Header Ads



ஈரானுக்கும், சிரியாவுக்கும் கடும் எதிர்ப்பு

ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு ஈரான், சிரியா போட்டியிட முடிவு செய்துள்ளன. இதற்கு கண்காணிப்பு அமைப்பு நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜெனிவாவை தலைமை இடமாக கொண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செயல்படுகிறது. அதில் 14 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நியூயார்க் நகரில் நடக்க இருக்கிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்.

இதில் 4 உறுப்பினர்கள் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

இந்த 4 உறுப்பினர் பதவிக்கு சீனா, ஈரான், ஜோர்டான், மாலத்தீவு, சவுதி அரேபியா, சிரியா, வியட்னாம் ஆகிய 7 நாடுகள் மோதுகின்றன. இந்த தகவலை ஐ.நா.சபை தூதர் வெளியிட்டார்.

நியூயார்க் நகரிலுள்ள ஈரான், சிரியா தூதர்கள் இதுபற்றி கருத்து கூறவில்லை. கடந்த 2011-ம் ஆண்டிலும் சிரியா போட்டியிட முயற்சி செய்து, அரபு நாடுகளின் எதிர்ப்பை அடுத்து கடைசியில் வாபஸ் பெற்றது.

தற்போது மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் ஈரானும், சிரியாவும் களம் இறங்க இருப்பது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிபுணர்களை கவலை அடைய வைத்துள்ளது. ஏன்னென்றால் சிரியாவில் நடைபெறும் கிளர்ச்சியில் சுமார் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபையே உறுதி செய்திருக்கிறது.

இதுபற்றி தூதர் ஒருவர் கூறுகையில், ‘இந்த 2 நாடுகளும் போட்டியிடுவதை மற்ற நாடுகள் அனுமதிக்காது’ என நம்பிக்கை தெரிவித்தார். இன்னொருவர் கூறுகையில் இந்த தேர்தல் தமாசாக(காமடி) உள்ளது என்றார். ஜெனிவாவை சேர்ந்த ஐ.நா.கண்காணிப்பு குழு ஆலோசகர் ஹில்லேல் நெவூர் கருத்து கூறுகையில், ‘சொந்த நாட்டு மக்களையே கொன்று, சித்ரவரை செய்கிற நாடுகளை எப்படி உலக மனித உரிமை நீதிபதிகளாக்க இயலும். ஆகவே இந்த நாடுகளின் வேட்பாளருக்கு எதிராக நாங்கள் போராடுவோம்’ என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு தேர்தலில் பெலாரஸ், இலங்கை, அஜெர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர். அதுபோல தற்போது ஈரான், சிரியாவை எதிர்க்க வியூகம் வகுக்க தொடங்கி விட்டார்கள்.

No comments

Powered by Blogger.