வழங்குனர் இணங்க வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாக சவூதி தொழில்துறை அமைச்சர் அப்துல் பாகிஹ் குறிப்பிட் டுள்ளார்.
இதில் வீட்டுப் பணியாளருக்கு பொருத்தமான தங்குமிட வசதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஒருநாளைக்கு குறைந்தது 9 மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நோய் விடுப்பு காலத்திற்கு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் இரண்டு ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கு நாடு திரும்ப வசதியாக சம்பளத்துடன் ஒருமாத விடுமுறை வழங்கவும் புதிய சட்டம் கோரியுள்ளது.
அதேபோன்று நான்கு ஆண்டுகளின் பின் சேவையிலிருந்து விலகிச் செல்பவர்களுக்கு ஒரு மாத சம்பளத்திற்கு சமமான கொடுப்பனவு வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த புதிய சட்டத்தில் வீட்டுப்பணியாளர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும் தொழில் வழங்குனர் மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கவும் கோரப்பட்டுள்ளது.
ஒரு வீட்டுப் பணியாளர் தமக்கு வழங்கப்படும் வேலையை மறுக்க உரிமை இல்லை. அல்லது நியாயமான காரணமின்றி வேலையில் இருந்து வெளியேறவும் உரிமையில்லை. எண்ணெய் வளம் கொண்ட சவூதி அரேபியாவில் சுமார் 8 மில்லியன் வெளிநாட்டு பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்கின்றனர். எனினும் சவூதியில் உள்ள வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் எதுவும் வெளியிடவில்லை.
Post a Comment