அமெரிக்கா உளவு பார்ப்பு - ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் இனிமேல் 'டைப் ரைட்டர்'கள்
சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் இணைய தளங்களை அமெரிக்கா உளவு பார்ப்பதாக அமெரிக்க உளவு துறை முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்நோடென் பகிரங்கமாக தகவல் வெளியிட்டார். இதனால் அமெரிக்கா மீது பல நாடுகள் கோபத்தில் உள்ளன. ராணுவ ரகசியத்தை வெளியிட்டதாக குற்றம் சாட்டி ஸ்நோடென்னை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. அவர் இப்போது மாஸ்கோவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையில் தங்களது சர்வர்களையும், இணைய தளங்களையும் எப்படி பாதுகாப்பது என்று சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
ஏற்கனவே, கூகுள் இணையதளத்தில் ‘எர்த்’ சேவைக்காக தங்களது நாட்டில் எடுத்த புகைப்படங்களை அழிக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவும் கூகுள் இணையதளத்தின் சர்வர்கள் தங்களது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. எனினும், கம்ப்யூட்டர் சங்கேத குறியீடுகளை படித்துவிட கூடிய சாப்ட்வேர்கள் அமெரிக்காவில் தாராளமாக வந்துவிட்டன. எனவே இணையதளத்தில் தங்களது ரகசியங்களை இனிமேல் பாதுகாக்க முடியாது என்ற முடிவுக்கு ரஷ்யா வந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், 'இணைய தளங்களில் நாட்டின் முக்கிய ஆவணங்கள் திருடப்படுவதை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கிய குறிப்புகளை மீண்டும் பழைய முறையில் டைப் ரைட்டர் மூலமாக அச்சடித்து அவற்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக அதிபர் மாளிகை ஆவணங்களை அச்சடிக்க 20 டைப் ரைட்டர்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment